கதைகளை தேர்ந்தெடுப்பதில் தனித்துவமாக இருப்பதும், இந்த கதை தனக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதாக நம்புவதும் தான் ஒரு கலைஞரை அடுத்த கட்டத்துக்கு தள்ளுகின்றன. இந்த அம்சத்தில், நடிகர் வைபவ் இந்த மந்திரத்தால் தனது திரை வாழ்க்கையை வளர்த்து வருகிறார். ஏற்கனவே தனது திரைப்படங்களின் வரிசை மூலம் ஒரு ஆர்வத்தை வைபவ் உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய வரவாக “டாணா” திரைப்படமும் சேர்ந்திருக்கிறது. ஜூலை 22 வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசர், நேர்மறையான வரவேற்பை பெற்றது. தயாரிப்பாளர்களே தங்கள் எதிர்பார்ப்புகளை இது தாண்டியதில் ஆச்சரியப்பட்டனர்.
கதைசொல்லலை காட்டிலும், ஒரு திரைப்பட இயக்குநரின் திறமை டீசரை வைத்து மதிப்பிடப்படுகிறது. இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி அதை உண்மையாக நிரூபித்து விட்டார். 1 நிமிடம் 18 வினாடிகள் ஓடும் டீசரில், 39 வினாடிகள் கதை களத்தில் காமெடி மற்றும் காதல் அம்சங்களை நிறுவி, அதன்பிறகு வரம்பற்ற நகைச்சுவையுடன் கூடிய கதையில் உண்மையான மோதலின் களத்தை அமைக்கும் ஒரு திருப்பம் அற்புதமாக தொகுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நாயகனின் பிரச்சினைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் யோகிபாபுவின் நகைச்சுவையான வரிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளன. குறிப்பாக “இந்த குரலை வச்சிக்கிட்டு நீ பாடுனா, கிராண்ட் ஃபினாலே வரைக்கும் போகலாம், சின்னக்குயில் சித்ரா கிட்ட நான் பேசுறேன்” என்ற இறுதி வசனம் பார்வையாளர்களால் மிகவும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டது.
இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவராஜ் சுப்ரமணி எழுதி இயக்கியுள்ள “டாணா” திரைப்படத்தை, நோபல் மூவீஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்ஷ்மி கலைமாமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். எச்.சனாவுல்லா கான், பிரசாந்த் ரவி, எஸ்.சந்தோஷ் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். விஷால் சந்திரசேகர் (இசை), சிவா ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு), பிரசன்னா ஜி.கே.(படத்தொகுப்பு), பசார் என்.கே. ராகுல் (கலை), வி.கோட்டி (சண்டைப்பயிற்சி), கு. கார்த்திக் & தனிக்கொடி (பாடல்கள்), கீர்த்தி வாசன் (உடைகள்), சதீஷ் (நடனம்), டி.உதயகுமார் (ஆடியோகிராபி), எஸ்.ராதாகிருஷ்ணன் (இணை இயக்குநர்), ஆர்.மூர்த்தி (வி.எஃப்.எக்ஸ்), தண்டபாணி (தயாரிப்பு நிர்வாகம்), வி.சுதந்திரமணி (நிர்வாக தயாரிப்பு), அருண் கே விஸ்வா (லைன் புரொடியூசர்)ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.