‘ஃப்ரைடே’ திரைப்பட விமர்சனம்

மைம் கோபி, கே.பி.ஒய் தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் , சித்ராசேனன், சித்து குமரேசன் நடித்துள்ளனர். ஹரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு – ஜானி நாஷ்,இசை – டுமே, படத்தொகுப்பு – பிரவீன் எம்,கலை – கார்த்தி லோகா,சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி, டக்டம் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அனிஷ் மாசிலாமணி தயாரித்துள்ளார்.விநியோகம் – ஷிவானி ஸ்டுடியோஸ்.

மனிதனின் இழிவான உணர்ச்சிகளான வன்மம் துரோகம் போன்றவற்றைப் பின்னி இந்தக் கதை உருவாகி உள்ளது.

நாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒரு கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.ஆனால் விதி விளையாடுகிறது.தீனா அசந்தர்ப்பமாகத் தாக்குதலுக்காளாகிறார். அவரைக் காப்பாற்ற நடக்கும் முயற்சியில் அனிஷ் மாசிலாமணி அவருடன் அடைக்கலம் ஆகிறார். பிறகு அவரிடம் இருந்து தப்பித்து, தனது ஆட்களுடன் தன்னைக் கொலை செய்ய பின் தொடர்பவர்களைத் தேடுகிறார்கள். மறுபக்கம், தீனாவும் அனிஷ் மாசிலாமணியுடன் இருந்து கொண்டே அவரைப் போட்டுத்தள்ளத் திட்டமிடுபவர்களுக்கு உதவி செய்கிறார்.அனிஷ் மாசிலாமணி யாரை,கொலை செய்ய முயல்கிறார்? எதற்காக?துரோகங்களை அவர் எதிர்கொள்கிறாரா? முடிவு என்ன? என்பதை வன்முறை நிறைந்த பின்னணியோடு கூறும்  120.46 நிமிடங்கள் கொண்ட திரைப்படம்தான் ’ஃப்ரைடே’.

வன்முறை இருபுறமும் கூர்மையுள்ள ஆயுதம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையில் நுழைந்தவர்கள் மீள்வதே கிடையாது . அப்படித்தான் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அந்த மீள முடியாத வன்முறைச் சகதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த இருண்ட உலகத்தைச் சொல்ல முயன்று உள்ளது படம்.அதற்கான திரைக்கதை அமைப்பும் சம்பவங்களை படமாக்கி இருக்கும் விதமும் படம் பார்ப்பவர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கிறது.

அனிஷ் மாசிலாமணி கதையின் நாயகனாக நடித்துள்ளார். தோற்றத்தில் எளிமை மிகைப் படாத நடிப்பு என்று அந்த மணி பாத்திரத்தைப் பதியச் செய்துள்ளார்.தான் செல்லும் பாதை தவறானது என்று உணர்ந்து தனது கடந்த காலத்தை எண்ணி வருந்தி தன் தம்பிக்கு அந்த நிலை வரக்கூடாது என்று வருந்தும் காட்சியில் நல்ல நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.

படத்தின் தொடக்கத்தில் சாதாரணமாக முகம் காட்டும் கே.பி.ஒய் தீனா, ஒரு கட்டத்தில் அவர் தனக்கான இடத்தை விஸ்தரித்துக் கொண்டு படத்தின் திருப்பத்திற்குத் துணை செய்கிறார்.பல படங்களில் நடித்துள்ள அனுபவ நடிகரான மைம் கோபி தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல படத்திற்கும் பலம் சேர்த்துள்ளார்.

பிற துணைப் பாத்திரங்களில் வருகிற ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் ஆகியோர் ஆகியோர் குறுகிய காலத்தில் வந்தாலும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்குத் துணை செய்துள்ளார்கள்.

கேங்க்ஸ்டர் க்ரைம் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படமானது நான் லீனியர் பாணியில், ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் நெய்தல் நிலப் பகுதியான குளச்சல் துறைமுகம் மற்றும் அதன் சுற்று வட்டார கடற்கரைப் பகுதிகளைச் சுற்றிப் படமாக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்க்கையில் நம்பிக்கை அற்ற ஒரு நிலை ஏற்படும் போது யார் நண்பன் யார் துரோகி என்கிற குழப்பம் வரும் .அப்படித்தான் இந்தப் படத்தின் அனைத்து பாத்திரங்களும் சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.

இந்தத் திரில்லர் கதையில் எளிமையான படப்பிடிப்பிடங்களில் படப்பதிவு செய்து அந்த உணர்வைக் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ் .பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் காட்சிக்கான கோணங்களிலும் ஒளி அமைப்பிலும் நிறைவான பணியாற்றி இருக்கிறார்.

படம் தொடங்கியது முதல் பரபரப்பு காட்டுகிற பயணத்தில் பாடல்கள் தேவை இல்லை என்று கருதி பின்னணி இசையில் கலக்குகிறார் இசையமைப்பாளர் டுமே.

பிரவீன்.எம்-ன் படத்தொகுப்பு இந்த வன்முறை படத்திற்கு விறுவிறுப்பு கூட்டுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், சாதாரண கதையை எடுத்துக் கொண்டாலும் விறுவிறுப்பான காட்சிகளின் அமைப்பினால் ஒரு முழுமையான தில்லர் அனுபவத்தைக் கொடுத்துள்ளார்.

கையில் ஆயுதங்களுடன் வன்முறை வெறிகொண்டு திரியும் ரவுடிகளின் வாழ்க்கையில் இருக்கும் பிற உணர்வுகளான குடும்பப் பாசம், அபிலாசைகள், காதல் போன்றவற்றையும் காட்டியுள்ளார்கள்.அந்த வகையில் ஒரு த்ரில்லர் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி வெங்கடேஷ்.

மொத்தத்தில், ‘ஃப்ரைடே’ திரில்லர் ரசிகர்களுக்கான படம்.