இப்போதெல்லாம் சினிமாவுக்கு வருகிறவர்கள் குறும்படம் எடுத்து தங்களது திறமைக்கு அடையாளம் தேடிக் கொண்டு வருகிறார்கள்;வாய்ப்பு பெறுகிறார்கள். அந்த வகையில் காத்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன், நலன் குமாரசாமி போன்றவர்கள் சினிமாவில் வெற்றி பெற்று வருகிறார்கள்.
இந்த வகையில் ‘ஒரு லைக் ஒரு கமண்ட்’என்கிற பெயரில் ஒரு குறும்படம் எடுத்து திரையுலகினர் மத்தியில் திரையிட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று இருக்கிறார் மாஸ்ரவி .
சினிமாவே பார்க்காமல் விமர்சனம் என்கிற பெயரில் திரையுலகிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பொறுப்பற்று செயல்படும் இளைஞர்கள் பற்றிய கதை இது. பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றால் எப்படி திரையுலகினர் பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்கிறது படம்.
நாயகனாக நடித்து இயக்கியுள்ளார் ‘மாஸ்’ரவி.
இப்படத்தின் திரையிடல் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசும் போது:
” இப்படத்தை இயக்கியுள்ள மாஸ்ரவி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டுள்ளவர். நம்மை மற்றவர் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்காமல் தானே உருவாக்கிக் கொண்டுள்ளார். நெப்போலியன், அலெக்சாண்டர் எல்லாம் அப்படித, தானே உருவாக்கிக் கொண்டவர்கள். இன்று சினிமாவுக்கு வருகிறவர்களில் பலர் இன்ஜினியரிங் முடித்தவர்கள் .எல்லாருக்கும் படித்தது ஒன்று விரும்பியது ஒன்று , கிடைப்பது ஒன்று என்றுதான் இருக்கிறது. பாரதிராஜாசார் நடிக்க வந்தவர்தான் இயக்குநர் ஆகிவிட்டார். ஷங்கர்சார் நடிக்க வந்தவர்தான் இயக்குநர் ஆகிவிட்டார்.
இன்று பேஸ்புக் தவிர்க்க முடியாத சாதனமாகிவிட்டது. ஒவ்வொரு இந்தியர் மூலமும் வருமானம் போகிறது. பேஸ்புக் பற்றிச் சொல்கிற கதை இது.இக்குறும்படத்தின் மூலம் மாஸ்ரவி தனக்கு நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். அவர் குறும்படத்திலிருந்து சினிமாவிலும் வெற்றிபெற வேண்டும் ” என்றார்.
இயக்குநர் சரவண சுப்பையா பேசும் போது ” இதைக் குறும்படமாக டெலி பிலிமாக எடுத்திருக்கிறார். இந்திய சினிமாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறும்பட படைப்பாளிகள் சினிமாவில் பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள்.
குறும்படம் என்பதை சாதாரணமாக பார்த்தது இப்போது மாறிவிட்டது. ‘தி ப்ளாக் ஹோல்’ என்கிற இரண்டு நிமிடக் குறும்படம் 2 பில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறது. உலகிலேயே அதிகம்பணம் சம்பாதித்திருக்கிறது. இந்தப் படத்தை ‘பாபநாசம்’ போல அன்றாடவாழ்க்கை கலந்து எடுத்திருக்கலாம். இருந்தாலும் இதை குறைகளைத் தவிர்த்து விட்டு ரசிக்கலாம். ” என்றார்.
நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது ” சினிமாவில் எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் நானும் திணறியிருக்கிறேன். வாய்ப்பு தேடிய போது நாங்கள் டீக்கடையில் கூடிப் பேசுவோம். இப்போது பலர் பல இடங்களில் மேலே போய் விட்டார்கள். ஆனாலும் இன்னமும் சிலர் அங்கே அன்றாடம் வருவதை பார்க்கிறேன்.அப்போது வருத்தமாக இருக்கும். . வாய்ப்பு தேடுவோருக்கு ஒரு அறிவுரை, எல்லாரும் வருமானத்துக்கு ஒரு தொழிலை வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு தேடிய காலங்களில் நான் காலையில் காய்கறி வியாபாரம் செய்வேன். இங்கு எல்லாருமே வலிதாண்டி வந்தவர்கள்தான் “என்றார்.
