உலக பசித்தவர்கள் தினம் என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியை தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பியிருக்க தேவையில்லை. மக்கள் ஒவ்வொருவரும் சமூகத்தை நோக்கி தங்கள் பங்களிப்பை அளித்து பசித்தவர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கும் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தை கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக ஆஸ்கர் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.
ரெயின்ட்ராப்ஸ் மற்றும் அனீபா பிரியாணி இணைந்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அனீபா பிரியாணி உணவகத்தில் இருந்து வாகனம் புறப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் IAS, நடிகர் அஸ்வின் குமார், அனீபா பிரியாணி உணவக நிர்வாக இயக்குனர் பாசித் ரஹ்மான் ஆகியோர் கொடியசைத்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சாலையோரங்களில் பசித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியது.
ரெயின்ட்ராப்ஸ் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது இது முதல் முறையல்ல. விருந்தாளி என்ற திட்டத்தின் மூலம் வாரந்தோறும் சாலையோர மக்களின் பசியை தீர்த்து வருகிறது. உலக பசித்தவர்கள் தினத்தை முன்னிட்டு அதிக அளவில் மக்களுக்கு உதவும் பொருட்டு வாகனம் மூலம் உணவு வழங்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, என்றார் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால்.
கல்லூரி மாணவர்கள், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு விநியோகிப்பதில் உதவி புரிந்தனர்.