‘இட்லி கடை’ திரைப்பட விமர்சனம்

தனுஷ் ,நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி,ஆடுகளம் நரேன்,ஷாலினி பாண்டே,  கீதா கைலாசம், இளவரசு, வடிவுக்கரசி, பிரிகிடா சகா நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் தனுஷ். ஒளிப்பதிவு – கிரண் கௌஷிக், இசை -ஜிவி பிரகாஷ் குமார், படத்தொகுப்பு – பிரசன்னா ஜிகே, டான் பிக்சர்ஸ் -வுண்டர் பார் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது. வெளியீடு ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார் .ருசி குறையக்கூடாது என்பதற்காகப் பிடிவாதமாக ஆட்டுக்கல்லில் மாவு அரைத்துதான் இட்லி சுட்டு விற்பார். கிரைண்டர் எல்லாம் அவருக்கு உடன்பாடு கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது மகன் தனுஷ் கேட்டரிங் படித்து வெளிநாட்டில் பாங்காக்கில் வேலை பார்க்கிறார்.அங்கே பெரிய ஸ்டார் ஓட்டல் தொழிலதிபராக இருக்கும் சத்யராஜிடம் வேலை பார்க்கிறார். சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேயைக் காதலிக்கிறார்.தனுஷின் நேர்மை உழைப்பைப் பார்த்து சத்யராஜும் சம்மதிக்கிறார்.ஆனால் சத்யராஜின் மகன் அருண் விஜய்க்கு இதில் சம்மதமில்லை. தனுஷை ஒவ்வாமையுடன் வெறுப்புடனேயே பார்க்கிறார்.அவ்வப்போது தனுஷின் பொருளாதார நிலைமையைக் குத்திக் காட்டி அவமானப்படுத்துகிறார். திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன.இந்த நிலையில் ராஜ்கிரண் இறந்து விடவே தனுஷ் ஊருக்கு வருகிறார். அப்போது அப்பாவின் கனவைப் பற்றி அறிந்து கொள்கிறார். அப்பாவின் கனவான அந்தக் கடையைத் தொடர்வது என்று அங்கேயே தங்கி விடுகிறார் .பிறகு தாயாரும் இறந்து விடவே,அந்தக் கடையை ஏற்று நடத்த முடிவு செய்கிறார். திருமணத்திற்குச் சில நாட்களே இருக்கும் நிலையில் அங்கே பாங்காக் வரச் சொல்கிறார்கள்.சற்றுக் காலமாகும் என்று சொல்பவர் வசதியான வாழ்க்கையா அப்பாவின் கனவா என்ற ஊசலாட்டத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில் முடியாது என்று மறுக்கிறார். இவரை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வர சத்யராஜ் மகன் அருண்விஜய் இங்கே வருகிறார் .அவர்களுக்குள் மோதல் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அது விபரீதமாகிறது. முடிவு என்ன என்பதுதான் 147.43 நிமிடங்கள் கொண்ட ‘இட்லி கடை’ படத்தின் மீதிக் கதை.எப்போதுமே எளிமையான விஷயங்கள்தான் உயர்வானவை. அதற்கு பகட்டோ, படாடோபமோ , அலங்காரங்களோ தேவையில்லை.உலகத்தில் உள்ள கடல் ஆறு மலை காடு போன்றவை பார்க்க எளிதானவை; பகட்டில்லாதவை .ஆனால் அதன் பெருமை அளவிட முடியாதது. அப்படித்தான் கிராமத்து மண், மனிதர்கள்,அவர்களின் பாச உணர்ச்சியும் .ஒரு தந்தையின் கனவை நிறைவேற்ற அதைத் தொடர்ந்து தொடர ஒரு மகன் செய்யும் முயற்சியும் செய்யும் தியாகமும்தான் இந்தக் கதை என்று கூறலாம்.ஊர் உலகம் சுற்றினாலும் தனக்கும் மண்ணுக்கும் உள்ள பாரம்பரியத் தொடர்பைக் காப்பாற்ற நினைக்கும் ஒருவனின் கதை என்றும் கூறலாம்.

இந்த வகையில் எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நல்ல உணர்வு பூர்வமான படத்தை வழங்கி உள்ளார் இயக்குநர் தனுஷ்.நம் கண்ணில் எளிமையாகத் தோன்றும் ஒரு இட்லி கடைக்குப் பின்னே இப்படி ஒரு அசலான வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் கதையாக்கி உள்ளார்.

