‘அறம்’ விமர்சனம்

ஒரு மூடப்படாத ஆழ் துளைக்கிணற்றில் விழுந்த சாமான்ய குடிமகனின் குழந்தையைக் காப்பாற்ற ஒரு மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.ஆனால் இதை அவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டுக் கடந்து போய் விடாத படி அதன் பின்னணியில் உள்ள மக்கள் சார்ந்த , அரசு சார்ந்த அத்தனையையும் பிரித்து மேய்கிறது படம். இயக்குநர் கோபி நயினார் காரசாரமான அரசியலைப் பேசியிருக்கிறார் ‘அறம்’ வழியாக.

உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம் என எதிலும் இரண்டு வெவ்வேறு தரப்பட்ட இந்தியாவில் தான் நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த இரண்டு வெவ்வேறு இந்தியாவை ராக்கெட் விட்டு பெருமை பேசும் இந்தியா ஒன்றாகவும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றக் கூட வக்கற்ற இந்தியா இன்னொன்றாகவும் பிரித்து வைத்து இந்த தேசத்தின் பொய்யான வளர்ச்சியின் மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.

 

அந்தக் குழந்தை ஆழ்துளைக் குழியில் முகம் மட்டுமேத் தெரியுமளவிற்கு நூறடி ஆழத்தில் இருப்பதைக் காண்பிக்கிற காட்சி முதல் அந்தக் குழந்தை வெளியே எடுக்கப்படும் காட்சி வரை நாமும் சேர்ந்து பதறுவதும்நெகிழ்வதும் நம்மை நாம் இழந்து, திரையில் இருக்கிற கூட்டத்தில் ஒருவராகிப் போகிறோம்.

கொஞ்சம் பிசகினாலும் ஒரு ஆவணப் படமாகிப் போகக் கூடிய கதையை திரக்கதையினாலும், அழுத்தமான வசனங்களாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறார் கோபி. நயன்தாராவிற்கு இருக்கிற அந்த லேடி சூப்பர் ஸ்டார் பிம்பம் மிகப்பெரிய பலமாகி இருக்கிறது. நயன்தாரா, சுனுலக்‌ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் உட்பட திரையின் உள்ளிருக்கும் அத்தனை பேரும் நம்மை வென்றெடுக்கிறார்கள். ஓம் பிரகாஷின் கேமரா கோணங்களுக்கும் பேசத் தெரிந்திருக்கிறது இந்த படத்தில். ரூபனின் படத்தொகுப்பில் இந்த ‘அறம்’ நிச்சயமாக ஒரு பொக்கிஷம்.

குறிப்பிட்டு சொல்ல வெண்டியது ஜிப்ரான். காட்சிகளை செவி வழியேயும் கடத்தலாம் என்பதை அத்தனை அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார் ஜிப்ரான்.

படம் நெடுக தெறிக்கும் வசனங்கள் எல்லாமே சாட்டை ரகம்.

இறுதியாக அந்தக் குழந்தையை, இன்னொரு குழந்தையை மீட்கும் அதே நேரத்தில் இந்தியாவின் ராக்கெட் ஒன்று விண்ணில் சீறிப்பாயும். அதுதான் நமது இந்தியா. அதைத்தான் இந்த ‘அறம்’ கேள்வியாக்கியுள்ளது. இப்படம் திரையில் ஒரு வாழ்க்கைப்பதிவு.