தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது.
தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘ மர்மர்’ படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய படத்தின் புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி,
“அனைவருக்கும் வணக்கம். எங்கள் படத்தை பார்த்து, ரசித்து பிளாக்பஸ்டர் ஆக மாற்றியுள்ளீர்கள். நீங்கள் இல்லாமல் எங்களால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. புரொடக்ஷன் மற்றும் இயக்குநர் குழுவினருக்கு நன்றி. குறிப்பாக இந்தப் படத்தின் இயக்குநர் தனக்கு துணை இயக்குநராக பணியமர்த்தாமல் படம் முழுக்க தனியாகவே பணியாற்றினார். அதுவும் காட்டுப் பகுதிகளில் பேய் படத்தை எடுத்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள். இது மிகவும் பெருமையாக இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் நன்றி. சில காட்சிகளில் தலை மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்டு இருக்கும். அத்தகைய காட்சிகளை படமாக்கும் போது மணிக்கணக்கில் அவர்கள் உள்ளே மறைந்திருக்க வேண்டியிருந்தது. மேலும், இந்தப் படத்திற்காக தங்கள் முழு முயற்சியை கொடுத்த அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.கே. பிக்சர்ஸ்-இன் பிரபாகரன் பேசும் போது,
“பத்திரிகை, ஊடகத்துறையை சார்ந்த அனைவருக்கும் நன்றி. மர்மர் திரைப்படத்தை கடைகோடியெங்கும் கொண்டு சேர்த்த தமிழக மக்களுக்கு வணக்கங்கள் மற்றும் மனமார்ந்த நன்றி. ஹேம்நாத் சார் இந்தப் படத்தை எடுத்து முடித்து, இன்று இந்தப் படம் தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 400 திரைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் கடின உழைப்பின் மறு உருவம். எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் இவர். இந்த இளம் வயதில் எந்த மாதிரி படம் எடுத்தால் வெற்றி பெறுமோ அதை யோசனை செய்து அப்படியே எடுத்து கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளராக இந்தப் படத்தால் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தை விநியோகம் செய்ய முன்வந்த குகன் சாருக்கு நன்றி. நான் அவரிடம் சகோதரராகவே பழகினேன். எல்லோரும் கடின உழைப்பை கொடுத்தார்கள். அனைவரின் பெயரை விட அவர்களது கதாபாத்திரத்தின் பெயர் தான் நினைவில் உள்ளது. படத்தின் கதையை கேட்டதில் இருந்தே அப்படித் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு உண்மைக்கு நிகராக இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேசன் மிகவும் அருமையாக பணியாற்றி இருக்கிறார். ஒலி வடிவமைப்பாளர் கெவின் இந்தப் படத்தின் இயக்குநருடன் இரவு பகலாக உழைத்தார். படத்தொகுப்பாளர் ரோஹித் சிறப்பாக பணியாற்றினார். உங்கள் அனைவருக்கும் நன்றியை தவிர வேறு என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ரிஷி, இந்தப் படத்தின் மூலம் அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. இதைத் தாண்டி எனது எஸ்.பி.கே. குழுவினர் கடைசி நான்கு, ஐந்து நாட்கள் உறங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு சென்றனர். மேலும், என் நிறுவனம் தொடங்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை என் குழுவினர் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒருமுறை கூட பணியாற்றியதே இல்லை. ஆனால், இந்தப் படத்திற்காக ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றினர். உலகெங்கிலும் பணயாற்றி வரும் எஸ்.பி.கே. குழுவினர் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அந்தளவுக்கு பணியாற்றி இருக்கிறீர்கள்.
எங்களுக்காக உண்மையாக முதன் முதலில் டுவீட் செய்த எஸ்.ஆர்.பி. சாருக்கு நன்றி, “பாசிடிவ் திங்ஸ் ஆர் ஹேப்பினிங் ஃபிரம் தி மர்மர் மூவி,” என்று டுவீட் செய்த ஆர்யா சாருக்கு நன்றி. கடந்த ஆண்டுகளில் முதல் முறை இயக்குநர், முதல் முறை தயாரிப்பாளர் மற்றும் இதர குழுவினர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆக மாறியதில்லை. இது அமைந்து இதனை வெற்றிப் பெற செய்த இயக்குநர் ஹேம்நாத் சாருக்கு நன்றி. நான் இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளுக்கு சென்று, கடின உழைப்பாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இயக்குநர் ஹேம்நாத் செய்யும் பணி மற்றும் அவரது உழைப்பு மிகவும் அபாரமாக இருந்தது. அவருக்கு மீண்டும் நன்றி. தற்போது மர்மர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகி இருப்பதாக படத்தின் விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். ஊடகத்துறையினருக்கு மீண்டும் நன்றி. இளசாக இருந்தாலும், புதுசாக இருந்தாலும் கொஞ்சம் சலசலப்பை உண்டாக்கி, கசக்கி தான் அதில் இருந்து வந்து தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு இந்தப் படம் தான் உதாரணம். அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.
