இதோ ஓர் நம்பிக்கை இசை முகம் : ‘மாயக்கூத்து’ இசையமைப்பாளர் அஞ்சனா !

அண்மையில் வெளியாகி விமர்சகர்களின் கவனத்தையும் படம் பார்த்தவர்களின் பாராட்டையும் பெற்றுள்ள படம் ‘மாயக்கூத்து’.இப்படம் திரையுலகினர் மத்தியிலும்பேசப்பட்டு வருகிறது. ஒரு படைப்பாளியின் கதாபாத்திரங்களே உயிருடன் வந்து அவரைச் சந்தித்து ப பழி வாங்கும் கதையாக அது இருக்கும்.இந்தப் படத்தின் கதையைப் போலவே இசையும் கவனம் பெற்றுள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளவர் புதுமுக இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன்.ஒரு பெண் இசையமைப்பாளராக இருந்து முதல் படத்திலேயே வித்தியாசமான ஒலியைப் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருப்பார்.

இனி அஞ்சனாவுடன் பேசலாம்!

இசையில் அறிமுகம் பற்றி?

நான் சின்ன வயதில் மிகவும் குறும்புக்காரப் பெண்ணாக இருந்தேன். ஒரு இடத்தில் கூட உட்கார மாட்டேன். ஓடியாடிக் கொண்டிருப்பேன்.என் குறும்புத்தனத்தை அடக்க அம்மா ஒன்று செய்வார்களாம். என்னை அமர வைக்க அஞ்சலி படத்தின் பாடல்களைப் போட்டால் கப் சிப் ஆகி ரசிக்க ஆரம்பித்து விடுவேனாம். என்னவோ அந்த பாடல்களில் அப்படி ஒரு ஈர்ப்பு. அப்படியே மெல்ல மெல்ல வளர, இசை என்னை ஈர்த்துக் கொண்டது.இசையில் எனக்கு உள்ளதை ஆர்வம் தாண்டி அபாரமான ஒரு மோகம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி சிறுவயதிலிருந்தே நான் கர்நாடக இசை கற்றுக் கொண்டேன். வெஸ்டர்ன் கிளாசிக்கல் கற்றுக் கொண்டேன். வெஸ்டர்ன் கிளாசிக்கலில் நான் தொழில் முறையான பாடகி. குறிப்பாக ஆபரா கலையில் அதிக ஆர்வம் உண்டு .ட்ரினிட்டி காலேஜில் ஆபராவில் வாய்ப்பாட்டுக்காக LTCL சான்றிதழ் பெற்று இருக்கிறேன்.

என் அம்மாவுக்கு சொந்த ஊர் பாலக்காடு அப்பாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி .அம்மா பள்ளி ஆசிரியை, அப்பா மார்க்கெட்டிங் பணி.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.இ., பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன்.எனது கனவு லட்சியம் எல்லாமே இசைதான்.

இசையில் அடுத்த கட்டமாக என்ன செய்கிறீர்கள்?

நான் ஆபரா இசை கற்றுக் கொண்டேன் என்று சொன்னேன் அல்லவா? நான் பல்வேறு சர்வதேச இசை கச்சேரிகளில் கலந்துகொண்டு பாடியிருக்கிறேன்.
இதற்காக ஜெர்மனி, சைனா, மாசிடோனியா, போலந்து போன்ற நாடுகளில் நான் பாடிருக்கிறேன். இந்தியா போலந்து கூட்டுறவில் இந்தோ போலீஷ் என்ற கலாச்சார இசை நிகழ்ச்சியில் நான் கம்போஸ் செய்து பாடியிருக்கிறேன். அதில் உலக நாடுகளில் இருந்து 140 இசைக் கலைஞர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அது ஒரு நேரலை நிகழ்ச்சியாக நடைபெற்றது.ஆபரா இசையைப் போலவே சினிமா இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு.சினிமாவிலும் பாடி வருகிறேன்.

மாயக்கூத்து படத்திற்குள் எப்படி வந்தீர்கள்?

