‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்பட விமர்சனம்

ரியோ . மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர், ஏ. வெங்கடேஷ் ,ராஜா ராணி பாண்டியன்,தீபா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். கதை வடிவம் சிவக்குமார் முருகேசன், கலையரசன் தங்கவேல்.மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ளார். கே ஜி வருண் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் வினோத் ராஜ்குமார். தயாரிப்பு டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ், கிரியேட்டிவ் ப்ரொடக்சன் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ், தயாரிப்பாளர் :வெடிக்காரன் பட்டி எஸ். சக்திவேல்.

‘காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்’ என்பதை 21 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் சொல்லும் கதை. கணவன் மனைவி இருவரின் ஈகோ மோதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் கதையும் கூட என்றும் கூறலாம்.

நான் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவன் ஆண் பெண் சமத்துவம் பார்ப்பவன் என்று கூறும் ரியோ, பெண்பார்க்கச் செல்லும்போது பெண் தரையில் அமர்ந்திருக்கிறார் என்று தானும் தரையில் அமர்ந்து கொள்கிறார். அப்படிப்பட்டவருக்கு மனைவியாக வந்து சேரும் மாளவிகா மனோஜ் என்னுடைய உரிமை, என்னுடைய விருப்பம் என்கிற பெயரில் கொடிபிடிக்கிறார்.என்னதான் புதுமை சமத்துவம் என்று பேசினாலும் தனக்கென்று வரும் போது அது இத்தனை நாள் பழகிப்போன ரியோ மனதில் அது மீறலாகத் தெரிகிறது. இருவருக்குள்ளும் ஆணவச் சிக்கல் உருவாகிறது. தங்களை அவர்கள் புரட்சியாளர்களாக நினைத்துக் கொண்டு விதண்டாவாதத்திலும் பிடிவாதத்திலும் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள நினைக்க குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்படுகிறது. விவாகரத்து வரை செல்கிறது.மாளவிகா விவாகரத்து வேண்டும் என்கிறார், ரியோ சேர்ந்து வாழ வேண்டும் என்கிறார். நீதிமன்றம் செல்கிற இந்த வழக்கு அவர்களைச் சில மாதங்கள் அமைதியாகத் திரும்பிப் பார்த்து யோசிக்க வைக்க கால அவகாசம் தருகிறது. காலம்தான் அனைத்திற்கும் சிறந்த மருந்து என்பதால் அந்த மருந்து வேலை செய்ததா இல்லையா? முடிவு என்ன என்பதுதான் 122.06 நிமிடங்கள் கொண்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் மீதிக் கதை.

தாங்கள் இரக்கம் உள்ளவர்களாகவும் சமத்துவாதியாகவும் கூறிக் கொள்பவர்கள் உண்மையில் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்கென்று அதில் உரசல் ஏற்படும்போது அவர்களின் சுயரூபம் வெளியே தெரிகிறது.அப்படித்தான் இதில் வருகிற ரியோ, மாளவிகா மனோஜ் இருவருமே இருக்கிறார்கள்.இருவரும் போலி சமத்துவம் புரட்சி பேசுபவர்கள் தான். சுதந்திரம் பற்றி அவர்கள் புரிந்து வைத்திருப்பது தவறான புரிதல் என்பதை அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் சுற்றி இருக்கும் மனிதர்களும் கற்றுக் கொடுக்கிறார்கள். தங்களை உணர ஆரம்பிக்கிறார்கள்.

இன்று படித்து விட்டோம் சம்பாதிக்கிறோம் என்ற நிலையில் பல பெண்களிடமும் ஆண்களிடமும் இருக்கும் குறையை அழகான திரைக்கதை மூலம் கலகலப்பான சுவாரசியமான அழுத்தமான நேர்த்தியான காட்சிகள் மூலம் ஒரு முழுப் படமாக உருவாக்கி 21 ஆம் நூற்றாண்டு இளம் தம்பதிகளுக்குப் பாடம் எடுத்துள்ளார் இயக்குநர்.

இரண்டாண்டுக்கு முன் ‘ஜோ’ படத்தில் காதலர்களாக வந்த ரியோ, மாளவிகா ஜோடி இதில் கணவன் மனைவியாக வருகிறார்கள்.ஜோடிப் பொருத்தம் பிரமாதம் தான்.பாத்திர முரண்பாடுதான் கதையின் சிக்கல்.

