‘இருமுகன்’ படத்தில் தான் நடித்த இரண்டு பாத்திரங்களில் எது பிடித்த முகம்? என்று விக்ரம் ஒரு பட விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
இரு வேடங்களில் விக்ரம் நடித்து தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘இருமுகன் ‘ படம் மாபெரும் வெற்றி பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் இன்று ஊடகங்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
‘இருமுகன் ‘ வெற்றி சந்திப்பில் கலந்து கொண்டு விக்ரம் பேசும் போது,
” இன்று இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி.
ஆதரவு தந்த ஊடகங்களுக்கு நன்றி. படத்தைப் பொறுத்தவரை நான் மூன்று பேருக்கு முக்கியமாக நன்றி கூறவேண்டும்.
ஒரு நடிகனுக்கு அவன் நடித்த கடைசிப்படம் முக்கியம். அதன் கதாபாத்திரம்தான் அவனுக்கு முகவரியாக இருக்கும். ‘இருமுகன் ‘ படத்தில் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை எனக்காக உருவாக்கி நடிக்க வைத்த இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு நன்றி.
அவரது சிறப்பான தனிக்குணம் எல்லாரையும் அவர்களின் போக்கில் செயல்பட விட்டு அவர்களிடமுள்ள சிறப்பான விஷயத்தை வெளிப்படுத்த வைப்பதுதான். அப்படி அவர் எல்லாருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார். நித்யா மேனன் கூட இந்த வசனத்தை இப்படி பேசலாமா என்று எனக்கு போனில் கேட்பார். அந்த அளவுக்கு எல்லாரையும் தங்கள் சொந்தப் படம் போல நினைக்க வைத்தார். நான் இதில் நடித்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றின் சாயல் இன்னொன்றின் மீது படாதபடி ,ஒன்றின் நிழல் இன்னொன்றின் மீது விழாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. அவர் கொடுத்த சுதந்திரத்தில் தினசரி படப்பிடிப்புக்கு முழு பலத்துடன் போவேன்.
நடித்த இரண்டு பாத்திரங்களில் இரண்டில் எது முக்கியம்? எதை நடிக்கும் போது சிரமப்பட்டீர்கள்? என்று கேட்டார்கள் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.எனக்கு இரண்டுமே முக்கியம்தான்.
ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி . நன்றாகக் கதை சொன்னார்.அவர் கதை சொல்லும் போதே எங்கே ரசிகர்கள் சிரிப்பார்கள் எங்கே ரசிகர்கள் கை தட்டுவார்கள் என்பதை எல்லாம் திட்டமிட்டு செய்வார்.
இந்தப் படக்குழுவில் இருக்கும் போது மணிரத்னம். ஷங்கர் போன்ற பெரிய படக்குழுவில் இருப்பது போல உணர்ந்தேன். பெரிய பெரிய ஆட்களாகவே எல்லாருமே இருந்தார்கள்.
அப்படிப்பட்ட படக்குழுவுக்கு நன்றி. சுரேஷ் செல்வராஜ் போட்ட செட் பிரமாண்டமாக இருந்தது.மிரண்டு விட்டேன்.
எளிமையான பொருட்களைக் கொண்டே செய்து அசத்தியிருந்தார்.
பொதுவாக ,படத்தில் நடிப்பவர்கள் எவ்வளவோ சிரமப்பட்டு நடித்திருப்பார்கள்.ஆனால் எடிட்டிங்கில் குதறி விடுவார்கள். இதில் நான் நடித்த எல்லாக் காட்சிகளும் இருந்தன. விறுவிறுப்பாகவும் எடிட்டிங் செய்திருந்தார் புவன் சீனிவாஸ்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ‘பீமா’ வுக்குப் பிறகு நண்பராகி விட்டார். பிரச்சினையான காலகட்டத்தில் உதவியாக ஊக்கமாக இருப்பார். எனக்காக என் சௌகரியத்துக்காக லைட்டிங் எல்லாமே மாற்றினார்.
தயாரிப்பாளர் சிபு வுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. பத்து மாதமாக இந்தப்படம் நடக்குமா நடக்காதா.. நடக்கவே நடக்காது என்கிற கவலை இருந்தது. ஆனால் இரண்டே நாளில் முடிவு செய்து எல்லாவற்றையும் மாற்றினார்.இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை.எல்லாமே கனவு போல இருக்கிறது.
