தமிழ்த் திரைப்படவுலகில் அத்தி பூத்தாற் போல் நம்பிக்கை தரும் இயக்குநர்கள் அவ்வப்போது தென்படுவார்கள்.அப்படி ஒருவர்தான் மனோ வெ. கண்ணதாசன் .அவர் இயக்கியிருக்கும் படம்தான் இறுதி பக்கம்.
சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் தயாரிப்பில் ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் படம் ‘இறுதி பக்கம்’.
ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது.
அம்ருதா ஸ்ரீநிவாசன் தனது வீட்டில் தனியாக இருக்கும் போது, அங்கு வரும் மர்ம நபர் ஒருவர், அவரைக் கொலை செய்து விடுகிறார்.
இந்த வழக்கு அந்த ஏரியா இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலசந்திரனுக்கு வருகிறது. வழக்கை எடுத்து விசாரிக்கிறார். வழக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.
ஒருவழியாக கொலை செய்த நபரைக் கைது செய்கின்றனர் போலீஸார். வழக்கு முடிந்துவிட்டது என்று பார்த்தால், கொலை செய்ய சொன்னது வேறு ஒரு நபர் என்று அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைக்கிறது இந்த வழக்கு.
இறுதியாக யார் இந்த கொலையைச் செய்ய சொன்னது என்பதே படத்தின் க்ளைமாக்ஸாக இருக்கிறது.
கதையில் , இயல் என்ற எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்த அம்ருதா நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ராஜேஷ், கதைக்கேற்றபடி கனக்கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் .
காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம் காதலை வெளிப்படுத்தும் காட்சி , காதலியைக் கைபிடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, காதலியை விட்டு விலகும் தருணம் என அனைத்திலும் மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
நல்லதொரு கதை நகர்வு, அருமையான திரைக்கதை, சிறந்த காட்சியமைப்பு என அனைத்தையும் இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் கவனமாகச்செய்திருக்கிறார்.
எடுத்துக் கொண்ட மையக்கருவை மிக தெளிவாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் இயக்குநர். க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி யாரும் எதிர்பார்க்காத ஒன்று,
நாயகி கல்லூரி படிக்கும் போது ஒரு வகையான ஒளிப்பதிவையும், காதலிக்கும் போது ஒரு வகையான ஒளிப்பதிவையும் கொடுத்து காலத்தை ஒளிப்பதிவிலேயே காட்டிவிட்டு செல்கிறார் பிரவின்பாலு.
ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
ஒரு சிறிய நூல் இழை போன்ற கதையை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் திரைமொழியை அவர் நன்கு கற்று இருக்கிறார் என்பதை உணர வைக்கிறது. இயக்குநருக்கு வாழ்த்துக்கள்!
இறுதிப்பக்கம் அவரது திரையுலக வாழ்க்கையின் நம்பிக்கை தரும் முதல் பக்கமாக இருக்கும்.