’அஸ்திரம்’ திரைப்பட விமர்சனம்

ஷாம், நிரா,நிழல்கள் ரவி, அருண் டி சங்கர், ஜீவா ரவி, ஜே ஆர் மார்டின் நடித்துள்ளனர். அரவிந்த்ராஜ் கோபால் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி கே எஸ்  இசையமைத்துள்ளார். பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை  பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே கத்தியால் குத்திக் கொண்டு இறந்ததாக கண்டறியப்பட்ட இதே போன்ற தற்கொலைகளுக்கு பின்னால் உள்ள ரகசியத்தை ஆராய்கிறது.

கொடைக்கானல் பின்னணியில் கதை நடக்கிறது.மர்மமான முறையில் தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருகின்றன. அதை தற்செயலாக நடக்கின்றன என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது போலீஸ் . ஆனால் அதற்குப் பின்னே உள்ள தொடர்பை, அதன் மையச்சரடை எடுத்து ஆராயும்போது பல உண்மைகள் கிடைக்கும் என்று விசாரணை அதிகாரி ஷாம் நம்புகிறார்.ஆனால் அதை உயர் அதிகாரிகள் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.இருந்தாலும் ஷாம் தனக்கு சுமன் என்கிற காவலரை உதவியாக வைத்துக்கொண்டு அவரது புலனாய்வுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ,இதற்கு இடையூறாக மேலிடம் செயல்படுகிறது.இருந்தாலும் அவர் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது துப்பு துலங்காத போது ஒரு கட்டத்தில் அவர் தனது கல்லூரி நண்பரைச் சந்திக்கிறார் .அவர் இந்த வழக்கு சார்ந்து கூறுபவற்றை கேட்டு ஷாம் அதிர்கிறார்.அவர் சொன்னபடி தொடர்ந்து நடந்திடவே மேலும் அதிர்ச்சி.அதன் பிறகு நிகழும் எதிர்பாராத திருப்பங்கள் பரபரப்பூட்டுபவை. முடிவு என்ன என்பதுதான் அஸ்திரம் படத்தில் கதை.

அஸ்திரம் என்றால் அம்பு கணை என்கிற பொருள்படும். அதாவது இந்தப் படத்தின் கதையில் அப்படி யாரோ எய்துவிடும் அம்பு தான் அஸ்திரம் .அதற்கு காரணமானவர் யார்? எய்தவர் யார் என்பதை நோக்கிச் செல்வதுதான் இந்த படத்தின் கதை .அதற்கெல்லாம் காரணம் யார் என்கிற தேடுதல் வேட்டைதான் பரபரப்பான திரைக்கதை.

நடிகர் ஷாம் எப்போதும் தேர்ந்தெடுத்த பாத்திரங்களை செய்பவர்.அவரால் மரத்தைச் சுற்றி டூயட் பாட முடியாது.இதில் அகிலன் என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார் . அவர் காக்கி உடைய அணியாமலேயே கம்பீரமாக அந்தக்காவல் அதிகாரியாக மனதில் பதிகிறார்.நேர்மையான காவல் அதிகாரிகள் எதிர்கொள்ளும் துறை ரீதியான சவால்களையும் எதிர்கொண்டு தனது குணச்சித்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்.குழந்தை இல்லாத தனது மனைவிக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லிவிட்டு தனியாக நின்று வருந்தும்படியான காட்சியில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, கண்கலங்க வைத்துக் கைத்தட்டல் பெறுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிராவுக்கு படக்கதையில் முக்கிய பங்கு இல்லை .இருந்தாலும் ஷாமின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளை,கசப்புகளை ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார்.

சுமந்த் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்திருப்பவர் புதுமுகமா என நம்ப முடியாத அளவிற்கு உயிரோட்டமான நடிப்பை அளித்துள்ளார்.அவரது பாத்திரம் திரைக்கதையில் கவனம் ஈர்க்கும் ஒன்று.

என்றும் மார்க்கண்டேயனாக இருக்கும் நடிகர் நிழல்கள் ரவி இப்போதைய படங்களின் எதிர்பாராத பாத்திரங்களில் வருகிறார்.இதில் அவர் மனநல மருத்துவராக நடித்துள்ளார்.வருகிற நேரம் குறைவு என்றாலும் அதன் சாரம் அதிகம். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வுகள்.

ஒரு புலனாய்வின் போது புறக் காட்சிகளை விட,இருக்கிற புற தடயங்களை விட உள்ளுணர்வு செல்லும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். அந்த வகையில் புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.இந்த உள்ளுணர்வு வரைந்து வரைபடமாக இந்த கதையின் பின்னணியில் சதுரங்க விளையாட்டு உள்ளது இயக்குநரின் புத்திசாலித்தனத்திற்கு உதாரணம்.அது மட்டுமல்ல படத்தில் ஆந்தை என்கிற சின்னம் வெளிப்படும் விதமும் விறுவிறுப்பு ரகம்.மனிதன் மனங்களை மாற்றக்கூடிய மெஸ்மரிசம் என்கிற உளவியல் சார்ந்தும் படம் பேசுகிறது.இந்தப் புலனாய்வு பயணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அடுத்தடுத்து திக் திக் உணர்வை அளிப்பவை.

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை ஒரு விறுவிறு படத்திற்கான வேகத்தைக்கூட்டி டாப் கியரில் கொண்டு செல்கிறது.

ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், தற்கொலை தொடர்பாக ஷாம் விசாரணையில் இருந்தே தனது நிழல், ஒளி ஆட்டத்தின் மூலம் திரைக்கதையின் பரபரப்பையும் படபடப்பையும் பார்ப்பவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

திரைக்கதையில் பல கதாபாத்திரங்கள், அவர்கள் தொடர்புடையதிருப்பங்கள் பல இருந்தாலும், சிக்கலின்றி படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.படத்தொகுப்பாளர் பூபதி,அந்த காலத்து ஜப்பான் மன்னனின் கதை மீண்டும் மீண்டும் வருவதற்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் அரவிந்த் ராஜகோபால், ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் நடந்த மன்னனின் கதையை வைத்துக் கொண்டு  விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘அஸ்திரம்’ நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும்.