அறிமுக நாயகன் இஷான் நடிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் எம்ஜி பி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அரியவன்’.
இப்படத்தில் இஷானுடன், பிரனாலி, டேனியல் பாலாஜி, சத்தியன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரமா, ரவி வெங்கட்ராமன், கல்கி ராஜா, நிஷ்மா செங்கப்பா, ரமேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் போன்ற தனுஷ் படங்களை இயக்கி தனுஷ் ஸ்பெஷலிஸ்ட் ஆக அறியப்பட்ட மித்ரன் ஆர். ஜவகர் இந்த ‘அரியவன்’ படத்தை இயக்கி உள்ளார்.
இப்படம், பொள்ளாச்சி பாலியல் பிரச்சினைகளை நினைவூட்டும் விதத்தில் உருவாகியுள்ளது.
காதல் என்கிற பெயரில் நாடகக் காதல் செய்து பெண்களை வளைத்து பின்னர் அவர்களை ஏமாற்றி நெருக்கமான வீடியோக்கள் எடுத்து மிரட்டி பாலியல் நோக்கத்தில் தவறாகச் செயல்படுத்த வைக்கிறது ஒரு கும்பல். சம்மதிக்க மறுத்தால் சமூக ஊடகங்களில் அந்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி குற்ற செயல்கள் செய்து வருகிறது அந்தக் கும்பல்.சம்மதிக்காதவர்களைக் கொலை செய்யவும் துணிகிறது அந்த நாசக்கார கும்பல்
நாயகன் இந்தக் கொடுமையை தனது காதலியின் மூலம் அறிந்து அந்த வில்லன் கும்பலுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து எதிர்க்கிறான்.இதனால் வெகுண்ட வில்லன் கும்பலோ இவர்களை அழிக்கத் துடிக்கிறது. சம்பந்தப்பட்ட பெண்களையும் அழிக்க நினைக்கிறது. நாயகன் தனது முயற்சியில் வெற்றி பெற்றானா இல்லையா என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் நாயகன் ஜீவாவாக அறிமுக நாயகன் இஷான் நடித்துள்ளார்.கொடூர வில்லன் துரைப்பாண்டியாக டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.நாயகி மித்ராவாக பிரனாலி நடித்துள்ளார்.
நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் கபடி வீரர் ஜீவாவாக வரும் இஷான் ஒரு ஆவேசமான நாயகனாக ஆக்சன் காட்சிகளில் பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் அவர் பாஸ் மார்க் வாங்குகிறார். ஆனால் முக பாவனை காட்டும் நடிப்பில் மேலும் அவர் மேம்பட வேண்டும். இவர் எதிர்மறையான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் துணிந்தால் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
புதிதாக அறிமுகம் ஆகும் நாயகன் இஷான் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பாமல் இப்படி ஒரு கதையில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்திருப்பதைப் பாராட்டலாம்.பிறருக்கும் வாய்ப்பு அளித்து உயர்வதுதான் சினிமாவில் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது .மற்ற பாத்திரங்களுக்கும் அவரவர்களுக்கான இடத்தை அளித்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
டேனியல் பாலாஜி தனது வழக்கமான உடல் மொழியில் மூலம் ஆர்ப்பாட்டம் செய்யாமலே கவர்ந்து விடுகிறார்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நிஷ்மா செங்கப்பா, நாயகியின் தோழி ஜெஸ்ஸியாக நடித்துள்ளார் நாயகனின் நண்பனாக சத்யன் வருகிறார்.
மற்றவர்கள் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர் என்றே தோன்றுகிறது.
பாதிப் படம் வரை இது ஒரு காதல் கதை என்று தோன்ற வைக்கும் தொனியில் செல்லும் கதை, மீதி படத்திலிருந்து பெண்கள் பிரச்சினை பற்றிப் பேசுகிறது.பாலியல் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் பெண்கள் மையப்படுத்தும் கதையாகவும் மாறுகிறது.
படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன்,கிரிநந்த் , வேத்சங்கர் என மூன்று இசையமைப்பாளர்கள்.
பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணியில் சோபிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷிர் தன் வேலையில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
மித்ரன் ஆர் ஜவகர் தன் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார். தொடர்ந்து தனுஷ் படங்களை இயக்கிய இயக்குநர் ஒரு புதுமுக நடிகர் படத்தினை உருவாக்கி இருக்கிறார்.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் காலம் .’பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா’ என்கிற பாரதி வரிகளுக்கு ஏற்ப படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.