சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரெமோ’ திரைப்படம் வெளியாகி வெற்றிப்படமாகி விட்டது.
வர்த்தக ரீதியாக அமோக வசூலை பெற்று வரும் ரெமோ திரைப்படத்திற்காக தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்து வந்த விநியோகஸ்தர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக , தயாரிப்பாளரும், 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆர் டி ராஜா ஒரு பிரம்மாண்ட நன்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
“ரெமோ படத்தின் வெற்றிக்கு ஒரு மூல காரணம் சிவகார்த்திகேயன்… அதே போல் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி சி சாரின் பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த
கைத்தட்டல்கள் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது…. தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தாயாக வலம் வந்து கொண்டிருப்பவர் சரண்யா… ரெமோ படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை அள்ளிக் குவித்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு பிறகு நான் விநியோகம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை… ஆனால் ரெமோ படம் எனக்கு அளித்த உற்சாகமும், புத்துணர்வும், என்னை மீண்டும் விநியோக துறையில் ஈடுப்பட செய்தது… பொதுவாகவே விநியோகஸ்தர்கள் தான் ஒரு திரைப்படத்தை வாங்க தயாரிப்பாளரை நாடி செல்வர்…. ஆனால் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா எந்தவித ஈகோவும் இன்றி எங்களை வந்து சந்தித்தது எங்களுக்கு எல்லா விநியோகஸ்தர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…ரெமோ திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண் ஆர் டி ராஜா என்பதை நான் உறுதியாகவே சொல்வேன்…” என்று கூறினார் முன்னணி விநியோகஸ்தர்களுள் ஒருவரான திருப்பூர் சுப்ரமணியம்.
“ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்… சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் குணம் கொண்ட மனிதர்களால் தான் இத்தகைய செயல்களை செய்ய முடியும்…. அப்படி நான் பார்த்த தயாரிப்பாளர்களுள் ஆர் பி சொளத்ரி சாரும், ஏ எம் ரத்னம் சாரும் போல…. அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் ஆர் டி ராஜாவை பார்க்கிறேன்….ரெமோ படத்தின் உண்மையான வெற்றிக்கு சான்றாக திகழ்பவர்கள் விநியோகஸ்தர்கள்….அவர்களை மேடையேற்றி, தன்னுடைய நன்றிகளை தெரிவித்த தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவிற்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….” என்று உற்சாகமாக கூறினார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.
“ ‘ ரெமோ’ படத்தைப்பொறுத்த வரைக்கும் படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் நம்பிக்கையா இருந்தது இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தான்.
‘ரஜினி முருகன்’ படத்தின் ரிலீஸ் அன்று காலைல 7 மணிக்கு ராஜா சாருக்கு போன் செஞ்சேன். அவரோ ‘ரிலீஸ் இன்னும் கன்பார்ம் ஆகலை’ சிவான்னார். ஒரு படத்துல நடிச்சிட்டு அந்தப் படம் ரிலீஸாகுமா, ஆகாதான்னு தெரியாமல் உக்காந்திருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா..? அதை அன்னிக்கு அனுபவிச்சேன்.
ஆனால் அந்தக் கொடுமையெல்லாம் இந்தப் படத்துல இல்லவே இல்லை. அது எதுவுமே எனக்கு இல்லாமல் எல்லாத்தையும் தன் தோள்ல தூக்கிக்கிட்டு படத்தை தாங்கிக்கிட்டாரு ராஜா ஸார். நான் கூலா 18 மணி நேரம்கூட ஷூட்டிங்ல நடிச்சிருக்கேன். அப்படியே வீட்டுக்குப் போய் பாப்பாகிட்ட விளையாடிட்டிருப்பேன். ஆனால் அந்த மனுஷனை ஒரு நாள்கூட அவரோட பேமிலியோட நான் பார்த்த்தே இல்லை. கொஞ்சம் எமோஷனலா இருக்கு.. (என்று சொல்லிவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்).