மர்மர் திரைப்படத்தின் விநியோகஸ்தர் குகன் கூறும் போது,
“பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை பார்க்க மேடைகளும் இல்லை, சினிமாத்துறை பார்க்காத கலைஞர்களும் இல்லை. அப்படி வந்த மர்மர் குழுவினரை நேற்று பிறந்த குழந்தையாகத் தான் நான் பார்க்கிறேன். இந்த மேடையை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன். ஏன் என்று நான் உங்களுக்கு சொல்கிறன். நூற்றாண்டுகளை கடந்த சினிமாத் துறையில் மர்மர் குழு புதிதாக வந்த குழந்தை தான். இதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த உங்களின் மனமார்ந்த ஆதரவை தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றீர்கள். இதற்கு உங்கள் அனைவருக்கும் கோடானக் கோடி நன்றி. திரைப்படத்தை உருவாக்கினர். இந்தப் படக்குழு மிகவும் சிறியது. இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷி, யுவிகா, சுகன்யா மற்றும் தேவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது இவர்கள் யாரும் உங்களை சந்திக்கவில்லை. அதுவே புதுமையாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக நடந்த படத்தின் விளம்பர பணிகள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்தின் தோற்றம், கதைக் கரு என எல்லாமே புதிதாக இருந்தது. தமிழ் திரையுலகில் இது பெரிய வரவேற்பு. உங்களின் கைத்தட்டல் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் படத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு, படத்தை கொண்டு வந்த சேர்த்ததில் எஸ்.பி.கே. புரொடக்ஷன்ஸ் பெரிய விஷயம். அதற்கு தயாரிப்பாளர் பிரபாகரன் சாருக்கு மிகப்பெரிய நன்றி. அவர் மட்டுமின்றி அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரும் ஒன்றிணைந்து இந்த படத்திற்காக உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த குழுவினரின் பலம் தான் இந்தப் படத்தின் முழுமையான வெற்றியாக மாறியிருக்கிறது என நினைக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு வாய்ப்பளித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு அண்ணா, எஸ்.ஆர். பிரபு, அரவிந்த், கதிர், பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தங்க பிரபாகரன் சார் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு முதலில் 100 திரைகள் ஒதுக்கப்பட்டன, அதன்பிறகு ஒவ்வொரு நாளும் திரைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. எங்கள் குழுவை சேர்ந்த பிரதீப், பிருத்வி, கணேஷ், பிரவீன், கல்யாண சுந்தரம் அண்ணா, தியாகராஜன் அண்ணா, முனியப்பன், கார்த்தி இவர்கள் அனைவருக்கும் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் ஆதரவு மட்டுமின்றி எங்களுக்கு திரையரங்கு சார்பில் மல்டிபிலெக்ஸ் மட்டுமின்றி ஒற்றை திரை கொண்ட திரையரங்குகளிலும் எங்களுக்கு பெரிய வரவேற்பு மற்றும் ஆதரவு கொடுத்தனர். எங்களுக்கு படு ரமேஷ் சார், எஸ் பிக்சர்ஸ் சீனு சார், தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அண்ணா, மன்னார் சார், அழகர் அண்ணா, பிரதாப் சார் ஆகியோர் மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க இவர்கள் அனைவரும் முக்கிய காரணம். எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடை முக்கியமானது என்பதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறேன். இதனை வெற்றி மேடையில் தான் சொல்ல முடியும். தற்போது புதிய இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் வருகிறார்கள் எனில், தமிழ்நாட்டில் தமிழ் படங்களின் வெற்றி சதவீதம் 5 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கிறது. வருடத்திற்கு 250 திரைப்படங்கள் வரும் படசத்தில் அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. இதில் மாதம் ஒரு படம் தான் வெற்றி பெறுகிறது. ஒரு படம் கணக்கெடுக்கும் போது 4 முதல் 6 சதவீத படங்கள் தான் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியாக இருக்கும். