ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் ‘தொப்பி’ . இயக்குநர் யுரேகா இயக்கத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகின. டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் விஜய் சேதுபதி, விமல், பழம்பெரும் இயக்குநர்கள் GN. ரங்கராஜன், SP. முத்துராமன், பாக்யராஜ் மற்றும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுப் பேசினர்.
இவ்விழா ஆரம்பத்தில் படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. மைனா, கும்கி, மான் கராத்தே , காக்கி சட்டை போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் பிரசாத் சுந்தர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மூன்று பாடல்களிலும் வெவ்வேறு பரிமாணத்தில் தன் நடிப்பு, நடனம் என அனைவரையும் கவர்ந்தார் முரளி. பின்னர் மேடையில் பேசிய அனைவரும் முரளி ராமின் முயற்சியைப் பாராட்டினர்.
இதைப்பற்றி கதாநாயகன் முரளி ராம் கூறியபோது “ இக்கதையில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இந்த கதையை என்னிடம் இயக்குநர் யுரேகா கூறும்பொழுது இவ்வளவு அழுத்தமான கதா பாத்திரத்தை என்னால் நடிக்க முடியுமா என்று சந்தேகத்தில் இருந்தேன். இயக்குநர் யுரேகா ‘நான் பார்த்து கொள்கிறேன், நீதான் இப்படத்தின் கதாநாயகன்’ என்று, ஒரு குருபோல் என்னை வழிநடத்தி எனக்கு ஊக்கம் அளித்தார். இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் யுரேகா மற்றும் தயாரிப்பாளர்கள் பரமராஜ், பாலு ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார் அறிமுக கதாநாயகன் முரளி ராம்.