பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜே எஸ் கே , சிங்கம்புலி, எஸ் கே ஜீவா ,சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பாபு மனோஜ் நடித்துள்ளனர்.
ஜே எஸ் கே எழுதி தயாரித்து இயக்கி உள்ளார். டி கே இசையமைத்துள்ளார்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் வகையிலும், அது சார்ந்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் அமைப்பதாக நினைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் அதில் கிளுகிளுப்புகளும் காரம் நிறைந்த வணிக மசாலாக்களும் சேர்ந்து படத்தை கவர்ச்சிப் படமாக மாற்றியுள்ளது.
ஒரு போலீஸ் புகார் வருகிறது அதில் நாயகன் பாலாஜி முருகதாஸைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் அளிக்கிறார்கள்.
புகாரைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை செய்கிறது.போகப்போக விசாரணையில் காணாமல் போன பாலாஜி,ஒரு பிசியோதெரபிஸ்ட் ஒரு அப்பாவி அல்ல அடப்பாவி என்று அதிர்ச்சியூட்டும் அளவிற்குப் பெண்கள் விஷயத்தில் மோசமானவராக இருக்கிறார்.பல பெண்களை காதல் என்று வலைவீசி காமம் என்கிற புதை குழிக்குள் தள்ளி விட்டது தெரிகிறது.தனது வலையில் விழுந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிகிறது .அது மட்டுமல்லாமல் தவறான வேறு சிலவற்றுக்காகவும் பயன்படுத்தியது தெரிய வருகிறது.
தனது விசாரணையை தரிதப்படுத்துகிறது காவல்துறை, தேடலைத் தீவிரப்படுத்துகிறது.போகப் போக தெரிகிற உண்மைகள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன.உண்மையில் காணாமல் போனவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. போலீஸ் தனது தேடுதலில் பாலாஜியைக் கண்டுபிடித்ததா?அவரது வலையில் விழுந்த பெண்கள் யார் யார்?அவர்களை பாலாஜி வீழ்த்தியது எப்படி?
போன்ற கேள்விகளுக்கான பதில்களைக் கிளுகிளுப்பாகச் சொல்வதே ‘ஃபயர்’.
இந்தப் படம் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி உள்ளது. நாகர்கோவிலில் இதே மாதிரி பிரபலமான கொடூரன் காசி என்பவன் கதையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.நாயகன் பாலாஜி அந்த எதிர்மறைக் கதாபாத்திரத்தில் பாத்திரத்தின் தன்மை பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக நடித்துள்ளார் .எனவே அந்த பாத்திரத்திற்கான நியாயத்தைச் செய்துள்ளார்.
சரவணன் மீனாட்சி மூலம் புகழ்பெற்ற சின்னத்திரை நாயகி ரச்சிதா மகாலட்சுமி,குடும்பப்பங்கான விதத்தில் நடித்து அறியப்பட்டவர்.இதில் தைரியமாகக் களம் இறங்கி கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்.அவரது கவர்ச்சிக் காட்சிகளில் தீ பறக்கிறது.மழையில் நனையும் காட்சிகள், வெள்ளை உடை காட்சிகள் அதை மெய்ப்பிக்கின்றன.
சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் என மற்ற மூன்று நாயகிகளும், ரச்சிதாவுக்கு சளைத்தவர்கள் இல்லை, என்பதை நிரூபிக்கும் வகையில் அந்தரங்கக் காட்சிகளில் சிந்து பாடுகிறார்கள்.கவர்ச்சி ரசிகர்களுக்குச் சாமரம் வீசுகிறார்கள்.
படத்தை இயக்கி தயாரித்திருக்கும் ஜே.எஸ்.கே, ஏற்கெனவே திரையில் ரசிகராக முகம் காட்டி ஒரு அடையாளம் பெற்றவர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு இயக்கத்தில் நடிக்கும்போது தனது பாத்திரத்திற்கு அவர் மேலும் அழுத்தம் காட்டி இருக்கலாம்.
காணாமல் போன வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பிறகு அது பாலியல் வன்கொடுமை வழக்காக மாறுகிறது. அப்போது விசாரணை சூடுபிடிக்கிறது. ஆனாலும், ஜே.எஸ்.கே-வின் நடிப்பில் மேலும் அடர்த்தி காட்டி இருந்தால் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.
சில இடங்களில் மிகை நடிப்பு எட்டிப் பார்த்தாலும் சிங்கம் புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.
இசையமைப்பாளர் டிகே-வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ற பயணம்.
ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி-யின் கேமரா கவர்ச்சி காட்சிகளையும் படுக்கையறைக் காட்சிகளையும் தாராளமாகக் காட்டிப் பார்வையாளர்களைச் சூடேற்றுகிறது.
படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார், படத்தின் கிளுகிளுப்பான காட்சிகளில் மயங்கி இருப்பார் போலும். எனவே வெட்டுகளை மறந்து நிதானமாக அந்தக் காட்சிகளைக் காட்டுகிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தங்களை அவர்கள் எப்படிப் பாதுகாப்பு பாதுகாத்துக் கொள்வது என்பதைப் பற்றித்தான் படம் பேசுகிறது.எஸ்.கே.ஜீவாவின் வசனங்கள் அதைப்பற்றி அழுத்தமாகப் பேசாதது ஒரு குறை.
உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு ஜே.எஸ்.கே எழுதி இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தின் பின்னணியோ அல்லது இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழியையோ நன்றாகச் சொல்லி இருக்கலாம்.
படம் வெற்றி பெறும் வகையில் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்கிற ஒரே கொள்கையில் காமத்தை அதிகம் தூவி,முழுக்க முழுக்க காம வடிவிலான திரைக்கதை மூலம் ரசிகர்களை குஷிப்படுத்த இயக்குநர் ஜே.எஸ்.கே முயற்சித்திருக்கிறார்.
முதல் பாதியில் காணாமல் போன நாயகன், அவரைத் தேடும் காவல்துறை, கண்டுபிடிக்கப்படும் பாலியல் குற்றங்கள் என்று விறுவிறுப்பு இருக்கத்தான் செய்கிறது.
படத்தின் மறுபாதியில் அவற்றைச் சரியாக கதைநிர்வாகம் செய்யாமல் மெதுவாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் ஜே.எஸ்.கே, இரண்டாம் பாதியில் நாயகன் நான்கு நாயகிகள் என பார்வையாளர்களைக் குளிர்வித்து, மகிழ்வித்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஃபயர்’ கவர்ச்சி மசாலாப் பிரியர்களுக்கு ஏற்ற படம்.