என்னுடன் பணியாற்றும் கிரீஷ் எனது நண்பர் மட்டுமல்ல,இசையமைப்பாளரும் கூட.அவர் மூலம்தான் இந்த படத்தின் இயக்குநர்,ஒளிப்பதிவாளர் எல்லாரும் அறிமுகம் ஆனார்கள்.என்னை சந்தித்தவர்கள் பின்னணி இசை அமைக்குமாறு கேட்டார்கள்.இயக்குநர் ராகவேந்திரா, ஒளிப்பதிவாளர் சுந்தர் ராமகிருஷ்ணன்  இருவரும் செய்திருந்த பணி எனக்குப் பிடித்திருந்தது. வித்தியாசமான கதை ,புதிய கதை சொல்லும் முறை என்று அது என்னைக் கவர்ந்தது.
படத்தை எடுத்து எடிட் செய்து முடித்த நிலையில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன்.முதலில் பாடல்கள் இல்லாமல் தான் அந்தப் படம் இருந்தது.
நான் பின்னணி இசையோடு விட்டுவிடாமல் பாடல்கள் வைக்கலாம் என்று அதற்கான சூழல்களைத் தேர்ந்தெடுத்து பாடல்கள் உருவாக்கினேன். குறிப்பாகப் பாத்திரங்களையும் சம்பவங்களையும் விவரிக்க பாடல்களைப் பயன்படுத்தினோம் .அப்படி 5 பாடல்கள் உருவாக்கினோம்.

பாடல்களை அந்த எழுத்தாளர் பாத்திரத்தில் நடித்த நாகராஜன் கண்ணன் தான் எழுதினார். குறிப்பாக ‘கோலின் நுனியில்’ என்ற பாடல் எனக்குப் பிடித்தது கேஸ்பர் வாசுகி பாடி இருப்பார் .இப்படி எடுத்து முடித்த படத்திற்குப் பாடல்கள் உருவாக்குவது ஒரு சவாலானது மட்டுமல்ல சுவாரஸ்யமானதாகவும் இருந்தது.

திரைப்பட பின்னணி இசைக்காக எப்படி முன் தயாரிப்பு செய்து கொண்டீர்கள்?

அதற்காக தனியாக என்று எதையும் செய்யவில்லை. எனது இசைப் பயணத்தில் திரைப்பட இசையும் சேர்ந்து தான் வந்து கொண்டிருக்கிறது.எல்லாரது இசை பங்களிப்புகளையும் கவனிப்பேன்.நான் நிறைய படங்கள் பார்ப்பேன். சொன்னால் நம்ப மாட்டார்கள் வாரம் எட்டு படம் பார்த்து விடுவேன் .எனவே அனைத்தும் சேர்ந்தே தான் என்னுடன் வந்திருக்கிறது.

பின்னணி இசையமைக்கும்போது குறிப்பாக எதைக் கவனத்தில் கொண்டீர்கள்?

வருகின்ற படங்களை எல்லாம் பார்த்தால் அனைத்து காட்சிகளிலும் ஏதாவது ஓசை ஒலியை இசை என்று நினைத்துக் கொண்டு நிரப்பி அடைத்து விடுகிறார்கள் .
அது தேவையற்றது என்பேன்.

பின்னணி இசையில் எங்கே நிசப்தமாக விடுகிறோமோ அது முக்கியமானது.எங்கே சைலன்ஸ் விட வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. அந்த நிசப்தமான இடங்களில் தான் பார்வையாளர்களை யோசிக்க வைக்க முடியும்.ஒரு திரைப்படத்தில் எந்த இசையும் இல்லாமல் மௌனித்து விடும் இடங்கள் காட்சிகளுக்கு ஆழம் சேர்ப்பவை. அந்த வகையில் இந்தப் படத்தில் நான் பல இடங்களில் இப்படி இடம் விட்டிருக்கிறேன். அது ஒரு புதிய அணுகுமுறை என்று கூறுவேன்.

படத்தில் பின்னணி இசையமைத்ததில் பிடித்த காட்சி எது?

அந்த எழுத்தாளர் தான் உருவாக்கிய கதாபாத்திரங்களைச் சந்திக்கும் மூன்று கேரக்டர்கள். ஒவ்வொரு பாத்திரம் வரும்போதும் அவரது உணர்வுகள் மாறும் அவருடைய மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். சாதாரணமாக இருந்தது மிகவும் தீவிரமடையும் மனநிலைக்கு செல்லும் அது படத்தில் மூன்று பாகம் போல் தெரியும். இந்த மூன்று விதமான மனநிலை ,அதிர்ச்சி பிடிவாதம் வெறி என்று மாறும். அந்த மூன்று மனநிலைகளையும் சில நிமிடங்களில் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பின்னணி இசை கொடுத்திருப்பேன்.அது எனக்கு பிடித்த இடம்.

