கிஷோர் ,டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா , நரேன் ,திலீபன் ,ஜான்விஜய், போஸ் வெங்கட், ஹரீஷ் பெராடி, சிங்கம்புலி நடித்துள்ளனர்.
கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். இசை -அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவு – எஸ். பிச்சுமணி, படத்தொகுப்பு பிரகாஷ் மப்பு . ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஜி ஆர் மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
யூடியூப் வழியாகப் பிரபலமானவர்கள் சினிமாவில் அறிமுகமாகும் காலம் இது. யூடியூபில் சர்ச்சைகள் மூலம் பிரபலமானால் மேலும் அவர்களுக்குக் கவனம் கிடைக்கிறது. அந்த வகையில் சர்ச்சை நாயகனாக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ,டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் இந்த’ இந்தியன் பீனல் லா’ என்கிற ‘ஐ பி எல்’.
நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. இன்னமும் எளிய மக்கள் துயரங்களைச் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.அதில் ஒரு இழையாக இந்தக் கதையைக் கூறலாம்.அப்படி இழை ஒன்றை எடுத்துக் கொண்டு மையமாக்கி ,கதையாக மாற்றி இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
போஸ் வெங்கட் மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விடுகிறான் என்று சந்தேகப்படுகிறார். அவனை காவல் நிலையம் கொண்டு சென்று கடுமையாகத் தாக்குகிறார் அவன் கஸ்டடியில் இறந்து விடுகிறான். அப்போது அவனது செல் போனை ஆராயும் போது உயர்ந்த நிலையில் இருக்கும் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். அதற்குப் பிறகு பல ரகசியமான அரசியல் செயல்பாடுகள் நடக்கின்றன. அந்த லாக்கப் மரணத்திற்கு அப்பாவியான வாடகை கார் ஓட்டும் கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள்.மேலிடத்து அழுத்தத்தால் அவரைத் துன்புறுச்சி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள்.அந்த கிஷோரின் தங்கையை நாயகன் ,டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார்.
இளைஞனின் மர்ம மரணம், கிஷோர் மீது பொய் வழக்கு போன்றவற்றை அம்பலப்படுத்தி நீதியை நிலை நாட்ட நினைக்கிறார் வாசன். அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? கிஷோரைக் காப்பாற்றினாரா? அந்த வீடியோவில் என்னென்னவெல்லாம் இருந்தன? என்பதை நோக்கிச் செல்லும் கதை தான்’ஐபிஎல்’ .
லாக்கப் மரணங்கள் நாட்டில் சகஜமாகிவிட்டன .அதை ஒரு தரப்பாக எடுத்துக் கொண்டு, கடந்த ஆட்சியில் தமிழகத்தை உலுக்கிய நிகழ்வுகள் இரண்டையும் கலந்து சற்று கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.
அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் ஒன்று சேர்ந்து கொண்டு பொதுமக்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி உள்ளார்கள்.
,டிடிஎஃப் வாசன் தான் கதாநாயகன் என்றாலும் கிஷோர் தான் படத்தைத் தூக்கி நிறுத்தும் கதை நாயகனாக நடித்துள்ளார். குணசேகரன் பாத்திரத்தில் வருகிற கிஷோரின் திறமையை நம்பி அந்த வெளிச்சத்தில் டிடிஎஃப் வாசன் இந்தப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறார் என்று கூற வேண்டும் . அந்த நம்பிக்கையின் படி கிஷோரும் பல இடங்களில் தனது பண்பட்ட நடிப்பால் மதிப்பெண்களை அள்ளுகிறார். அவர் போலீஸ் விசாரணையில் கொடுமைப்படுத்தப்படுவது ரத்தக்கண்ணீர் வர வைக்கும் காட்சிகள் .குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டு அவர் தவிக்கிற காட்சிகள் பார்ப்பவரைக் கலங்க வைக்கும்.
ஃபுட் டெலிவரி பாயாக வருகிறார் டிடிஎஃப் வாசன். அவர் , தான் திருந்தி விட்டதாக உணர்த்துவதற்காகவோ என்னவோ “டிராபிக் ரூல்ஸை மதிக்க வேண்டும்” என்ற வசனத்துடன் தான் அறிமுகம் ஆகிறார் .புதியவரானாலும் காதல் காட்சிகளிலும் பாடல்களுக்கான நடனக் காட்சிகளிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
அவரது சில்வண்டு ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு பைக் ரேஸ் சண்டை காட்சியிலும் நடித்துள்ளார். அவர் புதுமுகம் என்பது பல இடங்களில் அவரது பாவனைகளில் தெரிகிறது.தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால் நிறைய கற்றுக்கொண்டு வரவேண்டும்.
கிஷோரின் மனைவியாக வருகிறார் அபிராமி. போலீஸ் கொடுமைப்படுத்தும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறார். போஸ்ட் வெங்கட் கொடூரமான குணம் கொண்ட போலீசாக வருகிறார் .சிங்கம்புலி சில காட்சிகளில் வருகிறார். எதிர்மறையான போலீஸ் எஸ்.பியாக ஹரிஷ் பெராடியும் நேர்மையான போலீஸ் எஸ்பியாக திலீபனும் வந்து தங்கள் முத்திரையைப் பதிக்கிறார்கள் .முதல்வராக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். மேலும் படத்தில் இடம்பெறும் இளம் பெண் அரசியல் தலைவர் பாத்திரங்கள் கடந்த காலத்தை நினைவூட்டுகின்றன.
படத்தில் எதிர்மறை அம்சங்கள் அதிகம் என்று தோன்ற வைக்கும் படி காட்சிகள் உள்ளன.அவ்வகையில் ஜான்விஜய்யின் மோசமான போலீஸ் சித்திரவதைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
இயக்குநர் விரும்பிய படி இசையும் ஒளிப்பதிவும் இணைந்து பயணித்துள்ளன.
பெரும்பாலான இடங்களில் போலீஸ் கொடுமைகள் சித்திரவதைகளைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். சாமானியர்களின் பிரதிநிதி பாத்திரமாக கிஷோர் எப்போதும் அவமானங்களையும் கொடுமைகளையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற நமது அரசியல் சட்டத்தின் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் நாட்டில் நடக்கும் பல அவலங்கள் நிரபராதிகள் பாதிக்கப்படும் காட்சிகள் கொடுமையின் சாட்சிகளாக உள்ளன.
மொத்தத்தில் இந்த ஐபிஎல் சாமானியர்களின் வேதனையை வணிக ரீதியிலான திரைப்பட வடிவத்தில் பேசுகிறது.


