குழந்தைகள் நடித்தால் குழந்தைகள் பார்க்கும் படியான படங்கள் என்றுதான் வரும். ஆனால் இது குழந்தைகளை மையப் படுத்திய பெரியவர்களுக்கான படமாகவும் இருக்கிறது.
இந்த உலகத்தில் அனைத்து இன்பம் ,துன்பம், கவலை, நம்பிக்கை என எல்லாவற்றையும் நிர்ணயிப்பது குழந்தைகள்தான் என்று சொல்லும் கதை.குழந்தைகள் கொண்ட காட்சிகள் மூலம் படம் தொடங்குகிறது.
குழந்தைப் பேற்றுக்கு ஏங்கும் வினோதினி, ஆண்பிள்ளை ஆசையில் அடுக்கடுக்காக பெண் குழந்தைகளாக பெற்றெடுக்கும் கருணாஸ் மனைவி, குழந்தைகள் ஆசிரமம் நடத்தும் தம்பி ராமையா, விவாகரத்துக்கு தயாராகும் நரேன் தம்பதிகளுக்குத் தங்கள் ஒரே குழந்தை யாரிடம் இருப்பது என்பதில் பிரச்சினை, படப்பிடிப்புக்கு குழந்தைகள் சப்ளை செய்யும் ஜான் விஜய், இலங்கைப் போரில் குழந்தையைப் பறிகொடுத்த ஈழத் தம்பதிகள் மகேஷ் ,ரித்விகா, காதலனிடம் ஏமாந்து திருமணத்துக்கு முன்பே பெற்றெடுத்த குழந்தை, பள்ளி நாடகத்துக்கு நடிக்கத் தேவைப்படும் குழந்தைக்காக அதைத்தேடி அலையும் குழந்தைகள் என படத்தில் எத்தனை எத்தனை வகையான குழந்தைகள்! அவரவர்க்குமான தனித்தனி பின்புலங்கள் என பல கதைகளைக் சொல்லி அவற்றை ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்து இருக்கிறார் இயக்குநர். குழந்தைகள் தொடர்பான அனைத்தையும் தவிப்புடன் சொல்ல முயன்றிருக்கிறார்.
பள்ளி நாடக காட்சிகளில் தொய்வு தென்பட்டாலும் குழந்தைகளுக்காக பொறுத்துக் கொள்ளலாம் இது வழக்கமான படமல்ல எனவே வழக்கமான பாணியில் விமர்சிக்க முடியாது. குழந்தைகளின் உலகம் என்பது வேறானது என்பதை கூறி அறிமுகப்படுத்தியுள்ள படம்.அனைத்து பெரியவர்களும் கூட பார்க்கவேண்டியபடம் இது.ஏனெனில் அதில் உங்கள் கதையும் இருக்கலாம்.
‘நீயா நானா’ அந்தோணி திருநெல்வேலி தயாரித்துள்ள படம் .அவருக்கும் ஒரு சபாஷ் கூறலாம்.