தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் #பிரதர். இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று 21.09.2024 நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :
பாடலாசிரியை பார்வதி பேசும்போது..
முக்கியமான ஆளுமைகள் இருக்கக்கூடிய இந்த இடத்தில் முதல் ஆளாக பேச கூப்பிட்டதற்கு மகிழ்ச்சி. என்னுடைய மிதக்குது என்ற பாடலை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்தப் பாடலில் நானும் தோன்றி இருக்கிறேன். யாராவது கண்டுபிடித்தீர்களா என்று தெரியவில்லை. அதேபோல டீசரில் வரும் அமுதா.. அமுதா.. பாடலையும் நான் தான் எழுதினேன். ஹாரிஸ் சாருடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மிகப்பெரிய பேராக நினைக்கிறேன். மறைந்த எனது அப்பாவின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இதை நான் அவரிடமே கூறியிருக்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் என்னை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார். ஹாரிஸ் சார், ராஜேஷ் மற்றும் ஒட்டுமொத்த பல குழுவினருடன் பணியாற்றியது மிகவும் நிறைவாகவும் சௌ
கரியமாகவும் இருந்தது என்றார்.
பாடலாசிரியர் விக்னேஷ் பேசும் போது
எனக்கு இந்த படம் மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்திற்காக நான் கவலை படும் போது நான் ஒன்றுமே இல்லாமல் இருந்தேன். தனிப்பட்ட முறையில் தான் ஹிட்ஸ் கொடுத்து இருந்தேன். ஆனால், சினிமாவில் இவன் ஏதாவது ஒன்று செய்வான் என்று என் மீது நம்பிக்கை வைத்து முதல் வாய்ப்பை கொடுத்த ராஜேஷ்க்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையை பிரதருக்கு முன் பிரதருக்கு பின் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதற்குக் காரணம் இந்த படத்தின் கடைசி நாள் அன்று ஹரிஷ் ஜெயராஜ் சார் இனிமே உங்களுக்கு எல்லாமே சரியாக நடக்கும் விக்னேஷ் என்று கூறினார். அவர் சொன்னது போலவே என்னுடைய வாழ்க்கை ஒரு யூடர்ன் போட்டது. இரண்டு படுக்கை அறையில் இருந்து நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு மாறினேன். சொந்தமாக ஒரு அலுவலகம் திறந்தேன்.
இந்த ஆரம்ப காலகட்டத்திலேயே ஹரிஷ் ஜெயராஜ் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. யாருக்கு தான் அவருடன் பணியாற்ற விருப்பம் இருக்காது? அதேபோல ஜெயம் ரவி சாருடன் இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் எனது வீட்டில் எல்லோருக்கும் பெரிய நடிகர்கள் படத்திற்கு தான் திரையரங்கில் சென்று பார்க்கும் வழக்கம் உண்டு. முதுகு வலி காரணமாக எல்லா படத்திற்கும் நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்க முடியாது என்பதால் என்னுடைய பெற்றோர்கள் திரையரங்கிற்கு அதிகம் செல்ல மாட்டார்கள். ஆனால் ஜெயம் படம் வந்தபோது சன் டிவியில் ட்ரைலர் பார்த்தார்கள். படம் நன்றாக இருக்கும் போல தெரிகிறது என்று திரையரங்கிற்கு சென்றார்கள். அன்று முதல் ஜெயம் ரவி சாரின் இந்த படத்தையும் தவறவிட்டதே இல்லை. அன்று முதல் ஜெயம் ரவி குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறினார். அதேபோல அவருடைய படத்தில் அனைத்து பாடல்களுமே வெற்றியாகும். எனக்கு பிடித்த 50 சதவீத பாடல்கள் அனைத்தும் ஜெயம் ரவி சார் படத்தின் பாடல்கள் தான். நான்கு நாட்கள் ஹாரிஸ் ஜெயராஜ் சார் ஸ்டுடியோவில் இருந்து பணி புரிந்தேன். என்னுடைய மொத்த வாழ்க்கை திரும்பத் தருணமாக அதை சொல்லலாம். இந்தப் படம் அதிகமாக திரும்பத் திரும்ப பார்க்க கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
ஒளிப்பதிவாளர் பேசும்போது..
இப்படம் ராஜேஷ் உடன் முதல் படம் ஜெயம் ரவி சார் உடன் இரண்டாவது படம். இப்படத்தில் மிகப்பெரிய பிரபலங்கள் உடன் பணியாற்றியதும் அவர்களை ஒளிப்பதிவு செய்வதும் ஒரு குடும்பம் மாதிரி தான் இருந்தது. இப்படத்தை பார்க்கும் போது எல்லோருக்கும் அக்காவையோ தம்பியையோ கண்டிப்பாக நினைவுபடுத்தும். இந்த படத்தில் குடும்ப பிணைப்பு இருக்கும். இந்த படத்திற்காக ஹாரிஸ் சார் மிக சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். படக்குழு அனைவருக்கும் நன்றி என்றார்.
