‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்பட விமர்சனம்

தர்ஷன் , காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் நடித்துள்ளனர்.எழுத்து இயக்கம் – டி. ராஜவேல்,ஒளிப்பதிவு :- எம்.எஸ். சதீஷ், இசை – ராஜேஷ் முருகேசன்,
படத்தொகுப்பு ஏ.நிஷார் ஷரேஃப் ,கலை :- என்.கே.. ராகுல் ,சண்டைக்காட்சி: தினேஷ் காசி ,நடன இயக்குநர்: அசார் ,
நிர்வாகத் தயாரிப்பாளர்: பிரவீன் K.P. சாமி ,கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: எஸ்.பி.சக்திவேல்,இணைத் தயாரிப்பாளர்- கலையரசு,தயாரிப்பாளர்: சிவகார்த்திகேயன், எஸ்.விஜய பிரகாஷ்.

தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் திருமணமான இளம் ஜோடிகள்.அனைவரையும் போலவே ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது அவர்கள் கனவு .அதன்படி ஒரு அடுக்ககக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள்.அந்த வீட்டில் வேறு யாரோ தங்கி இருப்பதன் தடயங்கள் தெரிகின்றன. குழம்பிப் போகிறார்கள்.நம் வீட்டில் இருப்பது யார் என்று அவர்களுக்குக் குழப்பம்.’யார்ரா நீங்கல்லாம்?’ என்றால் ‘யார்ரா நீங்கல்லாம்’ என்று எதிர்க் குரல் வருகிறது.
ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் உள்ள குழப்பத்தை அவர்களே புரிந்து கொள்ள நினைக்கிறார்கள்.அவர்களுக்குள் சுவரின் மூலம் ஒரு தகவல் தொடர்பு நடக்கிறது.நீங்கள் யார் என்று கேட்கும் போது அதே சுவரில் பதில்கள் வருகின்றன.அதன்படி அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி, சிறுவயது மகன் என என வாழ்ந்து வருகிறார்கள். ஒரே பிளாட்டில் இரண்டு குடும்பங்கள். ஆனால் ஒருவரை ஒருவருக்குத் தெரியாது.என்ன இது? பேய்ப் படமா ?  தேவதைக் கதையா? என்றால் அறிவியல் என்கிறார்கள் அதற்கு ஒரு தியரியைச் சொல்கிறார்கள்.இவர்கள் வாழ்கிற காலத்தில் பத்தாண்டுகள் வேறுபாடு இருக்கிறது. இது என்ன குழப்பம் என்றால்,அவர்களைச் சுற்றிச் சில ஆச்சரியமான அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் என்ன? அதன் பின்னணியில் இருப்பது என்ன ? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதுதான் ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம்.

ஆன்மீகம், தத்துவம் போலவே அறிவியல் சார்ந்த சில கேள்விகளுக்கும் விடை இல்லை .அப்படி ஒன்றை எடுத்துக் கொண்டு அதன் தாக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.படத்தின் முன்னோட்டத்தை பார்த்து எளிதில் எடை பார்த்து விடுபவர்கள், படத்திற்கு உள்ளே நுழைந்தால் வேறொரு அனுபவமாக இருக்கிறது.அப்படி ஒரு புதிய பாதையில் இந்தப் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் டி. ராஜவேல்.

படத்திற்குள் மாபெரும் அறிவியல் ஆச்சரியத்தை ஒளித்து வைத்துள்ளவர், அதைக் காட்சிகளால் சுவாரஸ்யப் படுத்தியுள்ளார். அவர் கூறும் அறிவியல் உண்மை இறுதிப் பார்வையாளன் வரை போய் சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.மற்றபடி இது ஒரு புதிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.

கதையின் நாயகர்களாக பங்கு போட்டு நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்குக் கொடுத்த வேலையை குறையின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்கள். தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தாங்கள் ஏற்றுள்ள துணைப் பாத்திரங்களின் வாயிலாக திரைக்கதை ஓட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்கள். 

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இந்த அறிவியல் சார்ந்த கதைக்கு ஏற்ப பயணம் செய்துள்ளது.கதையில் நிலவும் புதிர் தன்மைக்கு ஏற்ற அவரது பின்னணி இசை விளக்க உரை எழுதுகிறது.அதன் மூலம் பார்வையாளர்கள் அனைவரும் அந்த வீட்டின் எதிரே இருப்பது போன்ற உணர்வைத் தந்து இருக்கிறார்.

ஒரு வீடு இரண்டு கோணங்களில் இரண்டு பார்வைகள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் தன் ஒளிப்பதிவில் அந்த வேறுபாட்டை உணர வைத்துள்ளார். பெரும்பாலும் இரண்டு வீடு சார்ந்த காட்சிகளாக இருந்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு அவரது ஒளிப்பதிவு உள்ளது.

குழப்பம் நேர வாய்ப்பு இருக்கிற இந்த கதையை தெளிவாகத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் .

எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல், இதுவரை யாரும் தொடத் தயங்கும் ஒரு அம்சத்தை எடுத்துப் படமாக்கி இருக்கும் துணிச்சலைப் பாராட்டலாம்.நம்ப முடியாத ஒன்றை நம்ப வைக்கும் விதத்தில் எடுத்துக்காட்டி வெற்றி பெற்றுள்ளார்.அதனால்தான் தயாரிப்பில் கை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன் .குழப்பங்களுக்கான காரணங்களை உச்சகட்ட காட்சிகளில் வசனங்கள் மூலம் இயக்குநர்  தெளிவுபடுத்த முயன்று இருப்பதைக் காட்சிகளாக்கிக் காட்டி இருந்தால் அவரது கருத்து மேலும் வலுப்பட்டு இருந்திருக்கும்.

மொத்தத்தில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ புதிரான முயற்சியாக இருந்தாலும் புதிய முயற்சியாக இருப்பதற்காகப் பாராட்டலாம்.