இந்தப் படம் எடுத்து முடியறதுக்குள்ள எத்தனை பிரச்சினையைத்தான் கொடுப்பீங்க..? யாரெல்லாம் பிரச்சினை கொடுக்குறாங்கன்னு உங்களுக்கே தெரியும். நான் ரொம்ப நாளா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன். நானோ அவரோ சம்பாதிக்கணும்னு நினைச்செல்லாம் படம் எடுக்க வரலை. ஆடியன்ஸ் நல்லா ரசிக்கணும். அதுக்காகத்தான் படம் எடுக்க வர்றோம். அதுக்காக எங்களை வேலை செய்ய விடுங்க. கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. வேலை செய்ய விடுங்க.. அவரையும் சரி.. என்னையும் சரி..
இன்னிக்கு வரைக்கும் அவர் ஒரு நாள்கூட முழுசா தூங்கலைங்க.. அவர் நினைச்சிருந்தால் இந்தப் படத்தில் வந்த லாபத் தொகையை எடுத்திட்டு எங்கயாவது போய் செட்டிலாயிருக்கலாம். ஏன்.. எதுக்கு.. எனக்குப் புரியலை..
என்ன ஆசைப்படுறோம்..? வேற ஒண்ணுமில்லீங்க. வேற யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு.. அதை இங்க வந்திருக்கிற நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்குக் கொடுத்திருக்கீங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து எழுதிக் கொடுத்ததுதான் இந்த மேடை.
நான் ஒண்ணுமே கேக்கலை. உதவி எதுவும் செய்ய வேணாம். உதவி செய்யவோ, ஆதரவு கொடுக்கவோ பிரஸ் இருக்காங்க. மக்கள் இருக்காங்க. படம் நல்லாயிருந்தால் இன்னும் நல்லதை கொடுக்குறோம். நல்லாயில்லைன்னு சொன்னாங்கன்னா அதைத் திருத்திக்கிட்டு நல்ல படமா கொடுக்கப் பார்க்குறோம். ஆனால் வேலை செய்றதை தடுக்காதீங்க. இதை மட்டும் எல்லார்கிட்டேயும் என்னுடைய வேண்டுகோளா வைச்சுக்குறேன்.
நானும் உங்க இடத்துலதான் இருந்துதான் இந்த மேடைக்கு வந்திருக்கேன். இந்த இடத்தை தக்க வைச்சுக்கணும். இதை வைச்சு மேல பெரிசா செய்யணும்னுல்லாம் எனக்கில்லை. கிடைத்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கணும். நிறைய பணம் கிடைக்குது எனக்கு. அந்தக் காசுக்கு நல்லா வேலை செய்யணும்னு நான் நினைக்கிறேன். அந்த வேலையை செய்ய விடுங்கன்னு நான் கேட்டுக்குறேன்.
நான் முன்னாடி சொன்னதுதான். எனக்கு பின்னாடி யாருமே இல்லை. முன்னாடி இருக்குற நீங்க மட்டும்தான் எனக்கு இருக்கீங்க. இதே மாதிரி நீங்க எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கணும்.
இங்கே வந்திருக்கும் சிலருக்கு வருத்தம் இருக்கலாம். என்னடா இவன் ஏறும் மேடையிலெல்லாம் அழுகிறானே என்று..!? தப்பான விஷயத்தைப் பண்ணிட்டு அழுதாதான் தப்புன்னு நான் நினைக்கிறேன். நான் ரொம்ப உண்மையா இருக்கேன்.
எல்லாரும் நினைக்கலாம்.. ரொம்ப ஹிட்டு வந்துக்கிட்டேயிருக்குன்னு. அதுதான் எனக்கு ரொம்ப பயத்தைக் கொடுக்குது. ஏன்னா இது எங்கிட்டிருந்தோ திருடிட்டு வர்ற மாதிரியிருக்கு. அப்படியில்லை. இது போராடி.. போராடித்தான் கிடைச்சது. ஒவ்வொரு ஹிட்டுக்கும் பதற்றமாவே இருக்க வேண்டியிருக்கு. நான் இப்படியேதான் எல்லா படங்களையும் பண்ணனும்னு நினைக்கிறேன். ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர், பிளாப்புன்னு எல்லாத்தையும் நீங்க சொல்லுங்க. திருத்திக்கிட்டு படம் செய்ய நாங்கள் தயார்.. ” என்று சொல்லி முடித்தார் சிவகார்த்திகேயன்.