பிரவீன் ராஜ் பேசும்போது..
ஜெயம் ரவி, ராஜேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. ஹாரிஸ் ஜெயராஜ் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. மூத்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். அவர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகை சரண்யா பேசும்போது..
நீண்ட நாட்களுக்கு பிறகு விழாவிற்கு வந்திருக்கிறேன். ராஜேஷ் படம் என்றாலே அமர்க்களம் தான். ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. நாங்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருந்தோம். அங்கு நாங்க நடித்த காட்சிகள் அனைத்தும் நகைச்சுவையுடன் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்ததற்காக ராஜேஷ்க்கு நன்றி. இப்படம் மிகவும் நன்றாக இருக்கும் நான் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். குடும்ப உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் படம். எல்லோருக்கும் நன்றி என்றார்.
நடிகர் ராவ் ரமேஷ் பேசும் போது..
இந்த படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்த ராஜேஷுக்கு நன்றி. எப்போதுமே தமிழ் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒரு கிக்கு தான். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது புது சிந்தனைகள் கொண்டு ஜீவநதி போல ஓடிக் கொண்டிருக்கும். வணிக ரீதியான படம், சர்ச்சைக்குரிய படம், நகைச்சுவை படம் என்று தமிழ் சினிமா நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சுந்தர் சாருக்கு நன்றி. ஒவ்வொரு காட்சிகளிலும் சுவாரசியம் நிறைந்திருக்கும். பூமிகா, வி டிவி கணேஷ், நட்டி சார் சரண்யா மேம் எல்லோரும் இருக்கிறார்கள். வெற்றி பெற தகுதி இருக்கின்ற படம்.
நான் ஒளிப்பதிவாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் நடிகனாகி விட்டேன். இப்போது நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். தெலுங்கு சினிமாவில் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளேன் என்றார்.
நடிகர் நட்டி பேசும்போது..
பிரதர் என்பது படம் அல்ல அது உணர்வு பூர்வமான விஷயம். இந்த படம் முடிந்த போது ஏன்டா முடிந்தது என்று இருந்தது.ஜெயம் ரவி, ராஜேஷ், பிரியங்கா, பூமிகா ராவ் ரமேஷ் சார், விடிவி கணேஷ், வீட்டில் ஒரு அம்மா என்றால் திரையில் என்னுடைய அம்மா சரண்யா மேம் என்று இவர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ராஜா சாருக்கு பிறகு ஹாரிஷ் ஜெயராஜ் பாடல்களை தான் மிகவும் விரும்பி கேட்பேன். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்த பாடலில் நானும் பங்காற்றியிருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி சாருக்கு மச்சானாக நடித்திருக்கிறேன். படிப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஜெயம் ரவி சாருடன் செஸ் விளையாடுவோம். தொடர்ந்து எட்டு முறை தோற்று இருக்கிறேன். படப்பிடிப்பு நடந்தது என்று போல் இல்லாமல் ஒரு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தது போலதான் இருந்தது அந்த சூழலை அமைத்துக் கொடுத்த ராஜேஷ்க்கு நன்றி என்றார்.
நடிகர் விடிவி கணேஷ் பேசும்போது..
ஊட்டியில் 30 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்தது. தயாரிப்பாளர் வாரி வழங்கினார். படிப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை. நான் என் மனைவியை அழைத்துக் கொண்டு, அம்மாவை விட்டு தனியே வந்து விட்டேன். ஆனா இந்த படத்தில் நடிக்கும் போது தான் மாமா மாமி சித்தப்பா என்று அனைத்து சொந்தங்களுடனும் கூட்டு குடும்பமாக வாழ்ந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். கூட்டு குடும்பமாக இருக்கும்போது சண்டே சச்சரவுகள் இருக்கும். ஆனால், இவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதேபோல தவறு செய்தாலும் அதை நினைத்து மனம் வருந்தவோம். ஆனால் தனியாக வந்துவிட்டால் சுவரிலோ, கண்ணாடியிலோ தான் நம்மை பார்த்து கொள்ள நேரிடும். படத்தை இரண்டரை மணி நேரம் முழுவதும் கலகலப்பாக கண்டு களிப்பீர்கள்.
ராகுல் ரமேஷ் தெலுங்கில் நாட்கள் கொடுக்க முடியாமல் நடித்துக் கொண்டிருக்கும் போது, தமிழில் எனக்கு நிறைய நடிக்க வேண்சும் வேண்டும் என்று தமிழ் மொழியை நேசிப்பது நமக்கு பெருமையாக இருக்கிறது. நமது மொழி மீதும் நமக்கு மதிப்பு வருகிறது என்றார்.
