‘அன்சார்ட்டட்’ விமர்சனம்

காமிக்ஸ் கதைகள் பாலிவுட்டில் திரைப்படம் ஆவது சகஜம். அதேபோல் வீடியோ கேம்களும் திரைப்படம் ஆகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் படம் தான் இது.சோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரான ‘அன்சார்ட்டர்ட்’ அதே பெயரில் படமாக வந்துள்ளது. படம் எப்படி ?

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் புதையலை மீட்டெடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். ஆனால் புதையலை எடுக்க யாராலும் முடியவில்லை. அதே சமயம், புதையலுக்கான வாரிசுகளாக நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க சுல்லி, நேட், மற்றும் க்ளோயி கூட்டணியும் திட்டமிடுகிறது.பல மர்மங்கள் நிறைந்த அந்தப் புதையலை இரு தரப்பில் யார் கைப்பற்றினார்கள், அதன் பின்னணியில் இருக்கும் அபாயங்களும், சவால்களும் என்ன? என்பதே படத்தின் கதை.

நேட் பாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்திருக்கிறார். ‘ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்’ படத்திற்கு பிறகு நடித்திருக்கும் படமாக வந்துள்ளதால், இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யும் விதத்தில் டாம் ஹாலண்டும் நடிப்பில் அதிரடி, சாகசம், நகைச்சுவை என அனைத்து வகையிலும் தனது திறமையை காட்டியுள்ளார்.

சுல்லியாக வரும் வால்பெர்க் தனது பண்பட்ட நடிப்பு மூலம் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

க்ளோயியாக வரும் சோபியா அலி, அதிரடியான சண்டைக்காட்சிகள் மூலம் கவனம் பெறுகிறார். அதே போல கேப்ரியல், ஆண்டோயோ பேண்டரஸ் ஆகியோரும் பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

அன்சார்டட் கேமின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, ரஃபே ஜட்கின்ஸ், ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹாலோவே ஆகியோர் எழுதிய திரைக்கதைக்கு, தனது கற்பனை மூலம் பிரமாண்ட காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் ஃப்ளீஷர்.

படத்தில் வரும் விமான சண்டைக்காட்சி நமக்குள் குறைந்த அழுத்த மின்சாரத்தை ஏற்றும் வகையில் இருக்கும்.

வி.எப்.எக்ஸ் ரீதியாக படத்தில் பிரமாண்டத்தை காட்டி ரசிகர்களை வியர்க்க வைத்திருக்கிறார்கள். அதேபோல், தமிழ் மொழிப்பெயர்ப்பில் இடம்பெறும் வசனங்களும் படத்தில் இருக்கும் சில குறைகளை மறக்கடித்து நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.

’அன்சார்டட்’ சாகசப் படைப்பு ஹாலிவுட் ரசிகர்களை திருப்திப்படுத்தும் .