மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி ’உருவாகியுள்ளது.இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும் நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வருகிற 17–ந்தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் வைரமுத்து பேசிய போது
”கடந்த 23 ஆண்டுகளாக மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் நானும் இணைந்து கலைக்கூட்டணி அமைத்துப் பயணித்து வருகிறோம். மணிரத்னத்தின் 24-ஆவது படம் ‘ஓ காதல் கண்மணி’.
24 படங்கள்தானா என்று தயாரிப்புக் கணக்குப் பார்த்தால் அது குறைவுதான்! ஆனால் தர எண்ணிக்கையில் கணக்குப் பார்த்தால் அது அதிகம்தான்! 24 படங்களிலும் 24 விதமான அனுபவங்களை திரை ரசிகர்களுக்கு மணிரத்னம் தந்திருக்கிறார்.
நான் ஊரில் இல்லாத போது, இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் இனிமேல் ஊருக்கு செல்லக் கூடாது என்று நினைக்கிறேன் என்றேன். இப்படத்தின் கதையைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குகிற கதை. இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உண்டாக்குகிறார்களா, சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.
ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால், ஒரு வணிக எல்லைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். என்னைப் போல ஒரு படைப்பாளி, கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விடமுடியும். ஆனால், ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகளை முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி வணிக ரீதியிலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை மணிரத்னம் செய்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற நிறுவனம் இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இந்திய சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாக்குதல் என்கிற ஒரு பெரிய ராட்சத அலையில் வட்டார கலாச்சாரங்களும், மொழிகளும், பண்பாடுகளும் மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக்கூடிய நிலையில் இந்த படம் வெளிவருகிறது. இந்த அடித்தளத்தை நினைத்துக் கொண்டு இந்தப்படத்தை நீங்கள் துய்த்தால் உண்மை நம் கண்களுக்கு பிரகாசம் ஆகுமென்றே நினைக்கிறேன்.” என்றார்.
இச்சந்திப்பில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், துல்ஹர் சல்மான், ரம்யா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். நாயகி நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை.