வெற்றி ,மதுரா, அனு சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா நடித்துள்ளனர். சிவா ஆர் எழுதி இயக்கியுள்ளார். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் கிருஷ்ணா இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு மு. காசி விஸ்வநாதன். 3 எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலையில் ஆன்மீகப் பயணத்தில் நிம்மதியைத் தேடிச் செல்கிற வெற்றி ,காசியில் தாடி,ஜடா முடி வளர்த்துக் கொண்டு ஒரு சாமியாராகத் திரிகிறார்.ஆன்மீகப் பயணத்தில் வந்து விட்டாலும் அவருக்கு சிறுவயதில் இருந்து எழுத்துஆர்வம் உண்டு .எழுதவும் வேண்டும் ஆன்மீகத்லும் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறார்.எதை முன்னெடுப்பது என்று ஒரு ஊசலாட்டம் நிலவுகிறது .
காசியிலிருந்து அதே துறவிக் கோலத்துடன் தனக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்த பெரியவரின் ஊருக்கு ரயிலில் வருகிறார்.அப்போது ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது. நட்பு காதலுக்குப் பக்கமாகச் செல்கிறது.அந்தப் பெண் இவரை விரும்புகிறாள்.தன் ஆன்மீக எழுத்துப் பயணம் தடைப்படும் என்று சற்று விலகுகிறார் வெற்றி.ஆனாலும் அந்தப்பெண்ணை அவர் வெறுக்கவில்லை .ஒரு கட்டத்தில் வெற்றியைப் பிரிந்து சென்ற அந்த பெண் காமுகர்களால் உயிரிழக்க நேரிடுகிறது.இதனால் பெரிதும் வருத்தமற்ற வெற்றி, அந்த ஆங்கிலேயப் பெண்ணுடனான தனது நட்புறவை மதிக்கும் விதத்தில் ஜனனி தாமஸ் என்கிற அவர் பெயரில் படைப்புகளை எழுதுகிறார் .அது பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. ஆனால் தான் யார் என்று கூறாமலேயே இந்த எழுத்துப் பயணத்தைத் தொடர்கிறார் வெற்றி.
அந்தப் படைப்புகளில் உண்மையும் எதார்த்தமும் தத்துவமும் கலந்திருப்பதால் அனைவராலும் விரும்பப்படுகின்றன. அப்படி வெற்றி எழுதிய ‘ஆலன்’ என்கிற நூலுக்கான பாராட்டு விழா ஒன்று நடக்கிறது.வெற்றி அங்கே செல்ல நேரிடுகிறது .வாசகர்களுக்கு இதுவரை ஜனனி தாமஸ் என்ற பெயரில் எழுதுவது யார் என்று தெரியாத நிலையில் தான்தான் என்று அவர் அங்கே வெளிப்படுகிறார்.
எப்படிப் படைப்புகளில் இந்த அளவுக்குத் தத்துவ சிந்தனை வருகிறது என்று கேட்கும்போது போது தனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் தான் எழுத்து வசப்படக் காரணம் என்கிறார். அப்போது அவரது முன்கதை விரிகிறது. அப்பொழுது தான் தெரிகிறது குடும்பப் பங்காளி சண்டையில் அவர் பெற்றோரை இழந்து இருப்பது. கசப்பின் வலிகளால் தான் அவர் அனைத்தையும் கடந்த நிலைக்கு சென்றிருக்கிறார் என்பது புரிகிறது.அவரது அமைதியும் அடக்கமும் புயலுக்குப் பின்னான அமைதி என்பது புரிகிறது.
ஆங்கிலேயப் பெண்ணுக்கு பிறகு மற்றொரு பெண்ணைச் சந்திக்கிறார்.அந்தப் பெண் சிறுவயதில் அவருடன் கைகோர்த்து நடந்த முறைப்பெண் தாமரை என்பது பிறகு தெரிகிறது .அந்தப் பெண்ணுடன் அவர் வாழ்க்கையைத் தொடர்ந்தாரா? அல்லது துறவறம் மேற்கொண்டாரா என்பதுதான் ‘ஆலன்’ படத்தின் மீதிக் கதை.
வெற்றி எப்போதும் கதை முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருபவர். தனது நடிப்பாற்றலுக்கும் இடம் இருக்கிறதா என்று பார்த்து படங்களைத் தேர்வு செய்வார் .அப்படித்தான் இந்தப் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.அதிகம் பேசாமல் ஆர்ப்பாட்டம் செய்யாமல்,அவரது தோற்றமே பாதிக் கதாபாத்திரத்தை நிரப்பி விடுகிறது. துறவிப் பாத்திரத்தில் சில சலனங்கள் ஏற்படுகின்றன. பாத்திரத்தை உணர்ந்து வெற்றி நன்றாக நடித்துள்ளார் .
வெற்றியுடன் பழகும் ஆங்கிலேயப் பெண் ஜனனி தாமஸ் ஆக மதுரா நடித்துள்ளார் . பொலிவான தோற்றமும் கொஞ்சிக் கொஞ்சி அவர் தமிழ் பேசுவதும் என சில காட்சிகளிலேயே படம் பார்ப்பவர்களை கவர்ந்து விடுகிற அவர், ஒரு கட்டத்தில் இறந்துபோய் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். தாமரை ஆக வரும் அனுசித்தாரா லட்சுமிகரமான தோற்றத்தில் வந்து ரசிகர்களை ஈர்த்து மனதில் அமர்ந்து விடுகிறார்.
விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் குறையில்லை.
வழக்கமான கமர்சியல் படங்களைப் பார்த்துப் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விலகல் உணர்வு தோற்றுவிக்கலாம். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்கிற வகையில் அது ஒரு புது வித அனுபவத்தைத் தருகிறது. அதே நேரம் சினிமாவுக்குத் தேவையான திருப்பங்களும் சுவாரசியங்களும் இந்தப் படத்தில் சேர்த்து இருந்தால் மேலும் ரசிக்கத் தக்கதாக மாறியிருக்கும்.
மனோஜ் கிருஷ்ணாவின் கை வண்ணத்தில் வெளிப்பட்டுஆன்மீக மணம் கமழ ஒலிக்கும் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளன.
ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின் மூலம் காசியில் உருவாக்கப் பட்டுள்ள விரிவான காட்சிகள் தனிக் காட்சி அனுபவம் தருகின்றன.இயக்குனர் சிவா கதையை நம்பிய அளவிற்கு திரைக்கதையை நம்பாதது ஒரு பின்னடைவு .
மொத்தத்தில் ‘ஆலன்’ பரபரப்பு சினிமாவில் இருந்து விலகிய ஆன்மீக மணம் வீசும் ஒரு பயண அனுபவம் எனலாம்.