இன்று நாம் வசதியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சைபர் யுகத்தின் தொழில்நுட்ப வீரியம் நம்மால் கற்பனை செய்ய முடியாதது .எவ்வளவு வசதிகளும் சௌகரியமும் வருகின்றனவோ அதே அளவிற்கு ஆபத்து நிறைந்துள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைக்கிற கதை தான் இந்த ‘அதோமுகம்’ படம்.
அதோ முகம் என்றால் மறைமுகமாக அதாவது மறைந்துள்ள ஒரு முகத்தை குறிக்கும் சொல். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அந்த மறை முகம் இருக்கும். இப்படி தனது மனைவியின் மறைமுகத்தை விளையாட்டாகக் காண விரும்பும் கணவனுக்கு கிடைக்கும் அதிர்ச்சிகள், அது தொடர்பான முடிச்சுகள் புதிர்கள் பரபரப்பு சஸ்பென்ஸ் கொண்ட படம் தான் அதோ முகம்.
தன் அன்பு மனைவி மீது ஏராள பிரியம் வைத்திருக்கும் கணவன் மார்ட்டின். தன் மனைவிக்குத் தெரியாமல், கண்காணித்து, அவள் சார்ந்த தருணங்களைப் பதிவு செய்து ஒரு எதிர்பாராத பரிசு கொடுப்பதாகத் திட்டமிடுகிறான் கணவன். இதற்காக தன் மனைவியின் மொபைல் போனில் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து வைக்கிறான். இதன் மூலம், அவளது ஒவ்வொரு அசைவும் அவன் கவனத்திற்கு வருகிறது.மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் மார்ட்டினுக்கு பிறகு பேரதிர்ச்சிகள் வருகின்றன.
அவனும் பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்கிறான் அதிலிருந்து மீளத் தவியாய் தவிக்கிறான்.அதன் பிறகு நடப்பவை பரபர திக்திக் சஸ்பென்ஸ்கள்தான். அந்த பரபரப்புகள் கிளைமாக்ஸ் வரை தொடர்கின்றன.
நாயகன் மார்ட்டினாக எஸ். பி. சித்தார்த் நடித்து இருக்கிறார். தன்னைச் சுற்றி நிகழும் மர்மங்கள் பிரச்சினைகள் ஏன் என்று தெரியாமல் குழம்புவது, மனைவியிடம் பாசம் காட்டுவது, சிக்கல்களில் இருந்து தப்பிக்கப் துடிதுடிப்பது, சிறையில் வாடுவது எனப் பல்வேறு நடிப்பு தருணங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
நாயகி சைதன்யா பிரதாப்பும் நாயகனுக்கு சற்றும் சளைக்காமல் நடித்துள்ளார்.அப்பாவி தோற்றம்… அதன் பின்னே வஞ்சகம் எனச் சிறப்பான நடிப்பைக் காட்டி உள்ளார்.
சிறைவாசியாக சில காட்சிகளில் கௌரவ வேடத்தில் வருகிறார் அருண் பாண்டியன்.படத்தின் இறுதியில் வரும் அவரது வேடமும், அதிரடி நடவடிக்கைகளும், நாயகனின் நிலையைக்கண்டு வருத்தமடையும் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது.
சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமார், வழக்கமான ஊட்டியின் அழகுகளைக் தவிர்த்துவிட்டு, கதைக்கு ஏற்றவாறு பயணித்திருப்பது கதைக்களத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. மணிகண்டன் முரளியின் இசையில் பாடல்களும், சரண் ராகவனின் பின்னணி இசையும் நேர்த்தி.
யூகிக்க முடியாத திருப்பங்களைக் கொடுத்து அசரடித்து இருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ். அதோடு நமக்குத் தேவையான ஒரு கருத்தையும் சொல்லி இருக்கிறார்.
தகுதி இல்லாத படங்களுக்குக் கூட இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பைச் செயற்கையாகக் காட்டுவதுண்டு .ஆனால் இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகளைத் தூண்டும் வகையில் சில காட்சிகள் வருகின்றன.
குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த ஒரு கதைக்களத்தை மிக சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ்.குறுகிய இடத்திற்குள் டேபிள் டென்னிஸ் விளையாடுவது போல மிகக் குறுகிய வட்டத்துக்குள் கதையாடி ஜெயித்துள்ளார் இயக்குநர்.