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று பார்த்தால் வெறும் 4 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கும். ஏன் இந்த சூழல் என்று கேட்டால், தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திரைப்படங்களை பார்த்தால் அந்தப் படங்கள் வசூல் வேட்டையை நடத்தும். அத்தகைய வெற்றியைத் தான் புஷ்பா 2 செய்தது. இவர்களில் எத்தனை பேர் பார்த்தால் படம் வெற்றி பெற்றதாக கூற முடியும் என்று கேட்டால், பொதுவாக பத்து சதவீதம் பேர் அதாவது 80 லட்சம் பேர் படங்களை பார்க்க வேண்டும். இதை கணக்கிட்டால் 160 கோடி ரூபாயாக இருக்கும். அந்த வகையில், ஒரு திரைப்படம் ரூ. 160 கோடி வசூல் செய்தால் அது வெற்றி பெற்ற திரைப்படமாக இருக்கும். இதில் ஒரு சதவீதம் கிடைத்தால் வெற்றியா என்று கேட்டால் அது அந்த தயாரிப்பாளருக்குத் தான் தெரியும். அவர் எவ்வளவு பட்ஜெட்டில் படத்தை எடுத்திருக்கிறார் என்பதை வைத்து தான் வெற்றியை தீர்மானிக்க முடியும். வெற்றி சதவீதம் 4 முதல் 6 சதவீதமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று சந்தியுங்கள். யோசனை செய்து கொண்டு வாருங்கள். என்ன செய்தால் வெற்றி பெற முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். இந்த கணக்கு ஏற்கனவே திரைத்துறையில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு நன்றாகவே தெரியும். புதிய தயாரிப்பாளர்கள் வரும் போது, வெற்றி விகிதத்தை இப்படி கணக்கிட்டு பார்க்க முடியும். அவ்வாறு திரைத்துறைக்கு வரும் புதிய தயாரிப்பாளர்களுக்கு இந்த தகவல் பயன்படும் என்று தான் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன். இரண்டாவது முக்கியமான விஷயம், மர்மர் போன்ற திரைப்படங்கள் வெளியாகும் போது அதே வாரத்தில் குறைந்தபட்சம் பத்து படங்கள் வெளியாகின்றன. அப்படி பார்த்தால் இந்தப் படத்துடன் வெளியாகும் பத்து படங்கள் மட்டுமே இதற்கு போட்டி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தப் படம் வெளியீட்டுக்கு முன் ரிலீசான மற்றொரு பத்து திரைப்படங்கள் அதற்கு முன் வெளியான பத்து திரைப்படங்கள் என மொத்தம் முப்பது திரைப்படங்களுடன் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுதவிர ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களை சேர்க்கும் போது, ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒரு திரைப்படத்திற்கு சுமாராக 50 படங்கள் வரை போட்டியை ஏற்படுத்துகின்றன. இதை எப்படி பார்க்க வேண்டும் என்றால், ஒவ்வொரு திரைப்படத்தையும் அந்தந்த குழுவினர் முழு முயற்சியுடன் கடின உழைப்பை கொடுத்து தான் உருவாக்குகின்றனர். இப்படி இருந்தும் எது வெற்றியை தீர்மானிக்கும்? இடையில் ஒரு குழப்பம் வந்தது, படத்தை விளம்பரப்படுத்தினால் வெற்றி பெற்றுவிடும் என்கிறார்கள். ரிலீசாகும் 250 படங்களும் விளம்பரப்படுத்தப்பட்ட பிறகு தான் திரைக்கு வருகின்றன. விளம்பரப்படுத்தாமல் படம் ரிலீசாவது மிகவும் அரிதான ஒன்று தான்.
படத்தை விளம்பரப்படுத்தி ரிலீசாகும் முதல் ஷோவுக்கு மட்டும் தான் ரசிகர்களை வரவைக்க முடியும். அதன்பிறகு அப்படி செய்ய முடியாது. முதல் ஷோவை கடந்து ரசிகர்கள் கூட்டம் வருவதற்கு அந்தப் படம் அவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். படம் நன்றாக இருந்தால் மட்டும் தான் அதைப் பற்றிய தகவல் அதிகம் பேருக்கு சென்றடைந்து படம் வெற்றிகரமானதாக மாறும். இதைத் தாண்டி நடக்கும் மற்றொரு விஷயம் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அதில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என பலத்தரப்பில் இருந்தும் சண்டைகள் நிறைந்திருக்கும். அதைக் கடந்து தான் வரவேண்டும். இந்த குழுவும் ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்தது. அப்போது நான் அவர்களிடம் சொன்னது இதைத் தான் படத்திற்கான ரேட்டிங்கை பார்த்து கவலை கொள்ள வேண்டாம். இதற்கு ஒரு உதாரணம் உள்ளது.