இயக்குநர் மோகன்ராஜா பேசும்போது..
எனக்கும் ரவிக்கும் முதல் நாளிலிருந்து இன்று வரை ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. ரவி ரசிகர்களில் ஒரு சிலரை சொல்லி அழைக்கும் அளவிற்கு 20 வருடங்கள் தொடர்ந்து எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் சரண்யா முதல் ராவ் ராகுல் வரை அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த விழா நாயகனான ஹரிஷ் ஜெயராஜ் அவர்களின் இசையை நான் மிகவும் ரசிப்பேன். பாடல்களின் பாடல் வரிகள் மட்டும் அல்ல அது இசையையுமே திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் மதிப்பை கொடுத்த முதல் இசையமைப்பாளர் என்று நான் அவரை கூறுவேன். அதேபோல அவர் இயல்பைப் பற்றியும் கூற நான் தகுதி வாய்ந்தவன். ஃபிலிம் இன்ஸ்டியூட் டிப்ளமோவிற்கு, இசையமைப்பாளராக அறிமுகமாக தருணத்தில் கூட நான் குறும்படம் எடுப்பதற்காக இசையமைத்துக் கொடுத்தவர். குறும்பட இயக்குனர் ஆவதற்கு உறுதுணையாக இருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதற்கு எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். ராஜேஷ்க்கு ஒரு பெரிய இடம் இருக்கிறது என்பதை ஒரு இயக்குனராக ராஜேஷ் உடைய ஃபேனாக நான் சொல்லிக் கொள்கிறேன். எம் குமரன் மாதிரியும், சம்திங் சம்திங் மாதிரியும் #பிரதர் படம் இருக்கும் என்பது நிறைவாக உள்ளது. ரவி எப்போதும் சினிமாவை நேசிப்பவன். அதனால் தான் இது மாதிரி நல்ல ரசிகர்கள் அவனுக்கு கிடைத்திருக்கிறார்கள். ரவி நடனத்திற்கு நான் மிகப்பெரிய ஃபேன். ரவி நடனத்தைப் பார்க்கும்போது, இவன் என் தம்பி என்று சொல்ல பெருமையாக இருக்கிறது. இந்த பட குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் பேசும்போது..
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பெரிய பொழுதுபோக்கு படமாக இது இருக்கும். தீபாவளி அன்று வெளியாகும் இந்த படத்தை குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். ராஜேஷ் முதலில் ஹீரோவுக்குத்தான் கதை சொன்னார். ரவி சார் அதைக் கேட்டுவிட்டு, ஒரு நல்ல குடும்ப கதை இருக்கிறது கேளுங்கள் என்று என்னிடம் கூறினார். கதை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே படப்பிடிப்பை ஆரம்பித்தோம். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் நடிகர் நடிகைகள் தானாகவே அமைந்தது அது ஆசீர்வாதம் என்று தான் சொல்ல வேண்டும். மக்கா மிஷி பாடலை முதல் முறை கேட்டதுமே ஹரிஷ் ஜெயராஜிடம் இந்த பாடல் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கும் என்று கூறினேன். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இந்த பாடலைக் கேட்டதும் இது மிக பெரிய ஹிட்டாகுமெ என்று ஆர்வமாக கூறினார். அந்த சமயத்தில் ரவிக்கு காலில் அடிபட்டு விட்டது. சிறிது காலம் காத்திருங்கள் கால் சரியானதும் வருகிறேன் என்று அஒல்லி விட்டு வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டார். இந்தப் பாடலுக்குப் பிறகு நான் ரவியின் நடனத்திற்கு ஃபேனாகி விட்டேன் என்றார்.
இயக்குநர் ராஜேஷ் பேசும்போது..
ரவியின் ரசிகர்கள் பார்ப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்திருக்கும் இந்த படத்தின் அனைத்து நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. என்னை பாராட்டி பேசிய இயக்குனர் மோகன்ராஜ் சாருக்கு மிகப்பெரிய நன்றி.