படத்தைப் பார்த்துவிட்டு எதிர்வினைகள் எப்படி இருந்தன?

ஊடகங்களில் படம் பற்றிய விமர்சனங்களிலும் இசையைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி பாராட்டி இருக்கிறார்கள். திரையரங்குகள் போய் பார்த்த போதும் அனைவரும் படத்தை பாராட்டியவர்கள் குறிப்பாக இசை வித்தியாசமாக இருப்பதாகக் கூறினார்கள்.அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  மறக்க முடியாத பாராட்டு எது?

படத்தின் கதை பிடித்து, எடுத்திருக்கும் விதம் பிடித்து தான் நான் இசையமைக்க ஒப்புக் கொண்டேன். இந்த படம் சிறிய படம் தான். பெரிய சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லை. பெரிய பட்ஜெட் இல்லை. ஆனால் அந்த சினிமா அனுபவம் அனைவருக்கும் திருப்தி தரும் வகையில் இருக்கும். அந்த வகையில் தான் நான் இசையமைக்கச் சம்மதித்தேன். இதில் அறிமுகமாவதற்காகப் பெருமைப்பட்டேன்.
படத்தை பார்த்துவிட்டு நடிகையும் நடனக் கலைஞருமான சொர்ணமால்யா என்னை மிகவும் பாராட்டினார். புத்திசாலித்தனமான படம் இசை வித்தியாசமாக இருக்கிறது என்று பாராட்டினார் .நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பாராட்டினார். இயக்குநர் சேரன் படத்தைப் பாராட்டியதுடன் தனது சோசியல் மீடியாவில் பாராட்டி பகிர்ந்து விட்டார். இப்படி இந்தப் படத்தைப் பலரும் கொண்டாடுகிறார்கள்.

உங்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் யார்?

ஏ .ஆர் .ரகுமான் அவர்களைத் தான் சொல்வேன். இரண்டு வகையிலும் அவரை எனக்குப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு நல்ல மனிதர் எளிமையானவர், பெருந்தன்மையானவர்,சிம்பிள் அண்ட் ஹம்பிள் .

இசையில் அவர் ஒரு புது பாணியைக் கொண்டு வந்தவர் .இசையில் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அவர் இசையில் ஒலி வித்தியாசமாக இருக்கும். அது,அருமையாக இருக்கும். யாராலும் வெளிப்படாத ஒன்றாகவும் அது இருக்கும். அவரது இசை கேட்டுக் தான் நான் வளர்ந்தேன். ‘கோப்ரா’ படத்தில் அவர் இசையில் நான் பாடியது மறக்க முடியாது. லேமஸ் என்கிற இசை வடிவத்தில் பாடி இருக்கிறேன்.பத்ம விபூஷன் பெற்றவர் அம்ஜத்அலி கான் .அவருடன் ஏ .ஆர். ரகுமான் இணைந்து செய்த ஒரு ஆல்பத்தில் நானும் பங்கேற்று இருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியான பெருமையான அனுபவம்.

இப்போதைய உங்கள் இசை முயற்சிகள் ?

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை ‘ படத்தில் மூன்று பாடல் பாடியிருக்கிறேன். இந்தப் படத்தை பாலாஜி குமார் இயக்குகிறார். ஓபரா இசையில் ‘ஓசை ‘என்று தொடங்கும் பாடலை பாடியிருக்கிறேன். இது இந்தியாவில் முதன் முதலாக ஆபரா இசை வடிவம் இடம்பெறும் பின்னணி இசைப் பாடலாகும்.அடுத்து நேசம் மாறுமா என்று இன்னொரு பாடல், மூன்றாவதாக பார்த்த ஞாபகம் இல்லையோ என்பதை தெலுங்கில் பாடி இருக்கிறேன்.இப்படி மூன்று பாடல்கள் பாடியிருக்கிறேன்.

நான் இந்தோ போலீஷ் ஆல்பம் ஒன்று உருவாக்கி வருகிறேன்.பாலிவுட்டில் அறிமுகமாக ஷாத் அலி இயக்கத்தில் அமித்ர வேதி இசையில் நான் பாடிருக்கிறேன். இந்தப் படத்தை ஷாத் அலியுடன் இணைந்து தயாரிப்பது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த்.இப்படி எனது இசைப் பயணம் தொடர்கிறது