வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் , ராஜ்குமார், சுரேஷ்மூர்,கஜராஜ் நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் சபரிஷ் நந்தா.ஒளிப்பதிவு பிரபு ராகவ், இசை அஜ்மல் தஹ்சீன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல்.
ஜே எஸ் எம் மூவி ப்ரொடக்ஷன் ,எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரித்துள்ளனர்.
தூங்கிக் கொண்டிருக்கும் வசந்த் ரவிக்கு திடீரென கதவு தட்டப்பட்டது போன்ற உணர்வு. திடுக்கென எழுந்து பார்த்தால் அவர் கட்டில் அருகே ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். யார் என்று பார்த்தால் அவர்தான் அது.தொட்டுத் தடவிப் பார்த்தால் அவருக்கும் குத்தப்பட்டு இரத்தம், திடுக்கிட்டு விழித்தால் தான் தெரிகிறது அது ஒரு கனவு.ஆனால் அதற்குப் பிறகு அவர் மனம் அமைதியிழந்து காணப்படுகிறார் .அவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.அதனால் அவரது மேல் அதிகாரிகள் உதாசீனப்படுத்துகிறார்கள்.
கோபம் , மன அழுத்தம் என்று மோசமாகக் குடிக்கிறார்.அவரது காதல் மனைவி கயல் செய்வதறியாமல் தவிக்கிறார்.குடி, புகையை நிறுத்தச் சொல்லி மன்றாடுகிறார்.ஆனாலும் அவரால் நிறுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு அவரது கண் பார்வை பறி போகிறது .இந்த நிலையிலும் கயல் அவர் மீது பாசமாக இருக்கிறார். தனக்குப் பார்வை திரும்புமா என்று பதற்றப்படுகிறார். கயல் ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில் மனைவி கயல் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார்.வேலையும் போய் கண் பார்வையும் போய் தனது மனைவியும் கொலை செய்யப்பட்டு தாங்க முடியாத அழுத்தத்தில் தவிக்கிறார் வசந்த் ரவி.தன் மனைவியைக் கொன்றவனை கண்டுபிடிக்கவும் பழி வாங்கவும் துடிக்கிறார்.
ஒரு சைக்கோ கொலைக்காரன் தொடர்ந்து கொலைகள் செய்து வருகிறான் .அவனை போலீஸ் சந்தேகித்து அவள் தான் கயலைக் கொலை செய்தவன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவனோ தான் 28 கொலை செய்ததாகவும் ஆனால் கயலைக் கொலை செய்யவில்லை என்றும் கூறுகிறான். இப்படி முடிகிற பாதிப் படம் .பிறகு சூடு பிடிக்கிறது. உண்மையான கொலைக்காரன் யார் என்று தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் வசந்த் ரவி. முடிவு என்ன என்பதுதான்128.31 நிமிடங்கள் கொண்ட ‘இந்திரா’ படத்தின் மீதிக் கதை.
படத்தில் பிரதான நாயகன் இந்திராவாக வசந்த் ரவி நடித்துள்ளார்.எப்போதும் தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் நடிக்கும் வசந்த் ரவி, பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்ட அந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவமானம் , புறக்கணிப்பு,தவிப்பு, இழப்பு, கோபம், வன்மம் என்று அனைத்தையும் கலந்த சூழல்களில் தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.கண் பார்வை போன பிறகு அசலாக பார்வை இழந்தவர் போலவே உடல் மொழி காட்டி நடித்துள்ளார்.வீட்டுக்குள் அவருக்கும் கொலையாளிக்கும் நடக்கிற சண்டையில் மிரள வைக்கிறார்.
நாயகியாக கயல் பாத்திரத்தில் வரும் மெஹ்ரீன் பிர்சாடா சாந்தமாக வந்து காதலில் மகிழ்ந்து, கணவரிடம் உருகி, கவலைப்பட்டு பொசுக்கென்று இறந்து போய் விடுகிறார். நடித்தவரை ஓகே. அழகான முகம் பாந்தமான நடிப்பு என்று அனிகா சுரேந்திரன் வருகிறார்.
இதுவரை நகைச்சுவைப் பாத்திரத்தில் வந்த தெலுங்கு நடிகர் சுனில் இதில் அபிமன்யு என்கிற சீரியல் கொலைகாரனாக வருகிறார்.அலட்டிக் கொள்ளாமலேயே ஸ்கோர் செய்கிறார்.வசந்த் ரவின் நண்பராக நடித்திருக்கும் ராஜ்குமார் இயல்பான நடிப்பு.படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் நடன இயக்குநர் கல்யாண் தோற்றம் நடிப்பு என கவனிக்க வைக்கிறார். பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கு நல்லதொரு இடம் உண்டு .அனிதாவின் காதலனாக வரும் அந்த இளைஞரும் கவனம் பெறுகிறார்.
பிரபு ராகவின் ஒளிப்பதிவு ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
திரைக்கதையே தொய்வின்றி இருக்கும்போது தேவைக்கதிக பின்னணி இசை பரபரப்பு தேவையில்லை.அஜ்மல் தஹ்சீனின் பின்னணி இசையின் ஒலி அளவைக் குறைத்திருக்கலாம்.பிரவீனின் எடிட்டிங் பணி குறிப்பிடத் தக்கது.

முதல் பாதி பரபரப்பாக நகர்ந்து திடுக்கிடும் திருப்பத்துடன் முடிந்தாலும் அதே பரபரப்பு இரண்டாம் பாதிப் படத்திலும் பராமரித்து, அதைத் தக்க வைத்துள்ளது இயக்குநர் திரைக்கதை கைவண்ணத்துக்கு சான்று.
மொத்தத்தில் ‘இந்திரா’ தொடங்கியது முதல் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாத எதிர் பாராத திருப்பங்கள் கொண்ட திரில்லர் அனுபவத்தை தருகிறது.


