வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர் வடிவத்தில் படைப்பாளிக்குச் சில சுதந்திரங்கள் உள்ளன.அதை சரியாகப் பயன்படுத்தினால் எவ்வளவோ கலைப்படைப்புகளைக் கொண்டு வர முடியும் .ஆனால் இந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு திகில்,வன்முறை ,ஆபாசம், கெட்ட வார்த்தைகள் பேசுதல் போன்றவை பல இணையத் தொடர்களில் இடம்பெற்று வந்தன.
இந்தத் தொடர்களைக் குடும்பத்துடன் காணமுடியாது. வீட்டில் பார்க்க முடியாது. ஆனால் இந்த வடிவம் வீட்டுக்குள்ளும் நுழைந்து வெற்றி பெறும் வகையில் நாகரிகமாக உருவாகியுள்ள தொடர்தான் அம்முச்சி சீசன் 2.ஏற்கெனவே வெளியாகியிருந்த அம்முச்சி சீசன் 1 மாதிரியான கதைக்களம் கொண்ட இது, ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது .
கதாநாயகன் தனது பாட்டி ஊருக்குச் செல்கிறான் அங்கு ஒரு பெண்ணைப் பார்க்கிறான் ; சில நாட்களில் இருவருக்கும் காதல் மலர்கிறது . காதலிக்கிறார்கள் .கதாநாயகிக்கோ அந்த கிராமத்திலிருந்து வெளியே சென்று மேல் படிப்பு படிக்க ஆசை. ஆனால் கதாநாயகியின் தந்தை மோசமான குடிகாரர்,பத்தாம் பசலியான பேர்வழி. அவர் சொல்லும் பையனுக்குத் தான் மகள் கழுத்தை நீட்ட வேண்டும் என்று இருக்கிறார்.இப்படிப் பட்ட சூழலில் கதாநாயகன், கதாநாயகியின் தந்தையை எப்படிச் சமாளித்தார் பிறகு நாயகியின் ஆசையை நிறைவேற்றினாரா? என்பதுதான் கதை செல்லும் பாதை.
நாயகன் அருண் மிக இயல்பாக ஈர்க்கிறார். முதலில் விலகித் தடுமாறினாலும் கதையில் பாதி கடந்த பின் நமக்குள் கலந்து விடுகிறார்.நாயகி மித்ராவின் நடிப்பில் துளியும் மிகைதெரியவில்லை.சின்னமணி பாட்டி கோவை வட்டார வழக்கில் பேசிக் கலக்குகிறார்.அனைத்து நடிகர்களும் மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து கொங்கு மண்டல கிராமத்து வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள்.
மண் மணம் மாறாத கதை. சந்தோஷ்குமார் எஸ்.ஜே-வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார அழகைப் படம் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக வைக்கிறார். அவர் மூலம் கொங்குப்பகுதியின் நிலக் காட்சிகளை ரசிக்கலாம்.
மண்வாசனை வீசும் கிராமத்தின் கதைக்கேற்ப
விவேக் சரோவின் இசை பயணித்திருக்கிறது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கிராமத்து வாசனையோடும் நகைச்சுவை தூவலோடும் யதார்த்த வசனங்களோடும் நல்லதொரு கருத்தையும் சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியைப் பாராட்டி வாழ்த்தலாம்.
துளியும் ஆபாசம் இல்லாமல் மண் மணத்தோடு வெளியாகியுள்ள வெப் சீரிஸ் இது என்பதால் குடும்பத்தோடு பார்த்து ஆஹா ஓடிடியில் கண்டு ‘அம்முச்சி-2’-ஐ ரசிக்கலாம்.