பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது.
மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’ எனும் தினத்தொடர். ஜனனி அசோக் குமார், விஷ்ணு, ஆர்ஜே சரித்திரன், செளந்தர்யா நஞ்சுண்டான், வினோத் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் தொடர் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும்வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பான சென்னையை களமாகக் கொண்டு, இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கி விற்கும் நிறுவனமான ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’யின் கதையையும் அதன் பணியாளர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை கலந்து பேசும் தொடர் இது. தங்கள் நிறுவனம் சந்திக்கும் சவால்களையும் தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகளையும் கூட்டாக எப்படி அந்தப் பணியாளர்கள் சமாளிக்கிறார்கள் என்பதே இந்தத் தொடரின் சாராம்சம்.
சென்னையில் இன்று நடந்த இந்தத் தொடரின் பூஜையில் அதில் நடிக்கும் நட்சத்திரங்களும் ஆஹா தமிழ் தளத்தின் குழுவும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். தமிழ் ஓ.டி.டி பரப்பில் அலுவலகச் சூழலை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் தினத்தொடர் என்பதால் இது எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் தரத்திலும் புதுமையான அம்சங்களிலும் ஆஹா தமிழ் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
இதுகுறித்து ஆஹா தமிழின் துணைத்தலைவரான கவிதா ஜெளபின் கூறுகையில், ‘பார்வையாளர்களுக்கு புதுமையான படைப்புகளை வழங்குவதில் ஆஹா தமிழ் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. பேட்டைக்காளி, ரத்தசாட்சி, உடன்பால் போன்ற படைப்புகளே அதற்கு சாட்சி. அந்தவகையில் தமிழ் ஓ..டி.டி தளத்தில் புதுமுயற்சியாக தினத்தொடர் ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம். இந்தத் தொடர் பார்வையாளர்களின் ரசனையை மாற்றியமைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.’ என்றார்.
நாளுக்குநாள் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு தளத்தில், வெகுஜன பார்வையாளர்களுக்கு சிறப்பான காணொளி அனுபவத்தை அளிக்கவேண்டும் என்பதே ஆஹா தமிழின் பிரதான குறிக்கோள். அதை நோக்கிய பயணத்தில் இன்று இந்த தினத்தொடரும் இணைய, தமிழின் முதன்மையான ஓ.டி.டி தளம் என்கிற பெருமையோடு நடைபோடுகிறது ஆஹா தமிழ்.