உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருக்கும் ஃப்ரோஷன் படத்தொடரின் இரண்டாம் பாகம் இந்தியாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என நான்கு மொழிகளில் நவம்பர் 22ல் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இப்படத்தின் தமிழ் பதிப்பில் பணிபுரிந்துள்ளார்கள். இப்படத்தின் முன்னோட்டத்திற்கான பத்திரிகை சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், ஹீரோயின் கதாப்பாத்திரமான எல்ஷாவிற்கு பின்னணி பேசியிருக்கும் ஸ்ருதிஹாசன், எல்ஷாவின் தங்கை பாத்திரமான ஆன்னாவிற்கு பின்னணி பேசியுள்ள திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்
பாடலாசிரியர் விவேக் படம் குறித்து பேசியதாவது…
உலகின் பிரபல நிறுவனமான டிஸ்னியுடன் இப்படி ஒரு அற்புதமான படத்தில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. அதிலும் ஸ்ருதி ஹாசன், திவ்ய தர்ஷினி போன்ற திறமை மிக்க ஆளுமைகளுடன் பணிபுரிந்ததில் மேலும் மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பின்னணி குரலால் கதாபாத்திரங்களுக்கு தத்ரூபமாக உயிரூட்டியுள்ளார்கள். படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் பலருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறார்கள். நான் முதல் முறையாக வசனம் எழுதும் படமிது. நாம் வாழ்வில் பல சிறு விசயங்களை இழந்திருப்போம் ஒரு கட்டத்தில் நாம் நம்மையே தொலைத்திருப்போம் இப்படத்தில் எனக்கு பிடித்தது, என்ன ஆனாலும் மனிதத்தை மட்டும் வாழ்வில் தொலைத்துவிடக்கூடாது எனும் அருமையான கருத்து தான். எல்லாவற்றிற்கும் மேலாக என் மனைவியின் மிரட்டலால் தான் இந்தப்படத்தில் பணியாற்றினேன் அவர் இப்படத்தின் தீவிர ரசிகை என்றார்.
ஓலஃப் கதாப்பாத்திரத்திற்கு குரல் தந்துள்ள சத்யன் வீடியோ வழியாக பகிர்ந்து கொண்டது…
நான் மிகுந்த மகிழ்ச்சியும் கௌரவமுமாக உணர்கிறேன். டிஸ்னி எனும் மிகப்பெரும் நிறுவனம் என் குரலை ஒத்துக்கொண்டு என்னை பணிபுரிய செய்ததற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஓலஃப் கதாப்பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது எல்லோரையும் குதூகலப்படுத்த கூடியது. இப்படத்தை குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் திரையரங்கில் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஆன்னாவிற்கு குரல் தந்துள்ள பிரபல தொகுப்பாளர் டிடி எனும் திவ்ய தர்ஷினி கூறியதாவது…
டிஸ்னியில் இருந்து இப்படத்தில் வேலை செய்யக் கேட்ட போதே நான் உற்சாகத்தில் மிதந்தேன் எப்படியானதொரு வாய்ப்பு. சிறு வயது முதல் டிஸ்னியின் படங்கள் எனது ஃபேவரைட். அதிலும் ராஜகுமாரி கதைகள் என்னை முன்வைத்ததாக உணர்வேன். எல்லா இளவரசி கதையிலும் இளவரசன் வந்து மீட்டுப் போக இளவரசி காத்திருப்பாள் ஆனால் இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அவள் தனித்துவமானவள் அவளுக்கென லட்சியங்கள் இருக்கிறது. அவளுக்கு ஆசைகள், கடமைகள் இருக்கிறது இப்படியான படத்தில் பணிபுரிய யாருக்கு தான் பிடிக்காது. இப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிந்தது மேலும் மகிழ்வை தந்தது என்றார்.
படத்தின் நாயகி எல்ஷாவிற்கு பின்னணி பேசியுள்ள ஸ்ருதிஹாசன் கூறியதாவது..
ப்ரோஷன் படம் உலகெங்கிலும் பெரும் வெற்றிபெறக் காரணம் பல பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக , முன்னுதரணாமக இருப்பது தான். இந்த கதாப்பாத்திரத்திற்கு குரல் தந்த அனுவம் அலாதியானது. மிகவும் எளிமையாக என்னை பிரதிபலிப்பதாக இருந்தது. என் தங்கை அக்ஷராவுடன் எனக்கு இருந்த நெருக்கமான உறவு இப்படத்தில் பணிபுரிவதில் பேருதவியாக இருந்தது. திவ்ய தர்ஷினி ஆன்னா பாத்திரத்தை அற்புதமாக செய்திருந்தார். பாடலாசிரியர் விவேக் படத்திற்கு பொருத்தமான அருமையான வசனங்கள் தந்திருந்தார். வழக்கமாய் என் படங்களுக்கு நான் இரண்டு நாட்களில் டப்பிங் முடித்து விடுவேன் ஃப்ரோஷன் 2வை ஒரே நாளில் முடித்தேன். அதிலும் பாடலை நானே பாடியது எனக்கு பெரிய மகிழச்சி தந்தது என்றார்.