காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ஸ்ரீதர் வெங்கடேசன்.
த்ரில்லர் இவருக்கு பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தையும் முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்தப்படம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு ஆச்சர்யம். தமிழ்நாடு முழுதும் இந்த கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன், இந்தப்படத்தை த்ரில்லர் பாணியில் உருவாக்கியது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும்.
அதுமட்டுமல்ல மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்சுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. வழக்கமான பாடல் ( காதல் பாடல் ) போல் இல்லாமல் உணர்வு பூர்வமான பாடலாக இருக்கும். படத்தின் உயிர்நாடியாக இருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை கடத்தும். மேலும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.
சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்பது இந்தப்படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
இந்தப்படம் முடிவடைந்த நிலையில் படத்தை பார்த்த சிலர், இந்தப்படம் வெளியாகும்போது, ‘அருவி’ படம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆச்சர்யம் தெரிவித்தார்களாம்.
மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.. போஸ்ட் புரொடக்சன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.