குறவர் இனத்து நாயகன் ஜூனியர் எம்.ஜி.ஆரிடம் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா அறிமுகமாகிறார். நட்புடன் பழகுகிறார்.அப்புறம் என்ன? அதை ஜூனியர் எம்ஜிஆர் காதலாக எடுத்துக் கொள்கிறார். ஆனால் ஐஸ்வர்யா தத்தாவோ இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு துறவி ஆவதென முடிவு செய்கிறார். வாழ்வின் லட்சியமே துறவியாவதுதான் என நாயகி அடம்பிடிக்கிறார்,ஜெயின் மடத்திலும் சேர்ந்துவிடுகிறார்.
தான் காதலியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதை விரும்பாத ஜூனியர் எம்.ஜி.ஆர் அவரை சமண மடத்திலிருந்து கடத்த திட்டமிடுகிறார்.அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? அவரது காதல் கை கூடியதா என்பதுதான் ‘இரும்பன்’ படத்தின் மீதிக் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் முதல் படத்திலேயே பல்வேறு ரசங்கள் காட்ட வாய்ப்பு கிடைத்து அதை முடிந்தவரை நடிப்பில் காட்ட முயற்சி செய்துள்ளார்.
காட்சிகளில், இது அவரது முதற்படம் என்பதை முகபாவனைகளாலும் உடற்மொழியாலும் நிரூபித்தவண்ணமே உள்ளார். முக பாவங்களில் இன்னும் அவர் தேற வேண்டும். தனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டால் எம்.ஜி.ஆரின் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்வதை விட குறைந்த ஆடைகளில் குறுக்கு வழியில் கவர முயன்றுள்ளார்.
யோகி பாபு வரும் காட்சிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. செண்ட்ராயன் தன்னால் முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஷாஜி சவுத்ரி, போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராம், நாயகனின் தந்தை யோகி தேவராஜ், மணிமாறன், அஸ்வினி எனத் துணைக் பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கூட சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
கடல்,படகு, சுற்றுலா, தீவு என்று வரும் காட்சிகள் நல்லதொரு பிக்னிக் அனுபவத்தை நமக்குத் தருகின்றன.லெனின் பாலாஜியின் ஒளிப்பதிவில் காட்சிகளை அழகாகப் படமாக்கியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் வணிக நோக்கில் இனிமை, துள்ளல் ரகம். ”நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி…” பாடலின் ரீமிக்ஸ் திரையரங்கில் ரீங்காரமிடும்.
எழுதி இயக்கியிருக்கும் கீரா, முழுக்க முழுக்க கமர்ஷியலான படமாக கொடுக்க முடிவு செய்தவர் ,கையில் கிடைத்த நடிகர்களை வைத்துக் கொண்டு தனது பாணியில் நல்லதொரு கமர்ஷியல் படத்தை கொடுக்க முயன்றுள்ளர்.