நாயகி அமைராவுக்கு அவ்வப்போது நினைவு தப்புகிறது. அப்போது முன்ஜென்ம நினைவுகள் வருகின்றன. அப்படி கடந்து போன ஜென்மங்கள் ஒவ்வொன்றாக நினைவு வர காட்சிகள் விரிகின்றன.
பர்மா பின்னணியில் கூலித் தொழிலாளியாக இருக்கும் முருகப்பனுக்குமான ஒரு காதல்.
ஒரு ராஜாராணி காலத்துக் காதல். சென்னை வியாசர்பாடியில் காளிக்கும் தனக்கும் ஒரு காதல். தற்போதைய ஜென்மத்தில் ஐடியில்வேலை பார்க்கும் அஸவினுக்குமான காதல் என எல்லாம் விரிகிறது.
பர்மா மூணா ரூணா-சமுத்ரா, வியாசர்பாடி காளி-கல்யாணி, ராஜாராணி காலஇளமாறன்-செண்பகவல்லி, தற்கால அஸ்வின்-மது என நான்கு தலைமுறை காதலர்களாக வருகிறார்கள் தனுசும், அமைராவும். படத்தின் நீளம் கருதி அந்த ராஜா ராணி காதல் கதை நீக்கப்பட்டு, ஒரு பாடல் காட்சியில் மட்டும் இளமாறன்-செண்பகவல்லி ஜோடியின் காதல் இடம் பெறுகிறது.
போன ஜென்ம நினைவுகளுடன் தற்காலத்தில் இருக்கிறார் அமைரா .அதைச் சொல்லும் போது தற்கால காதலர் தனுஷ் உள்பட பலரும் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் அவர் சொன்னது போல தற்காலத்திலும் நடக்கவே நம்பத் தொடங்குகிறார்கள்.
எல்லா காதலும் எதிர்ப்பில் தோற்றது போல தற்காலக் காதலும் தோற்று விடுமோ என்று அஞ்சுகிறார் அமைரா.
போனஜென்ம வில்லனே இக்காலத்திலும் தொடர்கிறார். முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.
பர்மா பின்னணியில் கப்பல் பணியில் கடினமான வேலை செய்யும் தொழிலாளர்களில் ஒருவராக தனுஷைக் காட்டித் தொடங்குகிறது படம்.
ஒருராட்சச ராட்டின விபத்திலிருந்து தனுஷ் அமைராவைக் காப்பாற்றுவது போல பரபரப்பான காட்சியுடன் படம் தொடங்குகிறது. பர்மாவில் இனக்கலவரம். பர்மா காதலியுடன் தப்பிக்க அகதிகளின் கப்பலேறினால் போலீஸ் துரத்த. சுட்டுத்தள்ளப்பட்டு காதலர்கள் இருவரும் கடலில் விழுகிறார்கள்.
வியாசர்பாடியில் ஜாலியான பொறுக்கி போலத் திரியும் காளி தனுஷுக்கும் ஓவியர் தலைவாசல் விஜய் மகளுக்கும் காதல். திருமணம் கூடிவரும் நேரத்தில் ஒருவனை போட்டுத்தள்ளி விட்டு ஜெயிலுக்குப் போகிறார். காதலியோ வேறு திருமணத்துக்கு தயாராகிறார்.
வீடியோ கேம்ஸ் வடிவமைக்கும் நிறுவனத்தில் தனுஷ் வேலைபார்க்க, முதலாளி கார்த்திக் அவரது காதலி மீது கண் வைத்துவிட சிக்கல்.முடிவு என்ன ?
இப்படி 3 தலைமுறைக் காதல். இந்தக் கதையை சிக்கலில்லாமல் காட்சி பிரமாண்டத்துடன் சொல்லியிருக்கிறார். இயக்குநர் கே.வி. ஆனந்த்.
தனுஷ் 3 வித வேடம் 3 வித நிறம் காட்டி அசத்துகிறார். பர்மா தொழிலாளியாக மீசை இல்லாத முகத்துடன் மிரட்டியவர், வியாசர்பாடி காளியாக சுருள் முடியுடன் சென்னைபாஷை பேசி நம்மை அள்ளுகிறார்.
தற்கால ஐடி இளைஞராக யதார்த்தமாக தோன்றி கவர்கிறார். நாயகி யார் இந்த அமைரா இவ்வளவு சுமாரா?அவர் மட்டும் சரியாக அமையவில்லையே ஏன்?. அவர்தான் படத்தின் பலவீனம். அவர் கோணத்தில் கதையே நகர்கிறது ஆனாலும் இப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரியா?.
கார்த்திக் வில்லனாக வந்தாலும் தன் அனாயச நடிப்பில் அள்ளுகிறார் கைதட்டல்களை. .அவரது நடிப்பும் உடல் மொழியும் அடடா. !
பர்மா ,சென்னை என பின்புலங்களில் பாடல்காட்சிகளில் விஷூவல் ட்ரீட் தருகிற ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாசின் உழைப்பு தெரிகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் ஜமா .அதன் உச்சம் அந்த டங்கா மாரி பாடல்தான். பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார், ஹாரிஸ். படத்தின் கதை கற்பனையா பிரமையா உண்மையா என்பதில் குழப்பம் வருகிறது. இப்படிச் சில குறைகள் இருந்தாலும் இயக்குநரின் திறமையால்,உழைப்பால் ‘அனேக’னில் ரசிக்க நிறையவே இருக்கிறது.