நயன்தாரா அன்னபூரணியாக பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை நீலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.தமன் எஸ் இசையமைத்திருக்கிறார்.சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். ஜி துரைராஜ் கலை இயக்கம் செய்துள்ளார்.அருள் சக்தி முருகன் வசனம் எழுதியுள்ளார்.ஜீ ஸ்டுடியோஸ், நாடு ஸ்டுடியோஸ் -டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
ஸ்ரீரங்கத்தில் அக்ரஹாரத்தில் பிறந்த பிராமணச் சிறுமி அன்னபூரணிக்கு சமையல் என்றால் மிகவும் விருப்பம். தந்தையோ ஆச்சார பிராமணர், கடவுளுக்குப் பிரசாதம் செய்பவர். அன்னபூரணியோ சமையலில் உச்சத்தைத் தொட்டு சாதனை படைக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறாள்.குடும்ப மதக் கட்டுப்பாடுகள் குறுக்கே நிற்பதால் எம் பி ஏ சேர்ந்து படிப்பதாக பொய் சொல்லி சமையல்கலை -கேட்டரிங் படிக்கிறாள்.சமையல் கலையில் அசைவ உணவு சமைக்க வேண்டி வருகிறது.அதற்கு வரும் ஆச்சாரத் தடைகளை உடைத்து கண்ணும் கருத்துமாகப் படிக்கிறாள்.
தொழிலில் உயரம் செல்லச் செல்ல குறுக்கீடுகளும் இடையூறுகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. அனைத்தையும் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறாள் என்பதுதான் ‘அன்னபூரணி’ படத்தின் கதை.
”நானும் இந்தியாவின் பெஸ்ட் செஃப் ஆவேன் ”என்ற கனவில் இருக்கிற சிறுமி தன் கனவை வீட்டில் கூறும் போது.
”கனவுல கோட்டை கட்டாதே ,தெருவில் கிரிக்கெட் விளையாடற எல்லாருமே சச்சின் டெண்டுல்கர் ஆக முடியாது.பஸ் கண்டக்டர் எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது ”என்று எதிர்மறையாகக் கூறப்படுகிறது.
”பிடிச்சத பண்ணுனா லட்சத்துல ஒருத்தர் மட்டும் இல்லம்மா லட்சம் பேருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியும்”என்று நேர் நிலையாகப் பதில் கூறுகிறாள் அன்னபூரணி.
படத்தில் முன்னோட்டத்தில் இடம்பெற்ற இந்தச் சிறு வசனமே படத்தின் கதையைக் கூறிவிடும்.
அப்படி ஆச்சாரத் தடைகளை மீறி தனது கனவான சமையல் கலைஞராக வெற்றி பெறும் அன்னபூரணியின் கதை தான் இந்தப் படம்.
படத்தின் ஆரம்பத்தில் வரும் சில காட்சிகளிலேயே அன்னபூரணியின் குடும்ப சூழ்நிலையை நமக்குக் காட்டும் வகையில் அக்ரஹாரத்துக்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.ஸ்ரீரங்கத்து கோபுரங்கள், வீதிகள், அக்ரஹாரம், மனிதர்கள், பாசுரங்கள் என அந்தச் சூழலுக்குள் நம்மை அமர வைக்கிறார். கதை சமையல் கலை சார்ந்து வளர்ந்து நகரும்போது நட்சத்திர ஓட்டல் சமையலறைக்குள் நம்மைப் பார்வையாளராக்கி விடுகிறார்.
படத்தை இயக்கிய நீலேஷ் கிருஷ்ணா ஆண் என்றாலும் பெண்களின் மன எண்ணங்களின் கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. பெண்கள் எந்தத் துறையிலும் தன்னை நிரூபிக்கவும் சாதிக்கவும் தடை தாண்டும் ஓட்டக்காரர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறது படம்.