என்னுடைய நிஜ வாழ்க்கையில் எனக்கு அக்கா கிடையாது. ஆனால் இந்த படம் பார்த்த பிறகு அக்கா இருக்கும் அனைவரும் அவர்கள் அக்காவிற்கு கால் செய்து பேச வேண்டும் அல்லது கோபப்பட வேண்டும் என்று தோணும். அக்கா இல்லாதவர்க்கு நமக்கு இப்படி ஒரு அக்கா இல்லையே என்ற உணர்வு வரவேண்டும். நானும் ரவியும் மூன்று கதை கலந்து ஆலோசித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு நாம் இந்த கதையை படமாக்கலாம் என்று கூறினார். எம் குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்று படங்கள் எடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அதேபோல் இந்த நேரத்தில் இந்த கதை நன்றாக இருக்கும் என்று கூறினார். அங்கிருந்துதான் இந்த படத்திற்கான பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு தான் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர்கள் தேர்வு செய்தோம். ராவ் ரமேஷ் கதாபாத்திரத்திற்கு ரவி சார் தான் தேர்வு செய்தார். ஜெய் பீம் படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஹைதராபாத்தில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு சென்று கதை கூறினேன். அவரிடம் கதை கூறும் முன்பு தெலுங்கு டப்பிங் கலைஞரை வைத்து தான் பணியேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் அழகாக பேசிய தமிழைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தினோம். ராவ் ரமேஷ் கூறியது போல என்னோட பகுதியை நான் சிறப்பாக செய்து விடுவேன். அதேபோல அனைவருக்கும் அதற்கான இடம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பூமிகா மேடத்திடம் கதை கூறுவதற்காக மும்பை சென்று இருந்தேன். அவர் கதையை கேட்டுவிட்டு என் பையனை அழைத்து வர வேண்டும் என்று கிளம்பி விட்டார். நான் ஓடிப்போய் இந்த கதை ஓகேவா என்று கேட்டேன்.. புரசீட் பண்ணுங்க என்று கூறிவிட்டு பையனை அழைப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். அவரும் நிஜ வாழ்க்கையில் குடும்ப பிணைப்போடு இருப்பது சந்தோஷமாக இருந்தது. டப்பிங் முடிந்து அவருடைய நடிப்பை பார்த்ததும் முன்பை விட மிகவும் பிடித்திருந்தது.
வி டி வி கணேஷ் சார் பற்றி உங்களுக்கே தெரியும். நான் என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதை பேச மாட்டார். அவர் விருப்பத்திற்கு தான் பேசுவார். ஆனாலும் அது நன்றாக இருக்கும். ஒவ்வொரு நாள் படப்பிடிற்கு செல்லும்போதும் இன்று நம் வசனத்தை தான் பேச வைக்க வேண்டும் என்று நினைத்து செல்வேன். ஆனால் அது முடியாது. அவர் விருப்பத்திற்கு பேசினாலும் நாம் வேண்டாம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பேசிவிடுவார். அதேபோல ஒளிப்பதிவு, நடிப்பு என்பதை தாண்டி நட்டிசாருடன் நிறைய விஷயங்கள் பேசவோம். பிரியங்கா மோகன் அவர்களின் நடிப்பை திரையில் பார்க்கும்போது அவ்ளோ அழகாக இருக்கிறது. அவரின் சின்ன சின்ன ரியாக்ஷனை வைத்து இறுதியில் ஒரு ப்ளூப்பர் உருவாக்கலாம் என்று இருக்கிறோம். இந்த படத்திற்காக அனைவரும் எனக்கு முழு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சுந்தர் சார் மிகவும் ஆதரவு கொடுத்தார். படத்தின் பிரமோஷனுக்காக நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார்.
இதுவரை எனது படத்தில் ரத்தம் அடிபட்டு ரத்தம் கூட வரும் மாதிரி காட்சிகளை நான் வைத்தது கிடையாது. அதேபோல சண்டை காட்சிகளும் என் படத்தில் இருக்காது. ஆனால், இந்த படத்திற்கு ஒரு சில காட்சிகளுக்கு தேவை இருப்பதால் சண்டைக் காட்சிகள் வைத்திருக்கிறோம். ஆனாலும் அடிபட்டு ரத்தம் வரும் அளவிற்கு இருக்காது. நகைச்சுவை நிச்சயமாக இந்த படத்தில் இருக்கிறது. ரவி சார், வி டிவி கணேஷ் அவர்களும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் அருமையாக இருக்கும். தீபாவளிக்கு எல்லோரும் ஊருக்கு செல்வார்கள் உறவினர்களை சந்திப்பார்கள், நன்றாக சாப்பிடுவார்கள். அதன் பிறகு படத்தை தான் தேர்வு செய்வார்கள். இவர்கள் தேர்வு செய்யும்போது இந்த படம் முதலில் இருக்கும். இதே போல படம் பார்த்து வெளியே வரும் போதும் சந்தோஷமான உணர்வுடன் வருவார்கள்.
ஹாரிஷ் அவருடைய மிகப்பெரிய ஃபேன் நான். காசு கொடுத்து நான் வாங்கிய பாடல்கள் ஹாரிஷ் சாரோடது தான். இதற்கு முன்பே ஓகே ஓகே படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அந்த படத்தில் இடம்பெற்ற வேணாம் மச்சான் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக நிறைய ஊக்குவித்தார். அவரின் இசை மற்றும் அவரது ஊக்குவிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய மதிப்பை கொடுத்து இருக்கிறது. இப்போது இந்த படத்திற்கான பின்னணி இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். ஐந்து பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பேசும்போது..
