அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகை சுபிக்ஷா. இந்த இயற்கை குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன் மூலம் சவாலான ஒரு திரை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படமான கோலி சோடா 2வில் நடித்திருக்கிறார். ‘கடுகு’ படத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் நம் கவனத்தை ஈர்த்த சுபிக்ஷா, விஜய் மில்டன் மற்றும் பாரத் சீனி இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறார்.
அதை பற்றி சுபிக்ஷா கூறும்போது, “கடுகு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை கடுகு சுபிக்ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது, மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும் என நான் எதிர்பார்க்கவேயில்லை” என்றார்.
மேலும், “படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.
பாரத் சீனிக்கு ஜோடியாக நடிக்கும் சுபிக்ஷா அவரை பற்றி நகைச்சுவை யாக, “கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொன்னேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார் போல, கோலி சோடா 2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கோலி சோடா 2 உலகம் முழுவதும் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது.
ரஃப் நோட் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன். எற்கனவே வெளியான ப்ரோமோ காட்சிகளில் சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. அச்சு இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார், குறிப்பாக பொண்டாட்டி பாடல் கோலி சோடா படத்தின் சுவையை கொண்டு வந்திருக்கிறது.