நயன்தாராதான் டைட்டில் பாத்திரம் சுமந்திருப்பவர்.அவர் அந்த அன்னபூரணியாகவே மாறி வாழ்ந்திருக்கிறார்.மிகை நடிப்பு இல்லாமல் இயல்பான நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு அழகு செய்துள்ளார்.நல்ல நல்ல உணர்ச்சித் தருணங்கள் வாய்த்துள்ளதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
அடுத்தது அவரது தந்தை ரங்கராஜனாக நடித்துள்ள அச்யுத்குமார் பல்வேறு விதமான மனநெருக்கடிகளை முகபாவனையில் காட்டி மிகப் பிரமாதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெய் பாத்திரத்திற்குப் பெரிய ஆழமான வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். புகழ்பெற்ற தலைமை சமையல் கலைஞராக வரும் சத்யராஜ் தன் தோற்றம் உடல் மொழியின் மூலமே பல பக்க வசனங்களைப் பேசாமலேயே அந்தக் காட்சிகளை நிறைவாக மாற்றுகிறார். சத்யராஜின் மகனாக வரும் கார்த்திக் குமார் தோற்றத்திலும் குணத்திலும் மாறாத எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.அதேபோல் படத்தில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி என பிற கலைஞர்களும் தங்கள் இருப்பை நினைவில் வைத்துக் கொள்ளும்படியான நடிப்பை வழங்கி உள்ளனர்.
வணிக மதிப்புள்ள நட்சத்திரமான நயன்தாரா தான் படத்தின் கதை மையம் என்றாலும் மற்ற பாத்திரங்களுக்கும் உரிய இடம் கொடுத்து நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
“நம்ம நாட்ல விடுகளில் பெரும்பாலும் லேடீஸ்தான் சமையல் செய்றாங்க. ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டல்களுல ஏன் ரொம்ப குறைவான அளவுல லேடீஸ் செஃப்பா இருக்காங்க” என்று படத்தில் சத்யராஜ் கேட்கும் கேள்விக்கு அன்னபூரணியின் போராட்டங்களின் வழியே இயக்குநர் பதிலாக சொல்லியிருக்கிறார் .இந்த உணவுப் பயணத்தின் வழியே பெண் விடுதலை, சமூகம், ஜாதி, இப்படிப் பல கருத்துகளைப் படம் பேசுகிறது.
சமையல் என்பதை ஒரு வேலையாகக் கருதாமல் அது ஒரு கலை மட்டுமல்ல உணர்வு பூர்வமானது என்பதை வெளிப்படுத்தும் காட்சிகள் படத்தில் உள்ளன. எதையும் வசனமாகக் கூறாமல் காட்சியாக்கி நம் கண் முன் நிறுத்துவது இயக்குநர் உத்தி .அதே நேரம் அழுத்தமான கூர்மையான வசனங்களும் படத்தில் உள்ளன.படத்தின் இன்னொரு அம்சமாகப் பாராட்டப்பட வேண்டியது ஆங்காங்கே தெறிக்கும் அர்த்தபூர்வமான கூர்மையான வசனங்கள் .வசனம் எழுதிய அருள் சக்தி முருகன் பாராட்டுக்குரியவர்.
தமனின் பின்னணி இசையும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு அழுத்தம் தந்து இயக்குநருக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.
அன்னபூரணி நிலைமையை அவளை ஒரு சிறுமியாக உருவகித்து அவ்வப்போது கிராபிக்ஸ் காட்சிகளின் மூலம் காட்டும் இயக்குநரின் உத்தி பாராட்டுக்குரியது. படத்தில் காட்சிகளுக்கும் திரைக்கதைக்கும் நன்றாக ஆயத்தம் செய்து மெனக்கெட்டு இருக்கிறார்கள்.சின்ன சின்ன காட்சிகளாக ஏராளம் வருகின்றன ஒவ்வொன்றும் மனதில் பதிகிறது. இயக்குநர் தலைமையிலான படக்குழுவிற்கு நிச்சயம் பாராட்டு தரலாம்.
துளியும்ஆபாசக் கலப்பில்லாமல் வழக்கமான மசாலா நெடி இல்லாமல் மண மணக்கும் நிறைவான சாப்பாடு போல தரமான ஒரு படத்தை வழங்கி இருக்கிறார்கள்.
படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.எந்த நெருடலும் இன்றி குடும்பத்தினர் அனைவரும் பார்த்து மகிழலாம். அன்னபூரணி நிறைவளிப்பான்.