‘அந்தகன்’ திரைப்பட விமர்சனம்

பிரஷாந்த் ,சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, யோகி பாபு, மனோ பாலா, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், செம்மலர், பூவையார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர் இயக்குநர் தியாகராஜன் இயக்கியுள்ளார்.ஸ்டார் மூவிஸ் பிரீத்தி தியாகராஜன் பெருமையுடன் வழங்கும் தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி உள்ளது.ஶ்ரீ ராம் ராகவன்கதையில்  , சந்தோஷ் நாரயணன் இசையில் , ரவி யாதவ் ஒளிப்பதிவில்,சதீஷ் சூரியா எடிட்டிங்கில்,செந்தில் ராகவன் கலை இயக்கத்தில்,பிரபு தேவாவின் நடன அசைவுகளில்,ஸ்டண்ட் மாஸ்டர் ராம் குமாரின் சண்டைப்பயிற்சியில் இப்படம் உருவாகி உள்ளது.

பிரஷாந்த் பார்வைச் சவால் கொண்ட இளைஞர் . பியானோ இசைக்கலைஞர். பாண்டிச்சேரியில் வசிக்கிறார். லண்டன் சென்று தன் திறமையைப் பட்டை தீட்டிக் கொண்டு ஒளிர வேண்டும் என்கிற கனவில் இருப்பவர்.ஒரு சிறிய ‘இனிய’ விபத்தில் பிரியா ஆனந்துடன் நட்பாகிறார். அதன் விளைவாக அவரது உணவகத்தில் பியானோ வாசிக்கிறார்.பல பிரபலங்கள் அங்கே வருவது வழக்கம். அப்படி  அங்கே வாடிக்கையாளராக வருகிறார் நடிகர் கார்த்திக் பிரஷாந்தின் இசைத்திறமை கண்டு ஈர்க்கப்படுகிறார் .தனது திருமண நாளை முன்னிட்டு தனது காதல் மனைவியின் முன்பு பியானோ பிரத்தியேகமாக வாசிக்க வேண்டும் என்று அழைக்கிறார்.அப்படிக் கார்த்திக் வீட்டுக்கு செல்லும் பிரஷாந்த் அங்கே எதிர்பாராத ஒரு திடுக்கிடும் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அது அவருக்கு வாழ்வா சாவா என்கிற சவால் கொண்ட போராட்டம்.அதிலிருந்து தப்பிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன?அவருக்குள் ஒளிந்திருக்கும் வேறு ‘மர்மங்கள்’ என்னென்ன என்பதை நோக்கித் திரைக்கதை செல்லும் பாதையும் பயணமும் தான் ‘அந்தகன்’.

சற்றே இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள பிரஷாந்தின் தோற்றத்தில் முதிர்ச்சி இல்லை . ஆனால் நடிப்பாற்றலில் முதிர்ச்சி வந்துள்ளது.எத்தனையோ நடிகர்கள் பார்வைச் சவால் நிறைந்த பாத்திரங்களை ஏற்று உள்ளார்கள் .பெரும்பாலும் நாடகத்தனமே பிரதிபலிக்கும். இப்படத்தில் பிரஷாந்த் ஏற்றுள்ள கிருஷ்ணா கதாபாத்திரம் தோற்றம் முதல் உடல் மொழி அசைவுகள் என அனைத்தும் இயல்புக்கு நெருக்கமாக உள்ளன. சமகால சுயநலமிக்க இளைஞர்களின் பிரதிநிதியாக அவரது பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்பாத்திரத்தில் படத்தில் அவருக்கு வாய்த்துள்ள பல்வேறு விதமான நடிப்புத் தருணங்களிலும் அழகாக ஸ்கோர் செய்கிறார் பிரஷாந்த்.

நடிகர் கார்த்திக் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். இப்படத்தில்
அவரது பழைய பாடல்களையும் படங்களையும் நினைவூட்டிப் பயன்படுத்தி இருப்பது நல்லதொரு நினைவூட்டல் அனுபவமாக ரசிக்க வைக்கிறது.