நடிகர் மைம் கோபி பேசும்போது” இன்று செல்போன் ஆறாவது விரல் போலாகிவிட்டது. பெண் நண்பர்களிடம் பேச ஆரம்பித்து விட்டால் 24 மணி நேரமும் போன் ஒலிப்பது போலவே தெரியும்.
செல்போனை தூக்கி வீசுங்கள். யாரையும் மனசால் புண்படுத்த வேண்டாம். நல்ல மக்களை சேருங்கள். நல்ல வார்த்தை பேசுங்கள். சினிமா மட்டுமே அடுத்த தளம் தரும். எனக்கு பணம் தந்தது சினிமா., புகழ் தந்தது சினிமா, எல்லாம் தந்தது சினிமா. ” என்றார்.
நடிகர் வல்லவன், ” பேஸ்புக்கை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தினால் நல்லது. மழை வெள்ளத்தின் போது எல்லாரையும் பேஸ்புக்தான் இணைத்து உதவிட பயன்பட்டது.
இயக்குநர் ராகேஷ் பேசிய போது ” நான் முதலில் இந்த மாஸ்ரவியை ‘தகடு தகடு’ படத்தில் நடிக்க வைத்தேன். பதற்றமாக இருந்தார் ஏன்யா பதற்றம், எனக்கும் இதுதான் முதல்படம் நான் பதற்றமில்லாமல் இயக்குநர் போல நடிக்கவில்லையா ?அதுபோல். நீயும்நடி. பதற்றத்தைக் காட்டக் கூடாது என்றேன். மறுபடி ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? ‘ படத்தில் நடிக்க வைத்தபோது பதற்றமில்லாமல் நடித்தார். நல்ல முன்னேற்றம் தெரிந்தது எப்படி என்றேன். ஆறு குறும்படங்களில் நடித்து விட்டதாகக் கூறினார். திருட்டுவிசிடி பற்றிபேசுகிறார்கள். அதை ஒழிக்கவே முடியாது. திருடனாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. எப்போதும் திருடனைப் பொதுமக்கள்தான் பிடித்து தர்ம அடி கொடுப்பார்கள்.திருட்டுவிசிடி விஷயத்தில் பொதுமக்களே திருட்டு வேலை செய்கிறார்கள்.
இங்கு வந்துள்ள இமான் அண்ணாச்சியை என்படத்தில் நடிக்க கேட்ட போது அதிக சம்பளம் கேட்டதால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ” என்றார் .
உடனே இமான் அண்ணாச்சி எழுந்து” எனக்கு இடையில் உள்ளவர்கள் செய்தவேலை அது .நான் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்க மட்டுமே அதிக சம்பளம் கேட்பதுண்டு. அதே போல இதற்கும் கேட்டிருக்கிறார்கள். நல்லகதை இருந்தால் எனக்குச் சம்பளம் இரண்டாம் பட்சம்தான். இதற்குமுன்பு ஒரு மேனேஜர் இருந்தார்.அவரை இப்போது மாற்றிவிட்டேன். என்னை இப்போது நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் . என் சம்பளம் சம்பந்தமாக வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் துருவா, ராம்ஸ், இயக்குநர்கள் ராகேஷ், ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர்கள் பி.ஜி.முத்தையா, கோபி ஜெகதீஸ்வரன், ‘ஒரு லைக் ஒரு கமண்ட்’ படத்தின் இயக்குநர் நடிகர் மாஸ்ரவி ஆகியோரும் பேசினார்கள்.