குரு லக்ஷ்மணன், பாடினி குமார் ,சுமித்ரா தேவி, அனீத் யாஷ் பால், யோகலட்சுமி, இனியாள், ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீனா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா, சீனு நடித்துள்ளனர். சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். இசை மைக்கேல் ஆகாஷ். தயாரிப்பு எலிசியம் மேக்சிமா ஆலோ மீடியா. வெளியீடு ஜீ 5.
உடலில் உள்ளுறுப்புகள் செயல்பாட்டை, கோளாறுகளை, பழுதுகளைக் கண்டுபிடிப்பதற்குச் சோதனை எந்திரங்கள் வந்துவிட்டன. அதேபோல ஒருவர் மனதில் உள்ள காதலைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு எந்திரத்தை கண்டுபிடிக்கிறார் நாயகி பாடினி குமார்.ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் காதலின் சதவீதத்தை அந்த கருவி துல்லியமாகக் கணிக்கிறது.
இந்த நிலையில், நாயகி பாடினி குமாரை நாயகன் குரு லக்ஷ்மன் சந்திக்கிறார். அவர் பாடினி கருவி பற்றி அறிந்து அதை ஏளனம் செய்து கேலி செய்கிறார்.அதை நம்ப முடியாது என்றும் இதனால் காதலைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் தான் நிரூபிக்கிறேன் என்கிறார்.நாயகி காதலிக்க வைக்கவும் சவால் விடுகிறார்.அந்தச் சவாலில் நாயகன் வெற்றி பெற்றாரா தோல்வி அடைந்தாரா என்பதை அறிவியல் பார்வையிலும் உளவியல் சார்ந்தும் கதையாகப் பின்னி உருவாக்கியுள்ளது தான் ‘ஹார்டிலே பேட்டரி’.
ஒருவர் மனதில் உள்ள காதலை அறியும் எந்திரம் என்பது ஒரு சுவாரசியமான கருப்பொருளாக
‘ஹார்டிலே பேட்டரி’ இணையத் தொடருக்கு அமைந்துள்ளது.இது வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு ஒரு முயற்சியாக தோன்ற வைக்கிறது.அறிவியல் சார்ந்த ஏராளமான ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன .அந்த பின்னணியில் உருவாகி இருக்கும் இணையத் தொடராக இதைக் கூறலாம்.
நாயகியாக வரும் பாடினி குமார், நாயகனாக வரும் குரு லக்ஷ்மன் இருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர் இருவருக்கிடையே நிலவும் ரசாயனம் நன்கு வேலை செய்துள்ளது.அவர்களுக்கு இடையே நிகழும் உரையாடல்கள் உணர்வுப் பரிமாற்றங்கள் எதார்த்தமாக உள்ளன.
சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலட்சுமி, இனி யாள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு என மற்ற துணைப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதையோடும் காட்சிகளோடும் பொருந்துகிறார்கள்.
கூலி செளந்தரராஜனின் ஒளிப்பதிவு, மைக்கேல் ஆகாஷின் இசை, நிசாமின் படத்தொகுப்பு என அனைத்துவிதமான தொழில்நுட்ப கலைஞர்களும் ஒத்திசைந்து தங்கள் பணி மூலம் தொடருக்கு மெருகூட்டியுள்ளார்கள்.
இந்த கதையை பெரிய பொருட்செலவிலும் எடுத்திருக்கலாம். ஆனால் அளவான பொருட் செலவில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதையை வித்தியாசமான முயற்சியாக மட்டும் இன்றி, அறிவியலோடு சேர்த்து சொல்லி ரசிக்க வைக்கிறார். சைபர் யுகமான தற்போதைய காலகட்டத்தில் இந்த கதையை நம்பும்படியாக உருவாக்கியுள்ளார்.உணர்வுகளைச் சோதனை செய்யும் ஒரு கருவி கண்டுபிடிக்கப்படுவது சாத்தியமே என்றும் கூறியுள்ளார்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கருவிகளுக்கெல்லாம் எட்டாதது, எந்த எந்திரத்தாலும் கண்டுபிடிக்க முடியாதது காதல் என்கிற உணர்வு என்பதையும் கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஹார்டிலே பேட்டரி’ இதயத்தை தொடும்.பார்ப்பவர்களுக்கு இனிய மின் அதிர்ச்சி தரும்.