இதில் சிவனேசன் பாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளார் . மனைவி மகன் என்று பாசத்துடன் குடும்பத் தலைவனாகவும் திருப்தியான உணவு தரும் இட்லி கடை நடத்துபவராகவும் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.இட்லி கடைத் தொழிலை அவர் தெய்வமாகப் போற்றுவதாகட்டும் அதற்கான மெனக்கெடல் ஆகட்டும் அதை அர்ப்பணிப்புடன் நடத்துவதாகட்டும் தொழில் குடும்பம் என்று சிறிய கனவு வட்டத்திற்குள் வாழும் அசல் கிராமத்து மனிதராக வாழ்ந்துள்ளார்.அவரது மகன் முருகனாக வரும் தனுஷ், தந்தையின் தொழிலைச் சார்ந்த கேட்டரிங் படிக்கிறார்.  பாங்காக்கில் வேலை பார்க்கிறார் .அப்போது ஒரு படித்த மனிதராக தோன்றுகிறார், என்றாலும் உள்ளுக்குள் தந்தை பாசம் இருந்தாலும் தந்தையின் கனவு நிறைவேற்ற முடியாமல் இந்த உலக ஓட்டத்துக்கும் ஈடு கொடுக்கவும் முடியாமல் திணறி ஒரு கட்டத்தில் முடிவெடுக்கிற அந்த முருகன் பாத்திரத்தில் அவர் அச்சு அசலாக மாறி ரசவாதம் செய்து வாழ்ந்திருக்கிறார். பாங்காக்கில் படித்த வாலிபனாக அவரது தோற்றமும் நடிப்பும் கிராமத்து மனிதராக அவர் வெளிக்காட்டும் இன்னொரு பரிமாணமும் மிகச் சிறப்பாக உள்ளன. அஹிம்சை தான் சிறந்த வலிமையான ஆயுதம் என்ற தந்தையின் தாரக மந்திரத்தைத் தனக்குள் தாங்கி அவர் வன்முறைகளைத் தாங்கிக் கொண்டு தன்னைத் தாக்க வருபவர்களைப் பொறுத்துக் கொள்கிறார்.பொங்கி எழும்போதும் பொறுத்துக் கொள்ளும் போதும் அவர் நல்ல நடிப்பை வழங்கி உள்ளார்.அவரைப் பள்ளிக்காலத்தில் இருந்து காதலிக்கும் உள்ளூர்ப் பெண் கயலாக வரும் நித்யா மேனனும் அந்தக் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக வருகிறார் .அவரதுதோற்றத்தைப் போலவே நடிப்பும் அடர்த்தியானது.

தனுஷின் அம்மா கஸ்தூரி ஆக வரும் கீதா கைலாசம் தன்னை உருக்கிக் கொண்டு குடும்பம் இட்லி கடை என்று உழலும் கிராமத்து தாயாக நடித்துள்ளார்.பாங்காக்கில் பெரிய தொழிலதிபராக வரும் சத்யராஜின் தோற்றமும் நடிப்பும் அசைவுகளும் மிகப் பொருத்தம். தனுஷின் பாங்காக் காதலியாக வரும் ஷாலினி பாண்டே பணக்காரத்தனத்திற்கும் நியாய உணர்வுக்கும் உதாரணமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.தோற்றமும் நடிப்பும் இயல்பாக உள்ளன.

சத்யராஜின் மகன் அஸ்வினாக வரும் அருண் விஜய் அந்த பணக்காரத் திமிரும் மமதையும் கொண்ட பாத்திரத்தில் இறுதிவரை பிசகாமல் வாழ்ந்துள்ளார்.அவர் வரும் காட்சிகளில் அந்தப் பாத்திரத்தின் குணம் தெரிகிறது.
தனுஷ் உடன் வேலை பார்க்கும்  இளவரசு ,ஊருக்கு தனுஷுடன் இங்கே வருகிறார். அவரது பாத்திரம் இயல்பாக அமைந்துள்ளது. சமுத்திரக்கனி எதிர்மறைப் பாத்திரத்தில் வருகிறார்.உள்ளூரில் தனுசுக்கு போட்டியாக கடை வைத்திருக்கும் அவர், அந்த எதிர்மறைக் குணத்தை வெளிப்படுத்துகிறார்.

இவர்கள் முக்கியமான நட்சத்திர நடிப்புக் கலைஞர்கள் .இவர்கள் தவிர தனுஷின் பாட்டி வடிவுக்கரசி, உள்ளூர் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ,சிறுவயது ராஜ்கிரணாக வரும் தமிழ் கௌதமன், அவரது மனைவி பிரிகிடா,தனுஷ் கடைக்கு இட்லி சாப்பிட வரும் அந்தப் பெரியவர் முதல் அந்தக் கன்றுக் குட்டி வரை இந்தப் படத்தில் வாழும் பாத்திரங்கள் பல உள்ளன.

படத்தின் கதை ஓட்டத்திற்குப் பெரும்பலமாக கிரண் கெளஷிக்கின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது .ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே சோடை போகாமல் உள்ளன.

திரைக்கதை ஓட்டத்தில் வேகத்தடை உணர வைக்காமல் இயல்பான படத்தொகுப்பு செய்துள்ளார் படத் தொகுப்பாளர் பிரசன்னா ஜிகே.

கண்களை விரிய வைக்கும் பாங்காக் பின்புலக் காட்சிகளை விட மனதை நெகிழ வைக்கும் கிராமத்துக் காட்சிகள் வலிமையாக உள்ளன. பணத்தைத் தேடி ஓடிக்கொண்டே நம் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிற அபாயத்தைக் கூறி எச்சரிக்கிறது இந்தப் படம்.எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத வாழ்க்கையையும் எதுவும் இல்லாமலேயே எல்லாம் இருப்பதாகத் தோன்ற வைக்கும் வாழ்க்கையையும் கண்ணெதிரே காட்டியுள்ளது இப்படம். குடும்பத்திற்காக உழைத்து தியாகம் செய்த பெற்றோர்களின் பெருமையை இறந்த பிறகு சொல்லி அழுதை விட இருக்கும்போதே கொண்டாட வேண்டும் என்று சொல்கிறது படம் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்ல இயக்குநராகவும் சில படிகள் மேலே சென்று உள்ளார்.

முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாமல் குடும்பத்தினருடன் பார்க்கும் படியான நிறைவளிக்கும் படம் இந்த இட்லி கடை.
மொத்தத்தில் நல்ல உணர்வுகளைச் செல்லும் படமாக’ இட்லி கடை’ அமைந்துள்ளது.