அமெரிக்காவில் ‘ ஏலேலோ’ என்கிற தமிழ் இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. இதில் இந்திய ,அமெரிக்கக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
உலகமயமாக்கல் மற்றும் ஊடக வளர்ச்சியின் காரணமாக இப்போது உள்ளூர் மொழியான தமிழுடன் உலகமொழி ஆங்கிலமும் கலந்து பேசிப் புழங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ் ஆங்கிலம் இணைந்த ஆல்பமாக ‘ஏலேலோ’ உருவாகியிருக்கிறது.
இது ஒரு தமிழ் ஆல்பம் தான் என்றாலும் ஆங்கிலமும் கலந்து வருவதால் இதை மொழி கடந்து பலராலும் ரசிக்கப்படும் என்று நம்புகிறது தயாரிப்புக்குழு.
இந்த ஆல்பத்தில் ஜாய்ஸ் ஜான், ஜெய் மட்,அலிஷா தாமஸ் ஆகியோர் பாடியுள்ளார்கள். இது ‘மியூசிக் 247’ ( Muzik 247)யூடியூப் சேனலில் இன்று வெளியாகி இருக்கிறது.
இந்த ‘ஏலேலோ’ தமிழ் ரொமாண்டிக் விறுவிறு ஆல்பம் ஜாய்ஸ் ஜான் இசையில் உருவாகியுள்ளது.
இந்திய-அமெரிக்க பாடகர் ஜெய் மட், மற்றும் அலிஷா தாமஸ் இதில் பாடியுள்ளார்கள் .அது மட்டுமல்ல காட்சிகளிலும் தோன்றி நடித்துள்ளனர். இதன் காட்சிகள் அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தின் கிராமப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளன. அந்தக் கிராமப் பகுதிகள் நகரின் சாயல் இல்லாமல் இருப்பதால் அது தமிழகத்தின் கிராமம் போலவே தோற்றமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை ஜிமிக்கா மேத்தாவுடன் இணைந்து இயக்கியுள்ள ஜெய் மட் நடித்தும் இருக்கிறார். ஒளிப்பதிவு செய்ததுடன் படத்தொகுப்பும் செய்திருக்கிறார் எய்டன் கைனஸ். இதற்கான வரிகளை என். ஜெயக்குமார் எழுதியிருக்கிறார்.
ஜேஜே வீடியோ மற்றும் ஜோனிக் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளன.
ஜாய்ஸ் ஜான் இசையமைப்பாளர் கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர் .அவர் 2013ல் ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட்டார். ‘அறியாதே நினையாதே’ என்ற அந்த ஆல்பம் சொத்து பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
மருத்துவ படிப்பை படித்துக் கொண்டிருந்தவர் ,அந்த ஆல்பம் பெரிய வெற்றி பெற்றாலும் இடையில் இடைவெளி விட்டிருந்தார் .இப்போது முதுகலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார்.
அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தொழில்முறைப் பாடகரான ஜெய் மட் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்பவர். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துபவர்.அவருக்கு ஜாய்ஸ் ஜானின் இசைத் திறமை மீது ஈர்ப்பு ஏற்படவே இந்தியா வந்தபோது சந்தித்திருக்கிறார்.இருவருக்குள்ளும் புரிதலுடன் இணக்கம் ஏற்படவே இசையால் இணைந்து அடுத்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் ‘ஏலேலோ’ மூலமாக.
இந்த ‘ ஏலேலோ’, ஒரு தமிழ்ஆல்பமாக இருந்தாலும் ஆங்கிலத்திலும் வரிகள் வரும். தமிழும் ஆங்கிலமும் இப்போது சர்வதேசத்தில் புரிந்துகொள்ளும் மொழிகளாக இருப்பதால் இருமொழிகள் இணைந்து இரு தரப்பு ரசிகர்களை கவரும்படி ஆல்பம் உருவாகி உள்ளது.
இதில் பாடியுள்ள பாடகி அலிஷா தாமஸ் ஏற்கெனவே பாடிய ‘டோனு டோனு டோனு’பாடல் கடல் கடந்து பிரபலமானது.
‘ஏலேலோ’ முழுக்க முழுக்க இளைஞர்களுக்கானதாக உருவாகியுள்ளது. “ஏலேலம்மா.. ஏலேலம்மா.. என்று பாடல் தொடங்கியதுமே கேட்பவரை, பார்ப்பவரை மனம் துள்ளி ஆட வைக்கும்.
இந்தியாவில் இசைய மைக்கப்பட்டு, அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தப்பட்டு இரு நாடுகள் இணைந்த கலை முயற்சியாக இது உருவாகியுள்ளது.
இந்த ஆல்பம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது.கோவிட் 19 நெருக்கடியால் வெளியாகவில்லை.எனவே அக்டோபர் 24 -ல் வெளியாகி உள்ளது.
“இது முழுக்க முழுக்க இளைஞர்களின் கூட்டு முயற்சியாகும் .இதில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை .ஆனால் புதுமையை விரும்பும் ரசிகர்களை நம்பி இதை வெளியிடுகிறோம் .இதற்கு ஆதரவு தந்து புதிய இளைஞர்களை ஊக்கப்படுத்தி வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பிடித்திருந்தால் பகிருங்கள்” என்கிறார் இயக்குநர் ஜெய் மட்.
YELELO Song Link