சிவகார்த்திகேயன், சாய் பல்லவி,புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீ குமார், ஷியாம் மோகன்,கீதா கைலாசம், பால் பி. பேபி, நவ்யா சுஜி,சுகன்யா சங்கர், ஷ்யாம் பிரசாத் ராஜகோபால் நடித்துள்ளனர்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு சி.எச்.சாய்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்து ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
நாட்டுக்காகத் தன்னுயிரை ஈந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையை
(India’s Most Fearless: True Stories of Modern Military ) அடிப்படையாக வைத்து இந்த பயோபிக் திரைப்படம் உருவாகியுள்ளது.
ராணுவத்திற்குச் சென்றால் உயிராபத்து என்று அஞ்சுகிற குடும்பத்தைச் சேர்ந்தவர் முகுந்த் .அவர் ஒரு மலையாள கிறிஸ்தவப் பெண்ணைக் காதலிக்கிறார். ராணுவத்திற்கு செல்லும் இளைஞனை தன்மகள் காதலித்தால் அவள் குடும்ப வாழ்க்கை கேள்விக்குரியதாகும் என்று மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்கிறது இந்து ரெபேக்கா வர்கீசின் குடும்பம்.
இப்படி இரு குடும்பத்தினருமே முகுந்த் ராணுவத்தில் இருப்பதை விரும்பவில்லை.
இந்நிலையில் ராணுவத்திற்குச் சென்று தனது வீர தீர செயலால் புகழ் பெற்று மேஜர் நிலைக்கு உயர்கிறார் முகுந்த். அவர் பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் தீவிரவாதிகளை வேட்டையாடப் போர்க்களத்தில் சந்திக்கும் போராட்டம் ஒரு புறம்,குடும்பத்தைப் பிரிந்தது தவிக்கும் தந்தையின் தவிப்பு மறுபுறம், கடைசியில் நாட்டுக்காகச் செய்யும் தியாகம் என்று காட்சிகளாக விரித்து விளக்குகிறது இந்தப் படம். வீரமும் தியாகமும் பாசமும் கலந்த இந்தக் கதை டாங்கிகள் தடதடக்க, துப்பாக்கிகள் முழங்க, குண்டுகள் வெடிக்க கூறப்பட்டுள்ளது.
இதில் ராணுவ மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தோற்றத்தைப் பார்த்தாலே அவர் ஒரு கலகலப்பான வணிகக் கதாநாயகன் மனப்பிரதி உருவாகும். கேளிக்கை கதாநாயகனாக இருந்த மன பிம்பத்தை இதில் அவர் உடைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சில நிமிடங்களிலேயே அந்த ரசவாத மாற்றத்தைப் பார்வையாளர் மனதில் ஏற்படுத்தி விடுகிறார் .
ஆரம்பகட்ட காட்சிகளில் தனது புஜ வலிமை காட்டும் ராணுவ வீரராக அவர் வருகிறார். பிறகு ஒரு சண்டைக் காட்சி வருகிறது. அது ஓர் அசாதாரண நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் ஒத்திகை என்றாலும் பிறகு போகப் போக நிஜமான சண்டைகள் போராட்டங்கள் வியூகங்கள் என்று ராணுவ தளத்தில் காட்சிகள் செல்கின்றன.
இதில் முகுந்த்தைக் காதலிக்கும் கிறிஸ்தவ பெண் இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் அவர் தனது நடிப்புக்கான தருணங்களை அருமையாக பயன்படுத்திக் கொண்டு ஒளிமிகு நட்சத்திரமாக மிளிர்கிறார்.தனது குடும்பத்தை மீறிக் காதலிப்பது ,காதலன் மீது முரட்டு அன்பைக் காட்டுவது, கணவருடன் யுத்தகளச் சூழலில் பேசுவது,தொலைபேசியில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு மனம் துடிப்பது, இறுதியில் காதல் கணவனின் மரணச் செய்தியறிந்துஒரு கணம் துடித்து மறுகணம் அவரது விருப்பப்படி அழாமல் அடங்கி தனது அழுகையையும் இழப்பின் புழுக்கத்தையும் உள்ளுக்குள்ளேயே செரித்துக் கொண்டு அழுகையை நிறுத்திக் கொள்வது, இறுதியில் தேசவிருது வாங்கும் போது ஒரு பெருமையை முகத்தில் காட்டுவது என்று அவர் நடிப்பிற்குச் சான்று சொல்லும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.
மற்றபடி படத்தில் சிவகார்த்திகேயன் தாயாக கீதா கைலாசம் வருகிறார். படத்தில் புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீ குமார், ஷியாம் மோகன்,கீதா கைலாசம், பால் பி. பேபி, நவ்யா சுஜி,சுகன்யா சங்கர், ஷ்யாம் பிரசாத் ராஜகோபால் என நடித்த நடிகர்கள் அனைவரும் அவரவர் பணிகளைச் செவ்வனே செய்து மனதில் பதிகிறார்கள்.
எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தலைவன் அல்டாப் பாபா வேட்டையாடப்படுகிறான். அவனுக்குப் பிறகு அடுத்தவனாக வரும் தலைவன் வாஹித் அமர் வேட்டை ஆரம்பிக்கிறது. இந்த நெருக்கடியான தருணங்களில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அவர்களது போராட்டங்களும் வாழ்க்கைச் சூழலும் எத்தகைய கடினமானவை என்பதைப் பல்வேறு வகையான காட்சிகள் மூலம் விளக்குகிறார்கள். நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்குவதற்கு அவர்கள் இரவு பகலும் தூங்காமல் காவல் காத்துக்கொண்டு இருப்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
மொத்தத்தில் இந்தப் படம் நாட்டுக்காகத் தியாகம் செய்யும் ஒரு ராணுவ மேஜரின் கதை என்றாலும்,நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் அனைவரையும் மனதில் நினைத்து மரியாதை கொள்ளச் செய்கிறது.
இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளதால் அவரது திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில் பெருமைமிகு படைப்பு வரிசையில் ஒன்றாகியுள்ளது.
படத்தில் பனிசூழ் மலைகள் கொண்ட காஷ்மீர் பின்புலத்தில் பிரம்மாண்டமான காட்சிகளை,
ராணுவப் பின்னணிக் காட்சிகளை அசத்தலான முறையில் ஒளிப் பதிவு செய்துள்ளார் சி .ஹெச். சாய் .படத்தின் தன்மை கெடாமல் பின்னணியில் பிரமாதப்படுத்தியுள்ளார் ஜி.வி .பிரகாஷ் குமார். மொத்தத்தில் இந்தப் படம் நமது ரத்தத்தில் நாட்டுப்பற்றை ஊட்டுகிறது.
நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும் கம்பீரமாக நினைத்து வணங்க வைக்கிற படமாக மாறி உள்ளது. ‘அமரன்’ ஜெயிப்பான்.