இந்தப் படத்துக்காக ஹரிஸ் ஜெயராஜ் பறந்து பறந்து வேலை பார்த்தார். ஒரு டீஸருக்கு, ட்ரெய்லருக்கு இவ்வளவு உழைப்பா? என வியந்தேன். ‘சாமுராய்’ முதல் நாங்கள் இணைந்து பயணிக்கிறோம்.அந்தப் படத்துக்குப் போட்ட ‘மூங்கில் காடுகளே’ பாட்டுதான் இன்றும் என் காலர் ட்யூன். பிறகு ‘அருள்’ ,’பீமா’ ,’அந்நியன்’ என்று இணைந்தோம். இப்போது ‘இருமுகன்’ மறக்க முடியாதது. அவருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசும் போது,
” நல்ல தொரு வணிக ரீதியிலான படம் எடுக்க வேண்டும்.அப்படித்தான் திட்டமிட்டு எடுத்தோம் அதுவே என் நோக்கம். விக்ரம் சார் ‘அரிமாநம்பி’ பார்த்து பாராட்டினார் அப்போது ஏதாவது கதை லைன் இருக்கிறதா என்றார் .அப்போது நான் ஏதோ உளறினேன். அவரை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். அவர்தான் இதற்கு இன்ஸ்பிரேஷன். சிபு டிசம்பரில் வந்தார் ஜனவரியில் படம் தொடங்கினோம்.அவர்தான் படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கினார்.செப்டம்பரில் வெளியிட்டு விட்டோம். கால அளவு குறைவு. பறக்க பறக்க ஓடினோம். .எல்லாருக்கும் பெயர் சொல்ல வாய்ப்பு இருந்தது. கதை இல்லாத காட்சிகளில் கூட இசைக்கு கைதட்டல் கிடைத்தது. இப்படி ரசிகர்களுக்குப் பிடித்த படமாகி வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. ” என்றார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது,
” முதலில் இயக்குநர் பெயரைச் சொன்னதும் பாதி சம்மதம். பிறகு நடிப்பவர் விக்ரம் என்றதும்,முழு சம்மதம் சொன்னேன். இதில் அவரைத் தவிர யாரும் செய்ய முடியாது. கதை சொல்லும் போதே படப்பிடிப்பு இல்லாமலேயே லவ் பாத்திரத்தில் விக்ரமை பொருத்தி மனக்கண்ணில் படம் பார்த்தேன். படத்தில் எல்லாருமே சிக்சர் அடிப்பார்கள் என்று தெரிந்தது.
படம் ஆரம்பிக்கும் போது சிபு சிரமப்பட்டார். நான் ஊக்கம் கொடுத்தேன். பைபிளில் சம்பூர்ணம் என்றொருவார்த்தை வரும். அப்படி எல்லாமே முழுமையாக நல்லபடியாக முடிந்தது. படம் பேசி இரண்டாவது நாளே ஜெர்மனி போனேன். புறப்பட்ட சமயத்தில் சிபு டீஸர் வேண்டும் என்றார். அதைத் தந்தால் அது படத்துக்கு உதவும் என்றார். பாட்டே ஆரம்பிக்க வில்லை அதற்குள் டீஸரா? பயந்தே விட்டேன்.ஆனாலும் என்ன செய்வது? ஒரு கீபோர்டும் லேப் டாப்பும் எடுத்துக்கொண்டு போனேன்.விமானப் பயணம் பத்தரை மணிநேரம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் தூங்கவேயில்லை. ஜெர்மனி போவதற்குள் டீஸர் தயார்.விமானத்தில் என்னை ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் வினோதமாகப் பார்த்தார்கள். சந்தேகமாகப் பார்த்தார்கள். கடைசியில் அவர்களிடமே டீஸரைப் போட்டுக் காட்டினேன்.
எனக்கு ‘அந்நியன்’ ,’கஜினி’ க்குப் பிறகு சவாலான படம் ‘இருமுகன்’. விக்ரமின் இரண்டு பாத்திரங்களுக்கும் தனித்தனியாக இசையமைத்தேன். ”என்றார்.
முன்னதாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் சிபு தமீன்,
” விக்ரம் சார் தயாரிப்பாளர்களின் நடிகர். ஆனந்த் சங்கர் தயாரிப்பாளர்களின் இயக்குநர். சொன்ன பட்ஜெட்டில் சொன்னதேதியில் முடித்தார். நயன்தாரா அக்கறையுடன் நடித்து ஒத்துழைத்தார். ” என்றார்.
விநியோகஸ்தர் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் பேசும் போது,
” நாங்கள் தமிழ்,இந்தி என18 படங்கள் இதுவரை விநியோகம் செய்து இருக்கிறோம். ‘கபாலி’ ,’தெறி’ க்குப் பிறகு நல்ல தொடக்கமும் வசூலும் பெற்றுள்ள படம் ‘இரு முகன்’ தான்.
தமிழ்நாட்டில் 450 தியேட்டர்களில் திரையிட்டோம். சென்னையில் மட்டும் 150 திரைகள். முதல் வாரத்திற்குள் 4.5 கோடி வசூலானது. தமிழ்நாடு மட்டும் 29. 25 கோடிவசூலானது. 25 வரைதான் எதிர்பார்த்தோம். அக்டோபர் 6 க்குள் 50 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ” என்றார்.
நிகழ்ச்சியில் கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜ், எடிட்டர் புவன் சீனிவாஸ் ஆகியோரும் பேசினார்கள்.