விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன் ,அவினாஷ் நடித்துள்ளனர்.பிரவீன் கே இயக்கியுள்ளார்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு ஷான் லொகேஷ். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
சில படத்தின் கதையை விரிவாகக் கூற முடியாது.அது படம் பார்ப்பவர்களின் சுவாரஸ்யத்தைக் கெடுத்துவிடும் .அப்படிப்பட்ட ஒரு படமாகத்தான் ‘ஆர்யன்’ கிரைம் திரில்லர் உருவாகியுள்ளது.
பிக்விஷன் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக இருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பொருளதிகாரம் என்ற தலைப்பில் நேரலையில் அவர் செய்யும் நேர்காணல்கள் பரபரப்பு ஊட்டுகின்றன.நிகழ்ச்சியில் ஒரு வளர்ந்து வரும் நடிகர்
கயிலாஷ் பேட்டிக்காக வந்துள்ளார். பேச ஆரம்பித்து, நடிகர் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து செல்வராகவன் எழுந்து வருகிறார். வந்தவர் கையில் துப்பாக்கி.அவர் அந்த நடிகரைச் சுட்டு விடுகிறார்.அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டுவதுடன் அடுத்தடுத்து ஒவ்வொரு கொலையாகச் செய்யப் போகிறேன் என்றும்,ஒரு மணி நேரத்திற்கு முன்பு யார் என்பதைச் சொல்வேன் என்றும் கூறுகிறார்.நிகழ்ச்சியை நேரலையில் பார்த்து நாடே பற்றிக்கொள்கிறது.காவல் துறையில் விஷ்ணு விஷால் தலைமையில் துடிப்பான அணி திரட்டப்படுகிறது.குற்றவாளியைப் பிடிப்பதை விட்டுவிட்டுக் கொலை செய்யப்படப் போகும் நபர்களைத் தேடிக் காப்பாற்ற நினைக்கிறது போலீஸ் . அதையும் மீறி ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? செல்வராகவனின் பின்னணி என்ன? அவர் ஏன் இப்படிச் செய்கிறார்? அவரை ஏன் போலீஸ் பிடிக்க முயலவில்லை? போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் 136 நிமிடங்கள் கொண்டபரபர க்ரைம் த்ரில்லர் தான் ‘ஆர்யன்’. 
படங்களில் கதை தொடங்கி வளர்ந்து பிறகுதான் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். முதல் காட்சியில் இருந்தே பரபரப்பு இதில் வந்து விடுகிறது.படத்திற்கான ‘ஆர்யன்’ என்ற தலைப்பிலேயே ஒரு சுவாரஸ்யம் உள்ளது .அதை வெளியே கூறக்கூடாது.படத்தின் நாயகனாக நடித்துள்ள விஷ்ணு விஷால் நடிப்பில் பல படிகள் முன்னேறி தனக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார். மீசை இல்லாத முகத்துடன் காவல்துறை சீருடை தோற்றத்தில் வலம் வருகிறார். அவர் துடிப்பாகச் செயல்படும் காட்சிகள் கருமமே கண்ணான ஒரு காவலர் பணியைக் கண் முன் நிறுத்துபவை.
முதலில் கடமை பிறகு தான் குடும்பம் என்று இருப்பவர்.இதனால் அவரது குடும்ப வாழ்விலும் சிக்கல். இது அவரது மனைவியுடன் விவாகரத்து வரை செல்கிறது.அப்படிப்பட்டவர் களத்தில் இறங்கினால் எப்படி இருக்கும் என்பதைத் தனது பாத்திரத்தின் மூலம் காட்டியுள்ளார்.விஷ்ணு விஷாலின் தோற்றம் , உடல் மொழி, வசனஉச்சரிப்பு போன்றவை சிறப்பாக உள்ளன.கடமை தவறாத ஒரு காவல் அதிகாரியாக கண் முன் நிற்கிறார்.அந்த வகையில அந்தக் கதாபாத்திரத்திற்கு அசலாகப் பொருந்தியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் நடிகரான பிறகு ஏற்று வரும் பாத்திரங்களில் இப்போது கவனம் பெறுகிறார். அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். அலட்டாமல் ஆர்ப்பாட்டம் செய்யாமல் டெசிபல் உயர்த்தி வசனம் பேசாமல் ஒரு சைக்கோ கொலையாளி போல வருகிறார். அடுத்து யாரைக் கொல்லப் போகிறார் என்கிற பரபரப்பு படம் முழுவதும் பற்றிக்கொள்ள வைத்துள்ளார் .அவரது அனாயாசமான நடிப்பு அந்தப் பாத்திரத்திற்கு நம்பகம் சேர்த்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேர்காணல் செய்பவராக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சின்ன சின்ன உணர்வுகளையும் முக பாவங்களில் காட்டியுள்ளார். விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்துள்ள மானசா சௌத்ரி பொலிவான தோற்றத்தில் வருகிறார் .அழகாக வந்து அளவான காட்சிகளில் தோன்றி செல்கிறார். அவரது திரையிருப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.இன்னொரு தொலைக்காட்சி நிருபராக வரும் கருணாகரன் சில காட்சிகளில் வந்தாலும் அவரது உணர்வுகளைக் காட்டியுள்ளார். பிறபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.
