இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் இது தான்மிகச்சிறந்த படம் : தயாரிப்பாளர் S.R.பிரபு!

அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. அப்போது இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் இது தான்மிகச்சிறந்த படம்  என தயாரிப்பாளர் S.R.பிரபு கூறினார்.
 
 விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :-  இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன் ?? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்திசரவணன் தான் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார்.
 
இரவு 9மணிக்கு மேல் தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி , இசையோடு அவர் கதையை கூறினார். நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
 
அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும் , இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர். அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 500 பெண்களை இயக்குநர் Audition செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக Audition செய்கிறீர்களா ?? அல்லது 500   பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition  செய்கிறீர்களா ?? என்று கேட்டேன்.
 
சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சென்சார் குழு இந்த படத்தை எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது ”என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.
 
 
இயக்குநர் அருண் பிரபு பேசியது :- அருவி மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர் பாலு மகேந்திரா , கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு நன்றி ” என்றார். 
 
இந்நிகழ்வில்   படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு ,   நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த்  , ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகர்கள் ஸ்வேதா சேகர் , அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.