காவிரி உரிமையை மீட்க வலியுறுத்திய விக்னேஷ் மரணம் மிகவும் வேதனையாகவும் உயிர்வலியாகவும் உள்ளது. தமிழன் தன் இனத்திற்காக உயிர்க்கொடை செய்வது இதுவே முடிவாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இழந்த உயிர்கள் போதும் தம்பி !
ஏர் பிடிப்பவன் வாழ
உயிர் துடித்தவனே வஇஊஊ
காவேரியில் இருந்து நீர் வராது
எமக்கு கண்ணீரே வருகிறது!
பிணம் தின்னும் கழுகுகளின்
அரசியல் சாக்கடையில்
இனியும் இனியும்
நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை !
இது தெரிந்தும் உயர்
உணர்வுள்ள பிள்ளை நீ
தீயாய் எழுந்தவன்
தீயில் குளிக்கலாமா நீ!
வீரமகன் விக்னேசு
சொல்வதற்கும் கேட்பதற்கும்
உன்னை இழந்து தவிப்பவர்க்கு
உயிர்நாடி எரிகிறதே!
எங்கள் தியாக தீபம்
திலீபன் அண்ணா உண்ணாவிரதத்தை
ஆரம்பித்த நாளில்
உன்னை ஏன் கொடுத்தாய்?
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்
அவர் உச்சரித்த போது கூட
நீ பிறந்திருக்கமாட்டாய்!
உயிர்க்கொடை கொடுத்ததும்
உடல் பொருள் ஆவிகள்
கொடுத்ததும் போதுமடா தம்பி !
ஏன் விக்னேசு தீ மூட்டினாய் ?
நெஞ்சடைக்கும் துயரத்தில்
நித்திரை வருவதில்லை
முத்துக்குமார் செங்கொடி ரவூப்
வரிசையில் நீயே இறுதியானவன்!
உன் மரணக்குரலோடு
இனி எல்லாம் தொலைந்து போகட்டும்
கட்சி,ஜாதி மதபேதம் தற்கொடை
எல்லாம் அழிந்து போகட்டும்!
தமிழ் ஒன்றாகி தமிழர் ஒன்றாகி
ஒற்றைக் கோட்டிலே
நெஞ்சு நிமிர்த்தி
எழுக தமிழா… எழுக!
வசீகரன்
ஒசுலோ, நோர்வே
16.09.2016