இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் .
சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோபாலா முத்துராமன் மதுமிதா பட அதிபர் பி எல் தேனப்பன் டைரக்டர் ஜெயபிரகாஷ் ரஞ்சன் குமார் தமிழ்செல்வி ஐஸ்வர்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.

முதல் காதலைக் கொண்டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் காதல் ,96 போன்ற பட வரிசையில் பள்ளிக்கூட காதலின் ஆழத்தையும் தியாகத்தையும் அழகியலோடு சொல்ல வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.
பியார் பிரேமா காதல், கழுகு 2, காமன் மேன், இடியட் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி இப்படத்திற்கு ஒளி ஓவியம் தீட்டுகிறார். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்க, கலையை முனி கிருஷ்ணா கையாளுகிறார் ஸ்டண்ட் காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார். நடனக் காட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர். இந்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை மனிஷா யாதவ் குறிப்பிடும்போது, “நான் நடித்த வழக்கு எண்18/9, ஒரு குப்பை கதை போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன. அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை இயக்குநர் ஆதிராஜன் சொன்ன உடனேயே பிடித்து விட்டது. அதற்கு காரணம்…. ஒரே கேரக்டருக்குள் பலவிதமான கேரக்டர்கள் ஒளிந்திருக்கும் வித்தியாசமான வேடம் இது. இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது. அத்துடன் இளையராஜா சார் இசையில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய கனவும் இந்த படத்தில் நிறைவேறுகிறது. கண்டிப்பாக இந்த படத்தை காதலர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன். “நினைவெல்லாம் நீயடா” ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார் மனிஷா யாதவ்.