சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “
கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
“ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்.
வைரமுத்து எழுதிய “ சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ “ தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ “ என்ற பாடலை தரண் இசையில் நடிகை ரம்யா நம்பீசன் அருமையாக பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். இந்த பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்காரும். எல்லோருடைய செல்போன்களிலும் ரிங்டோனாக வலம் வரும். இசையமைப்பாளர் தரணுக்கு இந்த படத்தின் பாடல்கள் மீண்டும் மகுடம் சூட்டும் ”என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.
இந்த பாடலுக்கு ராதிகா நடனம் அமைத்துள்ளார். கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது.
சந்தோஷ்பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை , வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் அமைத்துள்ளார். புதுமுகம் ராஜா, மாளவிகா மேனன் நாயகன் நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, சுஜாதா, இயக்குனர் மாரிமுத்து, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாடல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.