ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் 100’ அரங்கேற்று விழா!

திருக்குறளைப் பாமரனிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கைக் கதைகளை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்கிற நூலை எழுதி இருக்கிறார்.இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் பரிதி ,பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியிருக்கிறார்.அந்த வகையில் இது ஒரு புதிய முயற்சி எனலாம்.

பிரபல நாளிதழின் (இந்து தமிழ் திசை)இணைய இதழில் தொடராக வெளிவந்த இது, இரண்டு பாகங்களாக நூல் வடிவம் பெற்றுள்ளது.முதல் 50 கதைகள் கொண்ட நூலை தமிழக அரசு மாணவர்களுக்கான பாடப்பகுதியில் சேர்த்துள்ளது.

இந்தத் ‘திருக்குறள் 100 ‘ நூல் அரங்கேற்று விழா, அதாவது இந்த நூலில் உள்ள வாழ்க்கைக்கதைகள் அனைத்தையும் மேடையில் இடைவிடாது மூன்றரை மணி நேரம் உரையாற்றி அரங்கேற்றும் விழா’ 18 வது ஈரோடு புத்தகத் காட்சி’யின் பத்தாவது நாளான ஆகஸ்ட் 14-ல் நடைபெற்றது.

பொதுவாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு வகையாக இருக்கும். உரையாற்றுதல் என்பது இன்னொரு வகையாக இருக்கும் .ஆனால் ஒரு முழு நூலையும் உரையாக ஆற்றி மேடையேற்றுவது என்கிற விதத்தில் இது ஒரு வித்தியாசமான விழாவாக இருந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த அரங்கேற்று விழாவின்போது கூடியிருந்த கூட்டத்தினர் சிறிதும் கவனம் சிதறாமல் சலனமற்று, இரவு நெடுநேரம் சென்றும் இடையில் எழாமல் முழுக் கவனத்துடன் அவரது பேச்சைக் கேட்ட விதம் வியூப்பூட்டியது.

இந்த விழாவின் தொடக்கமாக இப்புத்தகத் திருவிழாவை முன்னின்று நடத்தும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அனைவரையும் வரவேற்று அறிமுக உரையாற்றினார். அப்போது சிவகுமாரின் பன்முக ஆற்றலை வியந்து பாராட்டிய அவர், இந்த விழாவைச் சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடு செய்து முதல்வரையே அழைத்து நடத்தி இருக்கலாம். ஆனால் இதைத் தனது சொந்த மண்ணில் நடத்த வேண்டும் என்று விரும்பி இதைச் செய்கிறார் என்றவர்,
ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு சிவகுமார் தந்து வரும் ஆதரவையும் பங்களிப்பையும் பற்றிக் குறிப்பிட்டு நன்றி கூறினார்.

வாழ்த்துரை வழங்க வந்த சக்தி மசாலா குழுமத்தின் உரிமையாளர் பி.சி. துரைசாமி அவர்கள், திருக்குறள் தன் வாழ்வில் பெற்றுள்ள இடத்தையும் தன் வாழ்க்கை மாறிய விதத்தையும் கூறி, தனது நிறுவனம் பல சாதனைகளையும் பல வெற்றிகளையும் செய்து வருவதற்குத் திருக்குறள் தான் காரணம் என்று எடுத்துரைத்தார்.தனது வாழ்வின் வழிகாட்டு நூலான திருக்குறள் சார்ந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக அவர் கூறினார்.

சக்தி மசாலா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சாந்தி அவர்களும் அதையே வழிமொழிந்தவர்,தங்களது மண்ணின் மைந்தராக உள்ள சிவகுமார் தங்கள் பகுதியில் வந்து கலந்து கொண்டு உரையாற்றுவதற்காகத் தாங்கள் பெருமைப்படுவதாகக் கூறினார்.

திருக்குறள் அரங்கேற்று விழாவில் நடிகர் சிவகுமார் அவர்களின் உரை சுமார் 7 மணிக்குத் தொடங்கியது.
முதலில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் மாமனார் வழக்கறிஞர் முத்து நாராயணன் நாத்திகராக இருந்தவர், ஆத்திகராக மாறிய அந்தத் தருணத்தை விளக்கி அது சார்ந்த குறளான ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அதற்குரிய குறளைக் கூறி இரவு சுமார் 10.30 மணிக்கு நிறைவு செய்தார்.

கூறப்பட்ட கதைகளில் சாமானியர்கள் முதல் சரித்திர புருஷர்கள் வரை உழைப்பாளி முதல் போராளிகள் வரை இடம்பெற்றார்கள். வெறும் வரலாற்றையும் சொல்லிக் கொண்டிருக்காமல் வரலாற்று நாயகர்களை மட்டும் குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல் சராசரி மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்துக்காட்டி ஒரு கலவையான உணர்வுகளைத் தூண்டும் அனுபவமாக இந்த நிகழ்ச்சியை மாற்றினார்.

பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமாக மூன்றரை மணி நேரத்திற்கு மேல் அவர் உரையாற்றி நிறைவு செய்தார்.உரை நிகழ்ந்த போது வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கவனத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.

சிலவற்றைக் கதை போலவும், சில கவிதை போலவும், பாடல் போலவும் ,உணர்ச்சிமிக்க வசனங்களைப் பேசுவது போலவும், சிலவற்றுக்கு ஏற்ற முகபாவனைகளைக் காட்டி நடித்தும் காட்டி இயல் ,இசை, நாடகம் என மூன்று தமிழையும் வெளிப்படுத்தினார்.


அவர் ஒவ்வொரு குறளுக்கான கதை சொல்லும் போதும் திரையில் அந்தக் குறள் காட்சி வழியாக வரி வடிவத்தில் நேர்த்தியாகக் காட்டப்பட்டது . அந்த வகையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஒத்திசைவாக 80 வயது தாண்டியும் தன்னால் இயங்க முடியும் என்பதை நிரூபித்தார்.இதன் மூலம் காலத்திற்கு ஏற்ப பயணம் செய்யும் ஒரு கலைஞராக அவர் தெரிந்தார்.