பரீட்சையில் 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அனைவரும் படிப்பார்கள், ஆனால் 100 மதிப்பெண் எடுத்துவர்களை முதன்மையாகவே பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்து 90 மதிப்பெண், 8 மதிப்பெண் மற்றும் 70 மதிப்பெண் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் மற்றும் அதற்கான விளக்கங்களும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் சினிமாவிலும் ஒவ்வொரு படத்திற்கும் 6, 7 என ரேட்டிங் கொடுக்கிறோம். அந்த படத்தை பெரும்பாலும் தோல்வி படமாகவே பார்க்கின்றார்கள். படத்திற்கு ரேட்டிங் கொடுக்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்பதே என் கருத்து. இதுபற்றி சங்கத்திலும் நான் முறையிட்டுள்ளேன். அது எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இதுபற்றிய பணிகள் நடைபெற்று வருகின்றன. படங்களுக்கு 1 முதல் 10 வரையிலான ரேட்டிங் கொடுக்கிறார்கள். 10-ஐ கடந்து ரேட்டிங் கிடையாது, பெரும்பாலும் 1, 2 என்றும் கொடுக்கின்றனர். இவை சினிமாவை அழிவு பாதைக்குத் தான் எடுத்துச் செல்லும். இது வேண்டாம் என்பதை தான் தாழ்மையாக தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி தான் போட்டி இருக்கிறது.
இங்கு எதிலும் துவண்டு போகக்கூடாது. உங்கள் பிராடக்ட் மீது நம்பிக்கை செலுத்துங்கள். உங்கள் திரைப்படத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நிச்சயம் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு உதவ எங்களை போல் பல நல்ல விநியோகஸ்தர்கள் இருக்கிறோம். சரியான நேரத்தில் படத்தை கொண்டுசேர்க்க முடியும். அந்த நம்பிக்கையில் நீங்களும் பயணம் செய்யுங்கள், நாங்களும் பயணம் செய்கிறோம். தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். வாய்ப்புக்கு நன்றி, வணக்கம்,” என்று தெரிவித்தார்.
படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசும் போது,
“அனைவருக்கும் வணக்கம். மீண்டும் சந்திக்கிறோம். நீங்களும் தெம்புடன் காணப்படுகின்றீர்கள், நாங்களும் தெம்புடன் இருக்கிறோம். முதலில் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு என் மீதும், மற்றவர்கள் மீதும் அதிக நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கையை நீங்களும் வைத்தீர்கள். இதனால் தான் இந்தப் படம் இப்படி வந்துள்ளது. என் மீதும், மற்ற அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தை தொடங்கி தற்போது இது வெற்றிப் படமாகவே மாறியிருக்கிறது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என உங்கள் தரப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்தப் படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக நீங்கள் தான் இருக்கின்றீர்கள். அதற்கு மிகப் பெரிய நன்றி. தயாரிப்பு நிர்வாகி நாகராஜ் சாருக்கு மிகப் பெரிய நன்றி. படத்தில் நடித்த நடிகர்களுக்கு நன்றி. எல்லாரும் நடிகர்கள் எங்கே, என்ன பிரச்சனை என்று கேட்டீர்கள். எந்த பிரச்சனையும் இல்லை, அனைவரும் இங்கு தான் இருக்கின்றார்கள். ரிஷிக்கு மிக்க நன்றி மும்பையில் இருந்து வந்திருக்கின்றீர்கள். எனக்கு தெரிந்து எம்.எஸ் தோனிக்கு பிறகு எல்லோரும் விரும்பும் வட இந்தியராக இருப்பீர்கள் என நினைக்கிறேன். ரிஷி கேங் என்ற ஹேஷ்டேக் உருவாகி இருக்கிறது. திரையரங்கிலும் அனைவரும் கத்துகிறார்கள். தேவராஜ் சார் மிக்க நன்றி. நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன், எவ்வளவு டேக் கேட்டேன் என்று எனக்குத் தான் தெரியும். எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கும், எனக்கும் தான் தெரியும். இதைத் தொடர்ந்து உங்கள் அனைவருக்கும் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஃபவுண்ட் ஃபூடேஜ் என்பதால் இந்தப் படத்தில் ஃபோக்கஸ் புல்லர், துணை ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர் என தனி குழு ஒன்று எப்போதும் தயாராக இருக்கும். இந்தப் படத்தில் நடிகர்களுக்கு