சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம் என்றாலும், அதனுடைய முதல் நோக்கம் மக்களை மகிழ்விப்பது தான். அதனை சரியாக புரிந்துக்கொண்ட
படைப்பாளிகள், மக்களை மகிழ்விக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான கலகலப்பான காமெடி, திகில் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது ‘கஜானா’.
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு ,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார்.
ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.
இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும், அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் யானை, புலி, கரடி, குரங்கு மற்றும் பாம்பு போன்ற விலங்குகளை குழந்தைகள் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக விலங்குகளை வைத்து காட்சிகளை படமாக்கிய படக்குழு, இதற்காக விலங்கு நல அமைப்பின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றியுள்ளனர்.
கலகலப்பான காமெடி படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் பாராட்டு பெறும் விதத்திலும் இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் ‘கஜானா’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.