நான் பூமிகா மேடம் உடைய மிகப்பெரிய ஃபேன். ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் எங்களுக்கு ‘பெய்ட்’ சுற்றுலா மாதிரி தான் இருந்தது. இவ்ளோ பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஹாரிஸ் சார் இசையில் இது எனக்கு முதல் படம். எல்லோரும் கூறியது போல ரவி சார் மிகப்பெரிய இடம் கொடுத்தார். ராஜேஷ் சாருடைய மிகப்பெரிய ஃபேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து, அருமையான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி என்றார்.
நடிகை பூமிகா பேசும்போது
இங்கு கூறியது போல இது விடுமுறை சுற்றுலாவாக தான் இருந்தது. ராஜேஷ் கதை கூறும்போது என்னுடைய பையனை அழைத்து வரும் அவசரத்தில் இருந்தேன். நீ எவ்வளவு வெற்றியடைந்தாலும் வீட்டிற்கு திரும்பும் போது வீட்டில் உன்னுடைய குழந்தைகள் சகோதரர்கள் பிறந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களை விட மிகப்பெரிய சந்தோசம் எதுவும் கிடையாது. அதேபோல் தான் நானும் எனக்கு சகோதரனுடன் தினமும் பேசுவேன். ஜெயம் ரவி இந்த படத்தில் எனது தம்பியாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் பணிவானதற்கு இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப மகிழ்ச்சி. மிகவும் பணிவான மனிதர். தமிழில் நான் அதிக படங்களில் நடிக்கவில்லை. அதிகபட்சமாக ஏழு படங்களில் நடித்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு படத்திலும் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தது. ஒரு நடிகருக்கு அடுத்த கட்டம் என்று வரும், அப்படி இந்த அக்கா கதாபாத்திரம் எனக்கு அற்புதமாக அமைந்திருக்கிறது.
இதற்கு முன்பு எம் எஸ் தோனி படத்தில் அக்காவாக நடித்திருந்தேன். கதாநாயகியிலிருந்து அக்கா என்று வரும்போது முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால், நிரஜ் சார் இது சிறிய கதை பத்திரமாக இருந்தாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறினார். ராஜேஸ் உடன் பணியாற்றியது எளிமையாக இருந்தது. மிகவும் பொறுமையாக பணியாற்றக் கூடியவர். இந்த வருட பிறந்தநாளை நான் ஊட்டியில் படப்பிடிப்பில் அனைவரும் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தர் சாருக்கு நன்றி.
இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய பிரியங்கா, ராவ் ரமேஷ், சரண்யா மேம், நட்டி சார் மற்றும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் எல்லோருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
ஜெயம் ரவி அக்கா டாக்டர் ரோஜா பேசும் போது..
ரவி அளவிற்கு மேடையில் எனக்கு பேச தெரியாது. இந்த படத்தில் ரவியை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சம்திங் சம்திங் மற்றும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் பார்த்தது போல இளமையான ரவியை பார்க்க முடிந்தது. சந்தோஷமாக ஆடிபாடி இது போன்ற ஒரு குடும்பப் படத்தில் நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரவி பற்றி ஸ்பெஷலா செல்வதற்கு ஒன்றுமில்லை. எப்பவுமே அவன் ஸ்பெஷல் தான். ரவிக்கு அக்கா என்று சொல்வதே பெருமையான விஷயம்தான். அவரை போல தம்பி கிடைப்பதற்கு உண்மையாக கொடுத்து வைத்திருக்க வேண்டும். எங்களுக்குள் இருக்கும் அக்கா தம்பி உறவு ஸ்பெஷல் என்றால் ஸ்பெஷல் தான்.. சாதாரணம் என்றால் சாதாரணம். அனைவருக்கும் இருப்பது போல சண்டையும் வரும் பாசமும் இருக்கும். பொதுவாக ரவி செண்டிமெண்டான மனிதன். அக்கா தங்கை இருப்பவர்களுக்கு சித்தி எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். எனக்கு அக்கா தங்கை கிடையாது அண்ணன் தம்பி தான். நான் ரவிக்கு அக்கா என்பதை விட தங்கை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நான் உணர்கிறேன். அதேபோல என்னுடைய குழந்தைகளுக்கு மாமா என்ற உறவை சிறப்பாக கொடுத்து வருகிறான் என்றார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது..
