‘எக்ஸ்ட்ரீம்’ திரைப்பட விமர்சனம்

ரக்ஷிதா மகாலட்சுமி ,அபி நட்சத்திரா, ராஜ்குமார் நாகராஜ், ஆனந்த்நாக் , அமிர்தா ஹல்டேர், சிவம் தேவ், ராஜேஸ்வரி ராஜி, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜசேகர், ஜெயராஜ் ஜெயா, குட்டி கமலாத்மிகா, மாஸ்டர் கோகுல் ,தனசேகர், ஓட்டேரி சிவா, சந்திரமௌலி நடித்துள்ளனர்.
ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு டிஜே பாலா, எடிட்டர் ராம்கோபி, இசை ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்.கமலகுமாரி, ராஜ்குமார் என் தயாரித்துள்ளனர்.

கொலையும் கொலை சார்ந்த விசாரணையும் தான் கதை. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஒரு தூணின் கான்கிரீட் பலகைகளை அகற்றும் போது அந்த தூணுக்குள் ஒரு பெண் புதைக்கப்பட்டு கான்கிரீட் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது.
இந்தப் பெண் யார் என்று போலீஸ் விசாரணை தொடங்குகிறது .பலரையும் யூகிக்க வைத்து யாரும் எதிர்பாராத குற்றவாளியை மோப்பம் பிடித்துக் கண்டுபிடிப்பது தான் ‘எக்ஸ்டிரீம்’ படத்தின் கதை.

இப்படத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி சுருதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ராஜ்குமார் நாகராஜ் சத்தியசீலன் என்கிற பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவர்கள் இருவரும்தான் பிரதான விசாரணை அதிகாரிகளாக வருகிறார்கள்..காணாமல் போகும் பெண்ணாக அபி நட்சத்திரா நடித்துள்ளார்.

அபிநட்சத்திரா ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருக்கிறார்.அம்மா வீட்டு வேலை செய்கிறார் .அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது அபி அந்த இடத்திற்கு வேலைக்குச் சென்று வீட்டு வேலை செய்கிறார் .ஒரு நாள் அபி காணாமல் போகிறார்.எந்தத் துப்பும் தொடங்கவில்லை. போலீஸ் துருவித்துருவி விசாரணை செய்கிறது. ஆனந்தநாத், மற்றும் அந்த பிளாட்டில் இருக்கும் காவலர்கள், அந்த தெருவில் வசிக்கும் பொறுக்கி இளைஞர்கள், போதை மருந்து அடிமைகள், தாதா என்று பலரையும் தொடர்பு படுத்தி சந்தேகம் கொள்ள வைக்கின்றன காட்சிகள்.ஆனால் முடிவு எதிர்பாராத வகையில் இருக்கிறது.போலீஸ் விசாரணை ஒரு பக்கம் இருந்தாலும்  அமிர்தா ஹல்டேர் கட்டற்ற சுதந்திரம் கொண்ட பெண்ணாக வருகிறார். அவரை ஆனந்த நாக் காதலிக்கிறார்.காதலியின் சுதந்திரம் காதலனின் மனதைப் பாதிக்கிறது .எனவே அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது.காணாமல் போன அபி நட்சத்திராவுக்கும் இந்த காதலர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஒரு கிரைம் திரில்லர் கதையை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படத்தை ஓரளவு ரசிக்கும்படி எடுத்துள்ளார்கள்.

இதில் குடும்ப பாங்கான தோற்றத்தில் அபிநட்சத்திரா வந்து அனுதாபங்களை அள்ளுகிறார் .விசாரணை அதிகாரியாக வரும் ரட்சிதா,ராஜ்குமார் நாகராஜ் இருவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையை சரியாகச் செய்துள்ளனர்.படம் ஒரு வணிக நோக்கிலான படம் என்பதை ஈடு செய்யும் வகையில் படத்தில் நடித்திருக்கும் அம்ரிதா ஹல்டேர் உடைகளை தாராளம் காட்டிக் கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்.அந்த வகையில் அவரது பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.படத்தில் வரும் துணைப் பத்திரங்களும் அந்தந்த பாத்திரங்களாகவே தெரிகிறார்கள்.

அம்ரிதா தோன்றும் காட்சிகள் இளமை ரசம் சொட்டும் காட்சிகள். இளைஞர்களுக்கு பெரிய விருந்தாக அவர் கவர்ச்சி காட்டியுள்ளார்.தயாரிப்பாளரின் பணத்தைக் காப்பாற்றும் நோக்கில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில் இந்தப் படம் எடுத்துக் கொண்ட வணிக நோக்கிலான கிரைம் திரில்லர் கதையை அந்த பட்ஜெட்டுக்குள் வெற்றிகரமாக முடித்துள்ளார்கள் என்று கூறலாம். க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.