‘அரண்மனை 4’ விமர்சனம்

சுந்தர் சி, தமன்னா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் , சேஷு மற்றும் பலர் நடித்துள்ளனர்.சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

அரண்மனை என்ற பட வரிசையை பேய்ப் படங்களாக எடுத்து வெற்றி பெற்றவர் சுந்தர்.சி. இது நான்காவது பாகமாக வந்துள்ளது.

சரி படத்தின் கதை என்ன?

ஒரு தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தும் கதை என்று ஒரு வரியில் கூறினாலும் பல்வேறு வணிக அம்சங்களும் இதில் கலந்துள்ளன.

குடும்பத்தின் எதிர்ப்புகளுக்கு இடையே வீட்டை விட்டு ஓடிப் போய் காதல் திருமணம் செய்தவர் தமன்னா.இது பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தது ஆனால் திருமணம் செய்து கொண்ட தமன்னா இரு குழந்தைகளுக்குப் பிறகு ஏதோ பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்கிறார். இந்தத் தகவல் அண்ணன் சுந்தர்.சி. க்கு கிடைக்கிறது. தங்கையின் கணவர் சந்தோஷ் பிரதாப்பும் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தங்கையின் வீட்டிற்குச் செல்லும் அண்ணன் சுந்தர்.சி தனது தங்கையும், அவரது கணவரும் எப்படி இறந்தனர்? அவர்கள் வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன? தனது தங்கை மகளை கொல்லத் துடிக்கும் பேய் யார்? அந்த பேயிடம் இருந்து தனது தங்கை மகளைக் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் கதை.

பேய் படங்களுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் உண்டு.ஏற்கெனவே வந்த அரண்மனை படங்களின் கதைகளை போலவே கதை இருந்தாலும், இந்த முறை வழக்கமான அரண்மனை படங்களில் இருக்கும் கவர்ச்சி, குத்து டான்ஸ், காதல் போன்றவற்றை சுந்தர்.சி தவிர்த்திருக்கிறார்.
கதையே வழக்கமான கதை  என்பதால், வழக்கமான இந்த காட்சிகளும் இருந்தால் படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதே சுந்தர்.சி.யின் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்திருக்கும்.

சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், லொள்ளு சபா சேசு என்று பெரிய பட்டாளமே உள்ளது. ஆனால், பிரதான காட்சிகள் யோகி பாபுவிற்கும், வி.டி.வி. கணேஷ், கோவை சரளாவிற்கே உள்ளது.நகைச்சுவை காட்சிகளில் க்ராபிக் சும் சேர்ந்துள்ளது ஒரு அமர்க்களம் தான். லொள்ளு சபா சேசு தான் வரும் இடங்களில் எல்லாம் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார். கோவை சரளாவுடனான காதல் காட்சிகள் அனைவரையும் கைதட்டி ரசிக்க வைக்கிறது.

குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சிக்கு முன் வரும் சேசு, யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் நகைச்சுவை கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கும்.

இதற்கு முன்பு வந்த அரண்மனை படங்களில் அரண்மனையே பிரதானமாகக் காட்டப்பட்டது. இதில் அரண்மனை போன்ற ஒரு வீடு வருகிறது.அடர்ந்த காடுகள் பயமுறுத்தும் பின்னணி உள்ள நிலக்காட்சிகள் போன்றவை படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் 20 நிமிடங்கள்கொண்ட காட்சி மிகுந்த விறுவிறுப்பானது. கே.ஜி.எப். வில்லன் ராமச்சந்திர ராஜு சாமியார் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  

இதுவரை கவர்ச்சி முலாம் பூசிய கதாநாயகியாக வலம் வந்த தமன்னா, இதில் பாசத்தையும் நல்ல உணர்ச்சிகளையும் காட்டும் தாயாக வந்து அனைவரின் அனுதாபங்களையும் அள்ளுகிறார்.
குறிப்பாக, குழந்தைகளைக் காப்பாற்ற அவர் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே போராடுவது படம் பார்ப்பவர்களைப் படத்துடன் ஒன்றவைத்தது.

தமன்னாதான் படத்தின் பலம் என்பதற்கு அந்தக் காட்சி உதாரணமாக அமைகிறது. ராஷி கண்ணாவிற்கு படத்தில் பெரிய வேலை இல்லை.

இதற்கு முன்பு வந்த அரண்மனை படங்களில் பின்பற்றிய சில கவர்ச்சி, காதல், பிளாஷ்பேக் போன்ற விஷயங்களை இந்தப் படத்தில் சுந்தர்.சி தவிர்த்திருப்பது படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. படத்தில் வரும் குழந்தைகளின் நடிப்பு அபாரம்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு தான். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி அந்த காடுகள், இருளில் நடக்கும் காட்சிகளை அற்புதமாகபபடமாக்கியுள்ளார். எடிட்டர் பென்னி ஆலிவர் எடிட்டிங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று அரண்மனை 4 பார்க்கலாம்.