மிகப் பெரிய சவால் அவர்கள் கேமராவை பார்த்து நடிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். மற்ற படங்களில் கேமராவை பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இந்தப் படம் வித்தியாசமானது. பலர் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கும் போது கேமராவை பார்த்து திட்டு வாங்கியுள்ளார்கள், மன்னித்து விடுங்கள். ஒளிப்பதிவாளர் ஜேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய ரீடேக், முதுகுவலி அதன்பிறகு சிகிச்சை என எல்லாம் முடிந்து தற்போது இங்கு வந்திருக்கிறார். ஒரு இயக்குநரின் ஒளிப்பதிவாளர் இவர். எத்தனை முறை ரீடேக் என்றாலும் சற்றும் தளர்வின்றி எடுத்துக் கொடுத்தார், மிக்க நன்றி. படத்தொகுப்பாளர் ரோஹித் தற்போது இணை இயக்குநராகவே மாறிவிட்டார். நான் எங்கு சென்றாலும் அவர் தான் என்னை அழைத்து செல்கிறார். மிக்க நன்றி ரோஹித். உங்களுக்கு அதிக படங்கள் கிடைக்கும். நாமும் சேர்ந்து பணியாற்றுவோம். எங்கள் குழுவில் கடைசியாக இணைந்தவர் கெவின் ஃபிரடெரிக், ஆனால் இன்று என்னைத் தாண்டி அவரை பற்றி தான் முதலில் பேசுகிறார்கள். மிக்க நன்றி கெவின். உங்களின் கடின உழைப்பு அபாரமானது. நான் எப்போது அழைத்தாலும் நீங்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். நாம் அதிக சோதனைகளை செய்தோம். அதற்கான அங்கீகாரத்தை நாம் திரையரங்கிற்கு சென்று பார்த்தோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குகன் சாருக்கு நன்றி. கிட்டத்தட்ட குடும்பம் போன்றே தான் இருக்கிறது. உங்களின் பணி எங்களுக்கு உதவியாக இருக்கிறது. நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை, நீங்களும் எங்களை அப்படி பார்த்துக் கொண்டீர்கள். நாங்களும் உங்களை அப்படி பார்த்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி சார்.
படத்தின் புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி, படத்தில் எல்லா பணிகளிலும் ஈடுபட்டார். இந்தப் படத்தை பொருத்துவரை எல்லாமே பெயர் மட்டும் தான், ஆனால் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்தனர். துணை இயக்குநர்கள் இல்லை என்றில்லை, அவர்கள் எல்லா பணிகளையும் செய்தனர். துணை இயக்குநர் ஹரிஷ் கீழே விழுந்து அடிப்பட்டது. மிக்க நன்றி ஹரிஷ். கண்டிப்பாக நிறைய கஷ்டப்படுத்தி இருப்பேன். மற்றொரு இணை இயக்குநர் இருந்தார்கள். லக்ஷமி அருண். அவர் தற்போது வேறொரு படத்தில் பணியாற்றி வருகிறார். அதனால் இங்கு வரவில்லை. மிக்க நன்றிகள் லக்ஷமி அருண். தயாரிப்பு நிர்வாகி அருணுக்கு நன்றி. செல்டனால் இன்று இங்கு வரமுடியவில்லை. அவருக்கும், அவரது உதவியாளர் குழுவிற்கும் மிக்க நன்றிகள். இணை ஒளிப்பதிவாளர் கேசவனுக்கு நன்றி. எஸ்.பி.கே. புரொடக்ஷன்ஸில் தயாரிப்பாளர் மட்டுமின்றி அவரது குழு மொத்தமாக எங்களுக்கு உதவியாக இருந்தனர். அவர்கள் கூட சாப்பிடாமல் எங்களுக்கு உணவளித்து, கடினமாக உழைத்தார்கள். மேக் மீடியாவுக்கும் மிக்க நன்றிகள். நாங்கள் கேட்ட அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள், அதற்கு மிக்க நன்றி.
ஊடகத்துறையை சேர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றி. எங்கள் படம் குறித்து இவ்வளவு அதிகமாக எழுதுவீர்கள் என்று நினைக்கவில்லை. பலரும், எங்கள் திரைப்படம் குறித்து நல்ல முறையில் எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி. நீங்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் பணி என்னைப் போல் மேலும் பலருக்கு ஊக்கமும், உற்சாகத்தையும் அளிக்கும். இதே குழுவுடன் அதிக மேடைகளில் உங்களை சந்திக்க விரும்புகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி. ஸ்ரீ வெங்கடேஷ் உங்களுக்கும் பெரிய நன்றி. உங்கள் சகோதரியின் திருமண வேலைகள் நடக்கும் போதிலும் நாங்கள் எப்போது தொடர்பு கொண்டாலும் எங்களுக்கான பணியும் நடந்து கொண்டே இருந்தது. மிக்க நன்றி ஸ்ரீ வெங்கடேஷ்,” என்று கூறினார்.