‘ஆர். எம். வீ.: தி கிங் மேக்கர்’ ஆவணத் திரைப்பட விமர்சனம்

எம்ஜிஆர் ,ஜானகி எம்ஜிஆர், ஜெயலலிதா என்று மூன்று முதல்வர்களின் பின்புலத்தில் இருந்து அவர்களுக்குப் பலவகையிலும் உதவியாக இருந்த முன்னாள் அமைச்சர் ஆர் .எம் . வீரப்பன் பற்றிய ஆவணப்படமாக ‘ஆர்.எம். வீ . : தி கிங் மேக்கர்’ என்கிற 118 நிமிடங்கள் கொண்ட ஆவணத் திரைப்படம் உருவாகியுள்ளது. ஆர் எம் வீயின் நூற்றாண்டு மற்றும் சத்யா மூவீஸின் 60 ஆவது ஆண்டை முன்னிட்டு இத் திரைப்படம் உருவாகியுள்ளது. புதுக்கோட்டை நகருக்கு அருகில் உள்ள வல்லாதிராக்கோட்டை என்ற சிற்றூரில் தொடங்கிய இவரது அரசியல் பயணம், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் என்று தொடர்ந்த வரலாறு கொண்டது.

இந்த ஆவணப்படத்தில் எதிர்தரப்புகளையும் மதிக்கும் பண்பாளர் அருளாளர் என்று அழைக்கப்படும்ஆர்.எம்.வீரப்பன் பற்றி எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இக்காலத்தில் வாழும் அரசியல் தலைவர்கள், பல் துறைப் பிரமுகர்கள் வரை பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர், கலைஞர்,இயக்குநர் கே. பாலச்சந்தர், வாலி போன்றவர்கள் ஆர்.எம். வீ பற்றிப் பேசிய காணொலிகள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,ரஜினிகாந்த், வரலாற்றாளர் ரா.கண்ணன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் திருநாவுக்கரசர், பழனி ஜி பெரியசாமி,செங்கோட்டையன், ஏ.சி. சண்முகம், அரசியல் கட்சித்தலைவர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன், தொல். திருமாவளவன், செ.கு.தமிழரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி. சைதை துரைசாமி,டி கே. எஸ் .கலைவாணன், டி கே.எஸ். இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன், ஆலந்தூர் ஆர் எஸ் பாரதி,காஞ்சி சங்கராச்சாரியார்,தருமபுர ஆதீனம்,கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம் , வைரமுத்து,இசையமைப்பாளர் இளையராஜா, பத்திரிகையாளர்கள் எஸ் விஜயன்,ரங்கராஜ் பாண்டே,திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன்,பி. வாசு, சுரேஷ் கிருஷ்ணா,நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்,தொழிலதிபர் நல்லி குப்புசாமி,அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி,கல்வியாளர்கள் ஆர் எஸ் முனிரத்தினம், சாரதா நம்பி ஆரூரன் போன்று பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் பேசி உள்ளனர்.இதன் மூலம் பொதுவாக ஆர்.எம். வீ. பற்றிப் பரவியுள்ள தவறான புகை படிந்த செய்திகள் மறுக்கப்பட்டு சார்ந்த உண்மைகள் துலக்கம் கொண்டு தெரிகின்றன.

‘ஆர் எம் வீ ஐயா என்னும் மாமனிதா!
உம்மைப்போல் வாழ்வதென்ன எளிதா எளிதா?’ என்று அவர் புகழ் கூறும் பாடல் ஒலிக்கிறது.

எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த காலத்திலிருந்து திமுகவின் அரசியல் வெற்றி நகர்வுகளுக்கும் பிறகு எம்ஜிஆரின் வெற்றிக்கும் பின்புலத்திலிருந்து ஆர்.எம். வீரப்பன் ஆற்றிய ராஜதந்திர அரசியல் செயல்பாடுகள் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். தலைமை மீது விசுவாசம், தமிழ்ப் பற்று,நிர்வாகத்திறன், தன்னை முன்னெடுக்காத தன்மை, கலைகள் மீது ஆர்வம், ஆன்மீக ஈடுபாடு என்று அவரது இயல்புகள் ஒவ்வொருவர் வாயிலாகவும் வெளிப்படுகின்றன.

சத்யா மூவிஸ் திரைப்பட நிறுவனத்தின் மூலம் ஒருதயாரிப்பாளராக திரைப்பட உருவாக்கத்தில் ஆர்.எம். வீ. பங்கு பெற்றது, ஸ்ரீரங்கம் கோபுரம் அமைத்தது, தென்காசி ஆலய கோபுரம் திருப்பணி, பிச்சாவரம் மேம்பாடு, மகாராஷ்டிராவில் ஆலய திருப்பணிக்கு உதவியது, வண்டலூர் உயிரியல் பூங்கா அமைத்தது, எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற வியூகம் வகுத்தது,மகேந்திர புரியில் இஸ்ரோ கட்டமைப்பு பணிகள், ஆலயக் குத்தகை ஊழல்களை ஒழித்தது, தக்கார் பதவி கொண்டு வந்தது,தமிழில் அர்ச்சனை செய்ய செயல்படுத்தியது,ஆழ்வார் ஆய்வு மையம்,கம்பன் கழகம் என முன்னெடுத்து இன்று வரை அவை உயிர்ப்புடன் இருப்பதற்கு வழி கோலியது,ஏராளமான ஆலயங்கள் புனரமைப்பு செய்தது என்று ஏராளமான முன்னேற்றங்களுக்குப் பின்னணியில் இருந்து செயலாற்றிய அவரது பங்களிப்புகள் பற்றிப் பேசுகிறது இப்படம். மொத்தத்தில் ஆர்.எம்.வீ. பற்றிய ஒட்டுமொத்த சித்திரத்தை இந்த ஆவணப்படம் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த திரைப்படத்தை  பினு சுப்பிரமணியம் இயக்கி உள்ளார்.  ஆர். எம். வீயின் புதல்வர் தங்கராஜ் தயாரித்துள்ளார்.
தொய்வில்லாத படத்தொகுப்புடன் இந்த முழு நீள ஆவணப்படம் ஒரு திரைப்படம் பார்க்கிற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
ஓர் அரசியல் தலைவரின் முழுமையான சித்திரத்தைக் கண்டு களித்த மன நிறைவையும் தருகிறது.