கார்த்திக்கின் மனைவிதான் சிம்ரன்.வாய்ப்பு கிடைத்தால் பிரித்து மேய்பவர்தான் சிம்ரன். இப்படத்தில் அவருக்கு யாரும் எதிர்பாராத பாத்திரம். அதில் நேர்நிலை எதிர்மறை என இரு வித தருணங்களிலும் தனது அனுபவ நடிப்பைக் காட்டியுள்ளார் சிம்ரன்.இவர்களிடையே வரும் சமுத்திரக்கனி தனது நடிப்பால் மட்டுமல்ல உடல் மொழியால் கூட கவனம் ஈர்க்கிறார். கதாநாயகனின் காதலியாக துள்ளல் நாயகியாக வரும் பிரியாஆனந்த் அந்த ஜூலி பாத்திரத்திற்கு அழகாகப் பொருந்துகிறார்.

நடிப்பு ராட்சசி ஊர்சியும் இதில் இருக்கிறார். சில இடங்களில் மிகை நடிப்பு தலையைக் காட்டினாலும் தனியாக நின்று ஆடுகிறார். அவருக்குப் பக்கபலமாக வரும் யோகிபாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் .கே . எஸ். ரவிக்குமார் ,வனிதா விஜயகுமார் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சில இடங்களில் மனோபாலா சிரிப்பு பட்டாசு கொளுத்திப் போடுகிறார்.

ரவி யாதவின் ஒளிப்பதிவு ஒரு பரபரப்பான சஸ்பென்ஸ் படத்திற்குத் தேவையான அளவு வெளிப்பட்டுள்ளது.கதையிலும் திரைக்கதையிலும் விறுவிறுப்பு இருக்கும்போது சதீஷ் சூரியாவின் படத்தொகுப்பு சற்று நிதானம் காட்டி இருக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘என் காதலும்’ ,’கண்ணிலே’ பாடல்கள் ஒலிக்கும் விதம் விதம்.
பியானோ இசைக்கலைஞர், பியானோ இசைக்கருவி என்கிற பின்னணியை மேலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம் சந்தோஷ் நாராயணன்.

ஸ்ரீராம் ராகவன் எழுதி இயக்கி இந்தியில் பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த அந்தகன்.அந்தப் படம் வெளியாகி நீண்ட நாள் ஆனாலும் கூட அது எதுவும் தோன்றாமல் தியாகராஜன் அதை நவீனப் படுத்தி நடப்புக் காலத்தோடு  இணைத்து ரசிக்க வைத்துள்ளார்.

பொதுவாக ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மறு உருவாக்கம் செய்யும்போது அப்படியே வைப்பதா அடுத்த மொழிக்காக மாற்றுவதா என்று ஒரு குழப்பம் வரும்.ஏனென்றால் அப்படியே எடுத்தால் மூல மொழியின் கலாச்சாரம் ஒவ்வாமை அளிக்கக்கூடும் . முழுக்க மாற்றி எடுத்தாலும் மூலமொழியின் அசல் ஆன்மா சிதைந்து விடக்கூடும்.இந்தக் குழப்பத்தை வென்று தமிழுக்காகச் சில அளவான மாற்றங்களைச் செய்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் தியாகராஜன்.ஒவ்வொரு மனிதனின் மனமும் குணமும், ரகசியமானவை. அப்படி இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களைச் சுற்றி மூடப்பட்டுள்ள கதவுகளை ஒன்றாக திறக்கும் திரைக்கதை சுவாரஸ்யம் ரசிக்கத்தக்கது.

ஸ்ரீராம் ராகவன், தியாகராஜன் ,பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் எழுத்துக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  விறுவிறுப்பான திரைக்கதையும் அனுபவமிக்க நடிகர்களின் பங்களிப்பும் கேள்விகள் எல்லாம் மறந்து ரசிக்க வைக்கின்றன. அவை இத் திரைப்படத்தைப் பார்வையாளர்களை நல்லதொரு திரை அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

நமது யூகத்திற்கு சவால் விடும் அளவிற்கு திடுக் திருப்பங்கள் நிறைந்துள்ள படம். உச்சக்கட்ட காட்சி வரைக்குமான அடுக்கடுக்கான முடிச்சுகளும் அவிழ்ப்புகளும் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லருக்கான அனுபவத்தை வழங்குகின்றன.

‘அந்தகன்’ நிச்சயமாக திருப்தி தரும் த்ரில்லர் திரை அனுபவம் தான்