‘அழகிய கண்ணே’ விமர்சனம்

எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கியுள்ள படம் ‘அழகிய கண்ணே’. பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனியின் மகன் லியோ சிவகுமார் நாயகனாக நடித்துள்ளார்.சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.

திரைப்படத் துறையின் பின்னணியில் உருவாகியுள்ள கதை.இந்தத் துறையில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே மதிக்கப்படுவார்கள்.வெற்றி பெற்றவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை. இப்படம் அங்கீகாரத்துக்காகப் போராடும் திறமைசாலிகள் பற்றிய கதை  சினிமாவில் உதவி இயக்குநர்கள் சந்திக்கும் வலிகளும், போராட்டங்களும் அதிகம். அப்படிப்பட்ட  உதவி இயக்குநர்களின் வலியைச் சொல்லும் படம்தான் ‘அழகிய கண்ணே’ திரைப்படம்.

கிராமத்தில் வசிக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் லியோ. திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று கனவோடு இருக்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மேல் தட்டுப் பெண்ணைக் காதலிக்கிறார்.இருவரும் சென்னை வந்து வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்திக்கிறார்கள்.
குடும்பத் தடைகளை, பொறுப்புகளை,அழுத்தங்களை மீறி அவர் தன் லட்சியத்தில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

லியோ நன்றாக உணர்ச்சிகரமாக நடிக்கிறார். நடிப்பு நன்றாக வருகிறது.அவரது கடும் உழைப்பு படத்தில் தெரிகிறது. சஞ்சிதா ஷெட்டி ஒரு கைக்குழந்தைக்குத் தாயாக  பணிக்குச் செல்லும் பெண்ணாக முதிர்ச்சியான நடிப்பை தந்துள்ளார்.’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரேயொரு காட்சியில் தோன்றி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். பிரபு சாலமன் இயக்குநராகவே வருகிறார்.நகைச்சுவைக்கான களங்கள் இயல்பாக திரைக்கதையில் இருந்தும்,சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.படத்தில் காட்டப்படும் சில மெல்லுணர்வுகள் நன்றாக உள்ளன. ஆனால் திரைக்கதை வலுவாக இல்லை .

N. R. ரகுநந்தன் இசையில் பாடல்களை விட பின்னணி இசை நன்றாக உள்ளது.”இங்கே ஜெயித்த பின்புதான் கல்யாணம் என்று சொன்னவர்களில் பல பேர் ஜெயிக்கவும் முடியாமல், படமும் கிடைக்காமல் போனதை நான் பார்த்திருக்கேன் “என்று பிரபு சாலமன் சொல்வது யதார்த்த மொழி.

உச்ச கட்ட காட்சியைச் சிறப்பாக அமைத்திருந்தால் இயக்குநர் சொல்ல வந்த வலி பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கும். தோற்றவர்களின் வலிகள் நிறைந்த சினிமா உலகின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க விரும்புபவர்கள் அழகிய கண்ணே படத்தைப் பார்க்கலாம்.