ஒரு வினாடி கூட யோசிக்க வைக்காமல் இறுக்கமாக கட்டப்பட்ட திரைக்கதை பரபரப்பாகப் படத்தைக் கொண்டு செல்கிறது.
பொதுவாகக் க்ரைம் திரில்லர் படங்களில் கொலையாளி யார் என்று தான் தேடுவார்கள்.பார்வையாளர்கள் மத்தியில் அந்தக் கேள்விதான் ஓங்கி ஒலிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கொலை செய்யப்படுபவர்கள் தடுக்கப்பட வேண்டும் என்கிற தவிப்பு பார்ப்பவர் மனதில் வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அளவிற்குப் பரபரப்பாகக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.
ஜிப்ரானின் பின்னணி இசை கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் படம் பார்ப்பவர்கள் மத்தியில் கச்சிதமாகக் கொண்டு செல்லும் வகையில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் கேமரா மூலம் தடதடக்கும் காட்சிகள் தங்கு தடை இன்றி விரிகின்றன.துரத்தல் காட்சிகளில் பொறி பறக்கிறது.
ஷான் லொகேஷின் கறாரான படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பைக் கூட்டிக் கொண்டே உச்சக்கட்டத்தை நோக்கிப் படத்தைக் கொண்டு செல்கிறது .
சண்டைக் காட்சிகளில் விஷ்ணு விஷால் தோன்றுவது ஹீரோயிச காட்சிகளாக இல்லாமல் அந்தப் பாத்திரத்தின் செயல்களாகவே உள்ளன. அந்த அளவுக்கு காட்சிகள் இயல்பாக அமைந்துள்ளன.
படத்தின் கதையை எழுதியுள்ள இயக்குநர் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய பாதையில் இந்தக் கதையைக் கொண்டு செல்கிறார். முடிந்தவரை நம்பகத்தன்மையை வெளிப்படுத்திக் காட்சிகளை அமைத்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
கொலைகளைத் தடுக்க நினைக்கும் கதாநாயகனின் திட்டங்கள் பயணங்கள் போன்றவற்றைச் சுவாரசியமாகக் காட்டியுள்ளார்கள் .எப்போதும் போலீசை விட குற்றவாளிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதை காட்டும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இப்படிப்பட்ட படங்களில் காமம் ,குரோதம், பகைமை வன்மம் போன்றவை தான் குற்றச் செயல்களுக்குப் பின்னணியாக இருக்கும். ஆனால் இதில் சமூகக் காரணம் கூறி இருப்பது புதிதாக உள்ளது. த்ரில்லர் ரகப் படங்களில் சமூகத்திற்கான செய்தியாகவும் அது உள்ளது.தன்னலம் மறந்து மக்களுக்காகச் சேவை செய்பவர்களை இந்தச் சமூகம் கண்டு கொள்ளாத அலட்சியம் படத்தில் பேசப்படுகிறது.புறக்கணிக்கப்பட்ட பல படைப்பாளிகளின் வலிமிகு குரலும் ஒலிக்கிறது.
வெறும் பொழுது போக்குப் படமாக அல்லாமல் சிந்திக்க வைக்கும் காட்சிகளும் உள்ளன.படத்தில் இன்றைய ஊடகங்களின் தொழில் ரீதியான பிரேக்கிங் நியூஸ் அவலங்களையும் மக்களின் பரபரப்பு அரிப்பு ரசனையையும் போகிற போக்கில் கூறியுள்ள வசனங்கள் சிறப்பு.”இப்போதெல்லாம் நடப்பது ரிப்போர்ட்டிங் அல்ல ஷோ பிசினஸ்”என்பது ஒரு சாம்பிள். வெகுசன சமூகத்தின் இன்றைய அப்பட்டமான நிலையைப் பிரதிபலிக்கும்படி காட்சிகள் கவனம் பெறுகின்றன.
இது நிச்சயமாக பத்தோடு பதினொன்றாக வந்துள்ள படம் அல்ல .ஒரு புதிய க்ரைம் திரில்லர் அனுபவத்தைத் தரும் படமாக அமைந்துள்ளது.
புதிய விதத்தில் இந்தப் படத்தை உருவாக்கிய இயக்குநர் பிரவீன் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில் ‘ஆர்யன்’ ஆச்சர்யன்.