இந்த படத்திற்காக இசையை போதும் போதும் என்ற அளவுக்கு கேட்டிருக்கிறேன். படம் வெளியாகும் வரைக்கும் இசையை திரும்பத் திரும்ப கேட்டு மாற்றிக் கொண்டே இருப்பேன். ஆனால் அதைவிட ரசிகர்களின் கரகோஷம் என்ற இசை எனக்கு மிகவும் பிடிக்கும். மக்கா மிஷி பாடல் மிகப்பெரிய வெற்றியாகும் என்று 100% நினைத்தேன். ஏனென்றால், ஒன்றரை வருடங்களுக்கு முன்பே இந்த இசை அமைத்து விட்டேன். அது மட்டுமல்லாமல் இது மிகவும் சிறந்த குடும்ப படம். நல்ல படம் என்பது சனிக்கிழமை மாலை தான் தெரிகிறது. ஆனால், வெள்ளிக்கிழமையே திரையரங்கம் நிறைய வேண்டும். வெள்ளிக்கிழமையே மக்கள் திரையரங்கிற்கு வரவேண்டும் என்பதற்காக இந்த பாடலை இன்னும் கொஞ்சம் மெருகற்றி இருக்கிறேன். ஏனென்றால், நான் திரையரங்கம் வைத்திருக்கிறேன். அதனால் மக்கள் எதை வைத்து ஒரு படத்திற்கு வர வேண்டும் என்று கணிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். முதலில் பாட்டுக்காக தான் வருகிறார்கள். அதன் பிறகு தான் அது நல்ல படமா என்று பார்க்கிறார்கள். ஆகையால் திட்டமிட்டு தான் மக்கா மிஷி பாடலை இசை அமைத்தேன்.
இந்த படத்திற்காக பாடல்களை பாடிய மதுஸ்ரீ கார்த்திக் சுனிதா மூவரும் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர மூன்று புதிய பாண்டவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜகாரியா, மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கும் போது அவரை சந்தித்தேன். தனித்தன்மை வாய்ந்த அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தாமரை அக்கா எழுதியிருக்கிறார்.. அடுத்து பிரபல பாடகி அஹானா, அமுதா பாடலில் கார்த்தியோடு சேர்ந்து பாடினார். இந்த பாடலுக்காக சிறு வயது ஹரிணி குரலை தேடிக் கொண்டிருக்கும் போது அஹானாவை தேர்ந்தெடுத்தேன். அதேபோல ஒரு சேனலில் போட்டிக்காக பாடிய குரல்கள் இருக்கும். அந்த போட்டியில் வெற்றி பெற்றவர் பல காரணங்களுக்காக தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆகையால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து பேரை வாங்கினேன். அதில் ஒரு குரல் மட்டும் நான் நினைத்தது போல சிறு குழந்தையின் குரலாக இருந்தது. அவரை பார்த்ததும் அதிர்ச்சி, உண்மையாகவே அவர் 13 வயது சிறுமி. ஆனால் எனக்கு எப்படி ஒரு சிறுமையை டூயட் பாட வைப்பது என்று சங்கடம் இருந்தது. ஆனால் அவர் நான் பாடுகிறேன் என்றார். அவருடைய அம்மாவும் இது அவளுடைய தொழில், இது போன்ற வாய்ப்பு இனிமேல் கிடைக்காது, இதற்கு பின் இவர் பெரியவளாகி விடுவாள் என்றார். பார்வதி தான் பாடலை எழுதினார். ஆனால் ஒரே நாளில் பிரமாதமாக பாடினார். உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன். மூன்றாவது புதிய சிங்கர் பால்டப்பா.
ராஜேஷை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவரிடம் பார்க்காத முகம் ஒன்று இருக்கிறது, அது அம்பி முகம். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அம்மா பையன் 15 நிமிடம் காட்சிகளில் அனைவரையும் அழவைத்து விடுவார். அதேபோல இந்த படத்திலும் சரியாக கையாண்டு இருக்கிறார். ஒரு நகைச்சுவை இயக்குனராகத்தான் பார்த்திருப்போம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இயக்கியிருப்பார். ஆனால், #பிரதர் பயங்கர உணர்வுபூர்வமான படம் எது. இது போன்று இறுதியாக கடை குட்டி சிங்கத்தை தான் பார்த்தேன். அதன் பிறகு நகர்ப்புறத்தில் பிரதர் தான் குடும்ப படமாக இருக்கும். வாரம் முழுவதும் 80 சதவீத மக்களோடு ஓடும் படமாக இருக்கும். ஒரு துள்ளலான பாடல் வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு புதியதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைக்கும் போது யூடியூபில் இருந்து ஒருவர் எனக்கு அனுப்பினார். அந்த பாடலை கேட்டதும் எனக்கு தேவையான குரல் இது இல்லை என்று நினைத்தேன். பொதுவாக நாம் யூடியூபில் ஒரு பாடல் முடிந்ததும் அடுத்து இது பாருங்கள் என்று பரிந்துரை வரும். அப்படி வந்த குரல் தான் பால் டப்பா. இதை கேட்கும் போது அடடா இந்த குரல் நன்றாக இருக்கிறதே! என்று நினைத்தேன். இந்தப் பையனை எப்படி பிடிக்கிறது என்று தெரியவில்லை. அதுதான் இந்த முழு பாடல். ராஜேஷும் ரவியும் மக்கா மிஷி வார்த்தையை பிடித்தார்கள். சிஎஸ்கே ஆந்தம் .. சேப்பாக்கம் ஆந்தம் மாதிரி இரு வரும் என்று நினைத்தேன். இந்த படத்திற்கு இந்த பாடல் மூலம் ஒரு முகவரியும், இரண்டாவது பெயரும் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன்.
