‘இறுதி முயற்​சி’ திரைப்பட விமர்சனம்

ரஞ்சித், மெகாலி மீனாட்சி, விட்டல் ராவ், மௌனிகா, நீலேஷ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பார்த்திபனின் மாணவர் வெங்கட் ஜனா எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – சூர்யகாந்தி, இசை – சுனில் லாசர்,படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ், தயாரிப்பு நிர்வாகி – கே பி வேலு, கலை இயக்குநர் – பாபு எம் பிரபாகரன்.தயாரிப்பு- வரம் சினிமாஸ் சார்பில் வெங்கடேசன் -பழனிச்சாமி தயாரித்திருக்கிறார்கள்.

ஒரு கொலையில் படம் தொடங்குகிறது.தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் போலீஸ்காரரை முண்டாசு கட்டி முகத்தை மறைத்துக் கொண்ட ஒரு மர்ம நபர் கொலை செய்துவிட்டுத் தப்பித்து விடுகிறான்.இப்படி இரவில் தனியே உள்ளவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். சைக்கோ கொலையாளியாக அறியப்படும் அவனைப் போலீஸ் தேடுகிறது மக்கள் பீதிக்குள்ளாகிறார்கள்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடன் தொல்லையால் கந்து வட்டிக்காரர்களின் கொடுமையால் ரவி என்கிற ரவிச்சந்திரன் ( ரஞ்சித்) பாதிக்கப்படுகிறார்.
தனது மகனின் மருத்துவ செலவிற்கும் கந்து வட்டிக்காரர் ராஜப்பாவிடம்  ரூபாய் 80 லட்சம் வட்டிக்கு கடன் வாங்குகிறார்.  வியாபரத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. அசலுக்கு மேல் வட்டி வளர்ந்து பல மடங்காகி தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டு மிரட்டுகிறது.
கந்து வட்டி ராஜப்பாவின் தம்பி காத்தவராயன் வட்டி கட்ட முடியாதவர்களின் மனைவிகளை தூக்கிக் கொண்டு வந்து கபளீகரம் செய்யும் கொடூரமானவன்.ஏராளமான வட்டியை வாங்கிக்கொண்டு மேலும் மேலும் ஒரு கோடி தர வேண்டுமென்று மிரட்டுகிறார்கள்.வீட்டுக்குள் நுழைந்த ஆபாசமாகப் பேசி மிரட்டிய ராஜப்பா, ஒரு வாரத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்கா விட்டால் மனைவி மகளை தூக்கி விடுவேன் என்கிறான்.ரவிச்சந்திரனைக் கண்காணிக்க இரண்டு ஆட்களை காவலுக்கு போடுகிறான்.நண்பர்களிடம் உதவி  கிடைக்கவில்லை ஒரு கட்டத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறான் ரவி.இதற்கிடையே போலீஸ் தாக்குதலில் குண்டடி பட்டு தப்பிய முண்டாசு கட்டிய சைக்கோ கொலையாளி யாருக்கும் தெரியாமலே ரவி வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்கிறான். குடும்பத்தோடு தற்கொலை செய்யும் ரவியின் முடிவு என்னானது ?சைக்கோ கொலையாளி அடுத்து என்ன செய்கிறான்? அவனுக்கும் ரவிக்கும் தொடர்பு உள்ளதா? என்பதைப் பற்றிய மீதிக்கதை தான் ‘இறுதி முயற்சி’ திரைப்படத்தின் கதை சொல்லும் பாதை.

ரவிச்சந்திரனாக ரஞ்சித்,நடித்துள்ளார் கடன் தொல்லையின் மன அழுத்தத்தை முகத்தில் காண்பித்துக் கொண்டு எப்போதும் இறுக்கமாகவே இருக்கிறார்.தனது மனக்குமுறல் வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டு பயம், பதற்றம், கவலை ,இயலாமை , கண்ணீர் கலந்து அந்த நடிப்பைச் சரியாக வெளிப்படுத்தி உள்ளார்.

மெஹாலி மீனாட்சி,கருத்தொருமித்த கணவனோடு அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அந்த குடும்ப தலைவி பாத்திரத்தில் நன்றாகவே பொருந்தி இருக்கிறார். அவரது தோற்றமும் முகபாவனைகளும் பாத்திரத்திற்கு நன்றாகவே கை கொடுத்துள்ளன.

கந்துவட்டிக் கும்பல் தலைவன் ராஜப்பாவாக விட்டல் ராவ், அவரது தம்பி காத்தவராயனாக புதுப்பேட்டை சுரேஷ், குற்றவியல் ஆய்வாளர் கதிரவனாக கதிரவன், ரஞ்சித்தின் மகள் கௌரியாக மௌனிகா, மகன் குமரனாக நீலேஷ் என அனைவரும் ஏற்ற பாத்திரத்திற்கு உரிய நடிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தி, இசையமைப்பாளர் சுனில் லாசர் ஆகியோர் திரைக்கதையோடு பயணித்து பங்காற்றி உள்ளனர்.

தனது தேவைக்கு நெருக்கடிக்கும் கடன் வாங்குபவர்களை கந்துவட்டிக்கும்பல் எப்படிச் சுரண்டுகிறது என்பதைக் காட்டியுள்ளார்கள்.இது இன்றும் தொடர்ந்து வரும் ஒரு சமூக அவலம்தான்.கடன் வாங்கும் முன் அனைவரும் தங்களது திருப்பி செலுத்தவும் திறனை யோசிக்க வேண்டும்.அனைவரும் சந்திக்கும் இந்தக் கடன் வாங்கும் பிரச்சினையை எடுத்துக் கொண்டு ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கட் ஜனா.

முகமூடி கொலையளிப் பாத்திரத்தின் சஸ்பென்சை நீடிக்க விட்டுள்ளது சுவாரஸ்யம்.அந்த ரவி பாத்திரம் தனது மீட்புக்கான வழியை சாலித்தனமாகத் தேடி கண்டுபிடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மனைவி ஏற்பது ஓர் உறுத்தல்.

மொத்தத்தில் அன்றாட மக்கள் சந்திக்கும் இந்தக் கொடுமையை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சிறிது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் கூட நல்லது.அதுவே படத்திற்கு ஒரு வெற்றியாகும்.