இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் வசந்தன்’வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். .
அவருடன் ஓர் அவசர நேர்காணல்.
வானவில் வாழ்க்கை எப்படிப்பட்ட படம்?
இது முழுக்க முழுக்க இளைஞர்கள் பற்றியபடம். இளைஞர்களுக்கான படம். கல்லூரி வாழ்க்கையின் பின்னணியில் உருவாகியுள்ள இசைசார்ந்த மியூகிக்கல் மூவி.
இயக்குநராக காரணம். தூண்டுதல் எது?
நான் கல்லூரியில் படித்த போதே இந்த ஆசை உண்டு. மியூசிக்கலாக இசையை மையப்படுத்தி ஒரு படம் செய்ய வேண்டும் என்று கனவுண்டு. இது திடீரென தோன்றியதல்ல சிலபடங்களுக்கு பின் வந்த வாய்ப்புகள் ஒரே மாதிரியாக இருந்தன. மேற்கத்திய இசைக்கு முக்கியத்துவம் தரும்படி வாய்ப்பு வரவில்லை. எனவே நாமே இப்படி ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
படத்தில் பதினேழு பாடல்களா?
பதினேழு பாடல்களா என்று இதையே எல்லாரும் கேட்கிறார்கள். அப்படி என்றால் வசனமே இருக்காதா என்கிறார்கள். பாடல்கள் வந்தால் எழுந்து ஓடிவிடுகிற காலம் இது என்கிறார்கள். . ஆனாலும் சொல்கிற படி சொன்னால், ஏற்றுக் கொள்கிறபடிகாட்சிகள் வைத்தால் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
பதினேழு பாடல்கள் என்பது அதிகமில்லையா?
பதினேழு பாடல்கள் என்றாலும்போரடிக்காது.அவை ஒன்றரை நிமிடப்பாடல்,2 நிமிடப்பாடல்,2 1/2 நிமிடப்பாடல், 3 நிமிடப்பாடல் என்று வரும்.படம் இரண்டரை மணிநேரம்தான்.
ஓர் இசையமைப்பாளராக சுதந்திரமாக இருந்த உங்களுக்கு மன அழுத்தம் தரும் இயக்குநர் வேலை அனுபவம் எப்படி இருந்தது?
இயக்குநர் வேலை தேவையா என்று கூட கேட்கிறார்கள்.இது எனக்கு சுமையாகத் தெரியவில்லை.ஏனென்றால் எனக்கு அமைந்த குழுவினர் அப்படி. எந்த சிரமமும் தராமல் ஜாலியாக கல்லூரியில் இருப்பதைப் போல உணர வைத்தார்கள். நிர்வாகப் பொறுப்பைப் பார்த்துக் கொண்ட ரஷ்னா விஜய் ஆதிராஜ் எந்த கவலையும் வராமல் பார்த்துக் கொண்டார்.
இது பாடகர்கள் பற்றிய கதையா?
இது கல்லூரி மாணவர்கள், இசை ,மேடைகச்சேரி, போட்டி பற்றிய கதை. நடித்தவர்கள் எல்லாருமே இசைக் கலைஞர்கள் அல்லது பாடகர்கள்
யாரிடமாவது உதவி இயக்குநராக இருந்தீர்களா?
யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்த்ததில்லை படப்பிடிப்பு இடங்களுக்குக் கூட போய் வேடிக்கை பார்த்தது கூடக் கிடையாது. ஆனால் இது இப்படிப்பட்ட கதை, இதற்கான காட்சிகள் இவை என்கிற தெளிவு எனக்கு இருந்தது. அது போதும் என்று நினைத்தேன்.
ஒரு படத்திற்கு இசையமைக்கும் போது படம் முழுக்க புரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு நானும் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொள்வேன் எதையும் தெரிந்து கொள்வதில் பயப்படமாட்டேன் வெட்கப் படமாட்டேன். சிறுவயதாக இருந்தாலும் கேட்டு தெரிந்து கொள்வேன்.
இப்படி எனக்கு அமைந்த குழுவினரிடமிருந்தும் கற்றுக் கொண்டேன்.
புதியவர்களை நடிக்க வைத்த அனுபவம் சவாலா?
ஒரு படைப்பாளிக்கு எல்லாமே சவால்தான் இதில் நடித்த பலருக்கும் திரைக்கதை படித்தல், புரிந்து கொள்ளுல், நடித்தல் பற்றி எல்லாம் பயிற்சி அளித்து நடிக்க வைத்தோம்.
இதில் என்ன புதுமை?
ஹாலிவுட் படங்களை எடுத்தால் ‘கிரீஸ்’ போன்றவை மியூசிக்கல் பிலிம்ஸ். அதில் நடித்தவர்கள் எல்லாருமே பாடத் தெரிந்தவர்கள். படமும் வெற்றி. அதே போல நாமும் எடுத்தால் என்ன என்று தோன்றியது.நடிகர்களே பாடி நடிக்கும் வகையில் இது இந்தியாவில் முயற்சி என்று நண்பர்கள் சொன்னார்கள்
இயக்கம் தொடருமா?
தொடருமா தொடராதா என்பது.இதற்குள்ள வரவேற்பைப் பொறுத்து இருக்கிறது
-நமது நிருபர்