அனைவருக்கும் இது ஒரு சிறந்த தீபாவளியாக இருக்கும் என்றார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் எப்போதும் எனக்கு கொடுக்கும் ஆதரவையும் உற்சாகத்தையும் என்னுடைய கடைசி படம் வரைக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
“மக்காமிஷி” பாடல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பாடலை கேட்பதற்கு முன்பு, சாண்டி மாஸ்டர் என்னை நடன ஒத்திகைக்கு அழைத்தார். அப்போது என்னுடன் என் மகன் ஆரவும் வந்திருந்தார். அப்போது இந்த பாடலில் வரும் முட்டி போட்டு ஆடும் ஒரு ஸ்டேப் எனக்கு வரவில்லை, அப்போது என் மகன் என்னை பார்த்து “என்னப்பா வயசாயிடுச்சா” என்றான். என்னால் அது தாங்க முடியவில்லை. நான் எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு என்று கேட்டு நன்கு பயிற்சி செய்து ஆடினேன். அதை கண்டதும் எனக்கு கை கொடுத்து “you did இட்” என்றான்.
எப்போதுமே உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்த தான் என்னுடைய முதல் படத்திலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. மீடியா எப்போதும் என்னை ஒரு குழந்தை போன்று நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள சொல்வதும், நான் செய்யும் ஒவ்வொன்றையும் அவர்கள் கவனிப்பதும் தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம், வேறு எதுவும் கிடையாது.
ராஜேஷ் சார் அவர் என்னுடைய “brother” தான். நான் தான் “brother” என்ற டைட்டில் கொடுத்தேன். நீங்கள் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் சொல்லவில்லை. உங்களின் அடுத்த படத்திற்கும் டைட்டிலை நான் தருகிறேன். இந்த படம் ஒரு குடும்பப்படம் என்பதால் நிறைய பெயர்கள் வைக்க முயற்சி செய்தோம். “பூங்காவனம்” அப்படி இப்படி என்று என்ன என்னமோ பெயர்கள் வைக்க நினைத்தோம். ஹீரோயிசமாக ஒரு டைட்டில் வைக்கலாம் என்று நினைத்தால், இப்படம் ஒரு பேமிலி என்டர்டெயினர் என்று பேசிக்கொண்டிருக்கும் போது,
“என்னதான் வைக்கிறது பிரதர்” என்றார்.
சார் இந்த டைட்டில் நன்றாக உள்ளது என்றேன், “என்னதான் வைக்கிறது பிரதர்” என்பதை டைட்டிலாக எப்படி வைக்க முடியும் என்றார். நான் “BROTHER” தான் டைட்டில் என்றேன். ஏனென்றால் எங்கள் டீமில் சுந்தர் சார், ராஜேஷ் சார் என அனைவரும் ஒருவரை ஒருவர் “BROTHER” என்று தான் அழைத்துக் கொள்வோம். அதனால் இந்த டைட்டில் சரியாக இருக்கும் என்று அவர் டீமில் கேட்ட அனைவரும் ஓகே சொல்லிவிட்டார்கள். இது ஒரு அக்காவுக்கும் தம்பிக்குமான ஒரு அழகிய கதை தான் இப்படம்.
அந்த கதையை விட அழகாக இருக்கும் அக்கா நம் பூமிகா அக்கா, பல வருடங்களாக நாம் அவரை பார்த்து வருகிறோம், ஒரு முறை கூட அலுக்காத ஒரு முகம் அவர்களின் முகம். நான் என் நண்பர்களிடம் பூமிகா மேடம் எனக்கு அக்காவாக நடிக்க போகிறார்கள் என்று சொன்னதும் அனைவரும் என்னுடன் சண்டை போட்டார்கள், யார் அக்கா? அவர்களை நீ எப்படி அக்காவாக நடிக்க வைக்க முடியும்? என்று கேட்டார்கள். அதே போல் தான் எம்.குமரன் படத்தில் நதியா மேடம் எனக்கு அம்மாவாக நடிக்கிறார்கள் என்றபோது பயங்கரமாக என்னை கத்தினார்கள்.
பூமிகா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், அவர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது, நன்றி பூமிகா மேடம்.