நாயகனாக சிவா பாத்திரத்தில் நடித்துள்ள ரியோ தோற்றத்திலும் நடிப்பிலும் கவனம் பெறுகிறார். அவர் எதற்கெடுத்தாலும் உரிமை பேசும் மனைவியிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் பாத்திரத்தில் சரியாகவே தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அழகான தோற்றம் அமைதியான நடவடிக்கை என்று குடும்பத்துக்குள் மனைவியாகும் மாளவிகா போகப் போக செய்யும் அடாவடிகள் ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா ‘ரகம்.இது என் சாய்ஸ் என்று சொல்லிக் கொண்டே அவர் செய்யும் அலப்பறைகள் ரகளையாக உள்ளன.

இந்த இருவரைச் சுற்றி நின்று கொண்டு இவர்களின் பிரச்சினைக்குக் கொம்பு சீவுகிறவர்கள், தீர்க்க முயல்பவர்கள் மத்தியில் தவிக்கிறார்கள். தங்கள் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குபவர்களின் சாயம் வெளுக்கும்போது தங்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். பரஸ்பரம் தங்களைப் புரிந்து கொள்கிறார்கள்.

இது வழக்கறிஞராக வரும் ஷீலாவும் அவரது பிரிந்திருக்கும் கணவராக இருக்கும் ஆர்ஜே விக்னேஷ் காந்தும் தங்கள் பாத்திரத்தின் மூலம் கவனம் பெறுகிறார்கள்.இதுவரை காமெடி என்கிற பெயரில் சற்று மிகை நடிப்பு காட்டி வந்த விக்னேஷ் காந்த் இதில் குணச்சித்திரத்தில் மிளிர்கிறார். சில இடங்களில் கண்கலங்க வைக்கிறார்.இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களில் அனுதாபத்தை அள்ளி வந்த ஷீலா இதில் பெண்ணுரிமை பேசும் வக்கீலாக வந்து அதிர வைக்கிறார்.

விக்னேஷின் ஜூனியர் ஆக வரும் ஜென்சன் திவாகரும் நகைச்சுவையில் புகுந்து விளையாடுகிறார்.

பொதுவுடைமை தோழராக வரும் அனுபமா குமார் நடித்திருக்கும் பாத்திரம் அர்த்தம் பொதிந்தது மட்டுமல்ல கதையின் திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.

ஆண்பாவமா? பெண் பாவமா? என்பதற்காக இருதரப்பிலும் வைக்கப்படும் கருத்துகளும் யோசிக்க வைப்பவை தான்.இருதரப்பு பிரச்சினைபற்றியும்  பேசுகிறது படம்.

எந்த வழக்கறிஞரும் சட்ட மும் உறவுகளை இணைப்பதில்லை. விட்டுக்கொடுத்தலும் சரியான புரிதலும் அன்பும் தான் மனிதர்களை இணைக்கும் என்பதை சொல்கிறது படம்.உண்மையான அன்பிற்கு முன் ஆணவத்திற்கும் தன்முனைப்புக்கும் இடமில்லை என்று அறைந்து சொல்கிறது படம்.

பொழுதுபோக்கு பாணியில் இருந்து விலகி விடாமல் கலகலப்பான ஒரு படமாக இதை உருவாக்கி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தங்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்தப் படம் ஒரு பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது ஒரு இயக்குநர் படமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதால் இசையமைப்பாளர் சித்து குமார், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் இருவரும் தங்கள் பங்களிப்பின் மூலம் இயக்குநரது கரத்தை வலுப்படுத்தி உள்ளார்கள்

ரியோ, மாளவிகா  இருவரிடையே நடக்கும் உரையாடல்களில் வெளிப்படும் பெண்ணியம் ஆனாதிக்கம் சார்ந்த கருத்துகளும் நீதிமன்றத்தில் வெளிப்படும் விவாதங்களிலும் தெரியும் ஆழமும் நேர்த்தியும் திரைக்கதை உருவாக்கத்தில் இயக்குநர் கலையரசன் தங்கவேல் குழுவின் நல்லதொரு மெனக்கெடலைக் காட்டுகிறது.

‘ஆண்பாவம் பொல்லாதது’ அனைவருக்குமான பாடம்.