ராஜேஷ் சார் என் குடும்பத்தில் ஒருவராக தான் இருக்கிறார், அவரை சந்தித்த போது என்னிடம் இரண்டு மூன்று லைன்களை சொல்லியிருந்தார். நான் அப்போது எனக்கு முழு காமெடி படமாக இல்லாமல், ஒரு பேமிலி என்டர்டைனர் படமாக வேண்டும் என்று கேட்டேன் அப்போது தான் இந்த படத்தின் லைன் சொல்லியிருந்தார். அதன் பின் அதை முழுமை படுத்தி என்னிடம் எடுத்து வந்தார், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாம் அனைவரும் அவரை ஒரு காமெடி படம் எடுக்கும் இயக்குனர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவரின் “சிவா மனசுல சக்தி” படத்தின் கதையை பார்த்தல் அது ஒரு எமோஷனல் ட்ராமா மற்றும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட ஒரு படமாக இருக்கும். அதை அவ்வளவு நேர்த்தியான ஒரு படமாக எடுத்திருப்பார். அந்த படத்தில் “மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” என்ற வசனம் பிரபலமானதால் நாம் இன்றும் அதை மீம்மாக உபயோகித்து வருகிறோம்.
அதே போல் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் ஒரு மனிதன் படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி வரையிலும் ஒரே மாதிரி தான் இருப்பர், அவர் மாறவே மாட்டார். அது மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது எனக்கு பிடித்திருந்தது.
இந்தப் படமும் அதே போல் தான் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதையமைத்துள்ளார். அதனால் இப்படமும் சிறப்பாக வரும் என்று நம்பிக்கையில் இப்படத்தில் நடித்துள்ளேன்.
ஹாரிஸ் சாருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. “எங்கேயும் காதல்” படத்தின் பாடலை வைத்து தான் இப்போதும் சவுண்ட் செக் செய்கிறார்கள். அந்தப்படம் என்னுடைய படம் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. “மக்காமிஷி” பாடல் எனக்கும் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத ஒரு பாடலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் அனைவர்க்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன், ராஜேஷ் சார் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பிரியங்கா மோகன் அவர்களின் எஸ்பிரேஷன் அனைத்தையும் ப்ளூபராக மட்டுமில்லாமல் அனைத்தையும் யூட்யூப் ரீல்ஸ்களில் பயன்படுத்தலாம். கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தை நாம் அனைவரும் ஊட்டியில் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தோம் அந்த தருணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது.
சரண்யா மேடம் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். ஒரு சிறிய ஷாட் என்றாலும், அதை ஜென் முறையில் தயார் செய்து நடிப்பார், எனக்கு சரண்யா மேடத்திடம் பிடித்தது அவர் மேக்-அப் பேக் பயன்படுத்த மாட்டார். மேக்-அப் டிரே தான் பயன்படுத்துவார். அது ஒரு ஹோட்டலில் வழங்கும் பஃபே உணவை போன்று தான் அவர்களின் மேக்-அப் கிட் இருக்கும். அவர்கள் அதை பார்த்து தான் என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்வார். அதை அனைவரும் ஃபாலோ பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சுந்தர் சாரும் நானும் 2 படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டோம். படப்பிடிப்பு தளத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தது. அப்போது அவர் ஒரு கப்பலை திருப்பி அழைத்து வந்தார். அதையெல்லாம் யாராலும் செய்ய முடியாது. அவரின் பிரதராக அவரின் வளர்ச்சிக்காக நான் எப்போதும் வேண்டுகிறேன். நாம் அடுத்த படத்திலும் இனணந்து பணியாற்றுவோம் நன்றி.
என் படத்தில் நட்டி சார் இருக்கிறார் என்று தெரிந்ததும் அனைவரும் யோசிப்பார்கள், அவர் வில்லனா, காமெடி செய்வாரா என்று யாராலும் யூகிக்க முடியாத வண்ணம் தான் அவரின் பாத்திரமும் நடிப்பும் இருக்கும். அது எப்படி என்று எனக்கும் நீங்கள் ஒரு நாள் கற்றுத்தர வேண்டும்.
ராவ் ரமேஷ் சார் ஆந்திராவில் பெரிய நடிகர் அவர். அவரை பார்த்ததும் தெலுங்கில் பேச வேண்டும் என்று பயிற்சி செய்து வைத்திருந்தேன். ஆனால் அவரை நான் பார்த்து பேசுவதற்கு முன்பாகவே, அவர் எண்ணிடம் வந்து “என்னப்பா எப்படி இருக்க நல்லாருக்கியா, எங்க இருந்து வர, அப்பா நல்லாருக்காரா” என்று பேச ஆரம்பித்து விட்டார். நான் வியந்து எப்படி சார் என்றதும் “நான் இங்கு வளர்ந்த பையன் தான் பா” என்றார்.
VTV கணேஷ் சார் என்னுடன் செஸ் விளையாட்டில் பல முறை தோல்வியடைந்துள்ளார். அதை சொன்னால் என்னை திட்டுவார். சில சமயம் ஜெயித்தும் இருக்கிறார். நன்றி அண்ணா. என்னுடைய குழு அனைவருக்கும் நன்றி, என்றார்.